Monday, June 30, 2014

அவன் அவள் அது

இன்றைய நவநாகரிக குடும்பப்பெண்ணின் கழுத்தில் தொங்கும் மூன்று கயிறுகள்(headphones,id card tag,தாலி) தங்களில் யாரால் பெண்ணுக்கு பெருமை  என தற்புகழ்ச்சியுடன்  வெளிநாட்டில் வேலை  செய்யும் கணவனிடம் வாதிடுவதாய் கற்பனை​.

ஊரு செய்தி கேக்கலியோ ,
   ஊட்டு செய்தி பேசலியோ ,
உதட்டு சத்தம் உச்சு கொட்ட,
  கடல கடந்து போவலையோ.!

ஆத்தா வெச்ச மீன் கொழம்பும் ,
  கொடி அந்து  துணி விழுந்த சேதி ,
வாய் திறவா  காத்து வழி ,
  மேல் நாட்டுக்கு போவலியோ ..!

ராசா பாட்டும் லேசாக ,
 இராப்பகலா ஒலிக்கலியோ ,
ராத்தூக்கம் கெடுத்துப்புட்டு,
 உன் சீண்டலுக்கு சினுங்கலியோ ..!

மஞ்ச கயிறு அழுக்காகி மணமிழந்து  போனாலும் ,
 வேலை போயி கருப்பு கயிறு ஆணி மேல கெடந்தாலும் ,
உன் மனசு ஏலக மாமன் கிட்ட மணி கணக்கா நீ பேசயில
 கழுத்தனைச்சு காதோரம்  கலர் கலரா நான் இருப்பேன்  .! (காதொலிப்பான்/headphones)

குறை கழுத்தாய் தங்கமவ ,
  உள்ளுக்குள்ள ஒளிஞ்சுருக்க ,
சான் இல்ல மொழ நீளம்,
 ஊர்பேரோட தொங்குறேனே .!

நம் பெண் உரிமை  அடையாளம்னு,
  பேர் போட்டு பெரும சொல்ல ,
தனி மனித சுதந்திரம் நு ,
  தேசபிதா கனா பலிக்க ,
கள்ளிப்பால் செடியெல்லம்,
  கார்பரேட்டு தோட்டமாக ,
தாய்வீடும் புதுவீடும்  பெண்  பெருமை பேசுதையா .!

நூறாண்டு  பின் போயி ஒருத்தி ,பழம் பெருமை பேசயிலே ,
ஊதாரி போல் ஒருத்தி ஆட்டம் பாட்டம் போடயில ,
நான் மட்டும் பெண் இனம் உசந்துனிக்க வெக்கேனே ,
தலைநிமிந்து ஊருக்குள்ள செருக்கோட போறேனே .! (id card tag)

இரு மனசு இணையையிலே ,
  ஊர் சேர்ந்து வாழ்த்தையிலே ,
ஒத்தை கயிறு பெருமைய ,
  நீ கண்டு கொண்டிருப்ப.

ஊர் பேச்சு உனக்கு அவ சொன்னாலோ ,
 ஊர் போற்ற பெண் ஆனாலோ ,
உன் குறி என் மாரில் தாங்கி ,
 உன்னை மட்டும் நெஞ்சில் சுமக்கேனே ,

காசு விட்டெறிஞ்சா கலர்கலரா வாங்கிக்கலாம் ,
லட்சரூவாக்கு புதுசா பட்டம் கூட சேத்துக்கலாம் ,
அக்கவுறு அந்தா, இன்னொன்னு  புதுசா மாறுமைய்யா ,
இக்கவுறு அந்தா என் உசுரும் உடன் போகுமைய்யா .!!    (தாலி)


--