Monday, November 24, 2014

மீன் அவன்

கனவிருளோ , விட்டு  மெல்ல மெல்ல வேலகுது..
புது விடியல் , நிதம் புது பக்கமாவ மாறுது
ஏ புள்ள  பொஞ்சாதி , நான் கடலுக்குள்ள போவையிலே ,
பயந்தோடி , இப்போ நீ பழக்க பட்டுகிட்ட புள்ள ..!


கடலுக்குள்ள போவையில , கட்டுமரப்பாதையில
கட்டினவன் தாலியத்தான் , கையில் வெச்சு நிக்கும் புள்ள .!
கட்டினவ  கவலையெல்லாம் , கட்டுமரம் வீடு வர .
கடலே  கடவுளுன்னு, வேண்டிக்கிட்டு பொழப்ப பாக்குறோமே ..!

தேடி போகும் வாழ்க்கை இது , எல்லைகொண்ட தேடல் இது ,
எல்லை தாண்டி வல விரிச்சா ,சிக்குற மீன் அவன் தான்,
வரையறை இல் கட்டுப்பட்டு , நெறிமுறையா வலை விரிச்சும்.
விதிவகையில் வெறும் கய்யா பல முறைகள் திரும்பி வந்தோம்.

காத்தடி காலமுன்னா ,நாங்க காலொடஞ்சு போயிருவோம் ,
பேய்மழை  பொய்யாவத்தான், எல்லாரும் ஊர் கூடி வேண்டிருவோம் ..!
சுழக்கு காவுதந்து ,பதிலுக்கு மீனு தந்து ,
கடலோட போட்டியில வெற்றி தோல்வி மாற்றமுண்டு .
நடுக்கடல் பண்பாடு ,நாங்க மட்டும் தான் அறிஞ்சோம் .!
உசுர் கொடுத்து பசி தீக்கும் ,கடல் ஆதிகுடி நாங்க கண்டோம்,!

வலை மீனுக்கு நான் விரிக்கையிலே, கடல் எங்களுக்கு விரிகுதைய்யா ,
ஒரு பேரலையா மூழ்கடிச்சு , ஊர் ஓரம் ஓதிக்கிவிடும்
துப்பாக்கி எச்சில் பட்டு , கடல் தூர்வாரி எரிஞ்சுபுடும் ,
உசிர் விட்டு திரும்புறது மீனோ , இல்லை அவனோ,
ஒரு சீவன்ஏறப்புகுள்ள , ஒரு சீவன் பொழக்குதையா..!

இருளு வெலகுதைய்யாயாயா ,கடலு வெளுக்குதையா யா ..!
கண்ண தொறக்க சொல்லி ,பகலவரு வந்தாரயய்யயா ...!
நேரம் தவறாம ,  நெதம் பொழப்ப பாக்கச்சொல்லி ,
கடமை தவறாம ,நம்ம எழுப்ப வந்தாரய்யா ..!

Tuesday, October 28, 2014

விழிகள் பேசும் மொழியில் - எனை சாய்த்தாளே .!

விழிகள் பேசும் மொழியில் நானே
புது கவிதை ஆகின்றேன் .!
கவிதையில் பார்த்த பொய்கள் உன்னில்
தானே மெய்யாய் காண்கின்றேன் ..!

இரவும் , பகலும்.
என் நிழல் போல் வந்தாயே .
இமை , நொடி,கணம்
உயிராய் பயணிப்போம்

விழியும் , இமையும் .
இணை பார்வையை போல் ஆவோம் .
கடல், அலை, மணல் ,சுழல்,
கலந்தோர் உயிராவோம்

தோள் சாய்கிறேன் , நிழல் காய்கிறேன் ,
நாம் சேரவே , நிதம் விழிக்கிறேன்

கனவோ , நனவோ
இருக்கட்டும் , நாம் இணைவது நடக்கட்டும்

முகிலும் நிலமகளும்
மழைத்துளியால் இணைவது போல்

உன்னோடு பயணிக்க ,
தடமெல்லாம் பிழைசெய்து
நடப்பதுவும் அறியாமல்
உன்னுடனே நிற்பதுவோ .

நான் போகும் சாலைகள் ,
நாமாக தெரிகிறதே ,
பயின்றது உன்னுடன் தான் ,
என்பது தான் காரணமோ .

இருவிழிகளில் பேசிய ரகசிய கவிதைகள்
இதயத்துள் கசிந்ததுவோ ,
என் மனதினில் வருடிய அழகிய பனித்துளி
அடிவேரினை சேர்ந்ததுவோ

கைக்கோர்த்த நினைவெல்லாம் ,
சலனங்கள் அழியாதோ .

உன்னுடன் இருக்கையில் பெண்மையை மறக்கிறேன் ,
நிதம் நிதம் தவிக்கிறேன் .

வெயிலும் மழையும்
இணை வானவில் போலாவோம்
எனை உனை கரம் மனம்
ஒன்றினில் ஒன்றாவோம்

பிழை செய்கிறேன் , உனை ரசிக்கிறேன் ,
நட்பிலே துளி விஷம் கலக்கிறேன் .

மலரும் முள்ளும்
சார்ந்தே இருப்பது போலே ..!


விழிகள் பேசும் மொழியில் நானே
புது கவிதை ஆகின்றேன் .!
கவிதையில் பார்த்த பொய்கள் உன்னில்
தானே மெய்யாய் காண்கின்றேன் ..!

Monday, October 6, 2014

மின்வணிக மோகம் ..!

கிழமைக்கொன்றாய் வண்ணக்காலணி ,
உடன் ஜோடிக்கிளியாய் பதமானக் காலுறை ,
பாதவிரல் உரசும் மெல்லிய மெட்டி ,
கணுக்கால் அணைக்கும் வெள்ளிக்கொலுசு,
முழங்கால்வலிக்கு தென்னமரக்குடி எண்ணெய் ,
வீண்கொழுபடக்கும் மின்தொடைசுருக்கி ,
தீராப்பசி தீர்க்கும் வாச மிகு குறிஉறை,
சுழற்சி செலவாய் விடாய் அணையாடை ,
வண்துணி மேல் எட்டிப்பார்க்கும் ஒளிர்வு உள்ளாடை ,
கால்குழாய்களின் காவல், தோல் இடைவார் ,
உதரம் குறைய பல ஆயிரம் உண்ட கருவி,
காற்றினில் எப்போதும் மார் மறந்த துப்பட்டா,
தாய்ப்பால் மறக்கடிக்கும் போலி முலைப்புட்டி ,
விளம்பரங்களில் மட்டும் பெண்ணை மயக்கும் கமகம் ,
விரல்களின் முத்தங்களுடன் உறவாடும் கைப்பேசி ,
நினைவில் நில்லா வகை ஆயிரம் ஆரங்கள் ,
திரை நாயகன் போல் மயிர் மழிக்கும் சவரக்கத்தி ,
பயோரியா மறந்து பளபளக்க பற்பசை ,
வடிவங்கள் இவைதான் என வகுப்பெடுக்கும் காதணிகள் ,
கலர் பார்வை மறைக்கும் கருப்பு கண்ணாடி,
அமேசான் காட்டிலிருந்து அரிய வகை தைலம் ,
படித்து வேலைக்குப் போகும் தனக்கு அடங்கும் மணப்பெண் ,
லட்சங்களாய்  மேல்நாட்டினில் சம்பாதிக்கும் வயதாகா மணமகன் ,
குடும்பப்பாங்காய் விவாகரத்தான இரண்டாம்தாரங்களென,
உச்சி முதல் பாதம் வரை வீட்டிலியே விலைக்கு வாங்க ,
மின்வணிக மோகத்தினால் நாம் உழல்கின்றோமே ..!!

Monday, June 30, 2014

அவன் அவள் அது

இன்றைய நவநாகரிக குடும்பப்பெண்ணின் கழுத்தில் தொங்கும் மூன்று கயிறுகள்(headphones,id card tag,தாலி) தங்களில் யாரால் பெண்ணுக்கு பெருமை  என தற்புகழ்ச்சியுடன்  வெளிநாட்டில் வேலை  செய்யும் கணவனிடம் வாதிடுவதாய் கற்பனை​.

ஊரு செய்தி கேக்கலியோ ,
   ஊட்டு செய்தி பேசலியோ ,
உதட்டு சத்தம் உச்சு கொட்ட,
  கடல கடந்து போவலையோ.!

ஆத்தா வெச்ச மீன் கொழம்பும் ,
  கொடி அந்து  துணி விழுந்த சேதி ,
வாய் திறவா  காத்து வழி ,
  மேல் நாட்டுக்கு போவலியோ ..!

ராசா பாட்டும் லேசாக ,
 இராப்பகலா ஒலிக்கலியோ ,
ராத்தூக்கம் கெடுத்துப்புட்டு,
 உன் சீண்டலுக்கு சினுங்கலியோ ..!

மஞ்ச கயிறு அழுக்காகி மணமிழந்து  போனாலும் ,
 வேலை போயி கருப்பு கயிறு ஆணி மேல கெடந்தாலும் ,
உன் மனசு ஏலக மாமன் கிட்ட மணி கணக்கா நீ பேசயில
 கழுத்தனைச்சு காதோரம்  கலர் கலரா நான் இருப்பேன்  .! (காதொலிப்பான்/headphones)

குறை கழுத்தாய் தங்கமவ ,
  உள்ளுக்குள்ள ஒளிஞ்சுருக்க ,
சான் இல்ல மொழ நீளம்,
 ஊர்பேரோட தொங்குறேனே .!

நம் பெண் உரிமை  அடையாளம்னு,
  பேர் போட்டு பெரும சொல்ல ,
தனி மனித சுதந்திரம் நு ,
  தேசபிதா கனா பலிக்க ,
கள்ளிப்பால் செடியெல்லம்,
  கார்பரேட்டு தோட்டமாக ,
தாய்வீடும் புதுவீடும்  பெண்  பெருமை பேசுதையா .!

நூறாண்டு  பின் போயி ஒருத்தி ,பழம் பெருமை பேசயிலே ,
ஊதாரி போல் ஒருத்தி ஆட்டம் பாட்டம் போடயில ,
நான் மட்டும் பெண் இனம் உசந்துனிக்க வெக்கேனே ,
தலைநிமிந்து ஊருக்குள்ள செருக்கோட போறேனே .! (id card tag)

இரு மனசு இணையையிலே ,
  ஊர் சேர்ந்து வாழ்த்தையிலே ,
ஒத்தை கயிறு பெருமைய ,
  நீ கண்டு கொண்டிருப்ப.

ஊர் பேச்சு உனக்கு அவ சொன்னாலோ ,
 ஊர் போற்ற பெண் ஆனாலோ ,
உன் குறி என் மாரில் தாங்கி ,
 உன்னை மட்டும் நெஞ்சில் சுமக்கேனே ,

காசு விட்டெறிஞ்சா கலர்கலரா வாங்கிக்கலாம் ,
லட்சரூவாக்கு புதுசா பட்டம் கூட சேத்துக்கலாம் ,
அக்கவுறு அந்தா, இன்னொன்னு  புதுசா மாறுமைய்யா ,
இக்கவுறு அந்தா என் உசுரும் உடன் போகுமைய்யா .!!    (தாலி)


--