Friday, October 23, 2015

கொலுப்படிகள்

படிகள் .. கொலுப்படிகள் ..
ஒரு வித ஆச்சர்யமான கேள்வி  மனதினுள் .!
நாயகியர் முன்னுரிமைக்காய் வீற்றிருக்கும் கல்வியும் செல்வமும் வீரமுமுடைத்  தலைவியர் ,
மாம்பழ சண்டை மறந்தது போலும் கந்தனுக்கும் கணபதிக்கும் ,அருகருகில்;
தம்பதி சகிதமாய் புன்னகைத்தபடி பரந்தாமனும் , பிறைமுடியானும் , பிரமனும்;
திராவிட நிறத்தினில் ஆத்திகம் பேசும் காளிமாதேவியும்,கற்பக விநாயகனும்,
சமத்துவமாய்   அரவணைத்தபடி மாடு மேய்க்கும் கண்ணனும் , ஆடு மேய்க்கும் கர்த்தரும்,
எல்லாம் மாயை மனதினை பாரென சிரிக்கும் புத்தனும் ,
இத்துனை தெய்வங்களின் ஆசிகளோடு திருமணக் கூட்டமும்  ,
பீப்பீ டும் டும் முழங்க மணபந்தல் சீர்வரிசையும் ,
இச்சமயம் பார்த்து வணிகம் செழிக்கும் செட்டியார் குடும்பமும் ,
மண் மலைகளுக்கு அருகினில் சிறுவர் விரும்பும் விலங்கியல் பூங்காவும் ,
தேக்கப்பட்ட குட்டையில் நாளெல்லாம் ஊறியபடி நெகிழிப்பறவைகளும் .
ஒன்பது நாள் சுதந்திரம் மீதம் நாள் சிறைவாசம்,
அலங்கரிக்கபட்ட பினைக்கைதிகளோ இவர்கள் ,
ஏற்றத் தாழ்வுகளோ இவர்களுக்குள்ளும் ,
மேலும் கீழுமாய் அன்றி வரிசையாக இருந்திருக்கலாம் படிகள் , கொலுப்படிகள் ..!

Saturday, October 10, 2015

கோவில் இருக்கிறது

 கற்சிலைகளை மறைத்த வர்ணச்/மெழுகுச்சிலைகள் தான் இன்றைய கடவுள்களின் பிம்பம் .
எப்படி இருக்கும் நம் கோவில்கள் ? நாம் சிறிது பின் நோக்கியே செல்லவேண்டியுள்ளது . பண்டைய கோவில்கள்    (கி .பி .2000ஆம் ஆண்டுக்கு முன்னர்)  கம்பீரமான கோபுரம், பனை உயர மதில்கள்,பறந்து விரிந்த மாடவீதிகள், விசாலமான பிரகாரங்கள் , அமைதியான கருவறை இப்படி தான் இருக்கும் என்று ஒரு கற்பனை செய்தி படித்ததாய் நினைவு. அதிலே ஆத்மார்த்தமாய் கடவுளுடன் நாம், அழகான உள்ளுணர்வு , அறுசுவை பிரசாதம் இவை இருந்திருக்கும் . அப்படி ஒரு கோவிலுக்கு செல்லப்போகிறோம் என நினைத்து தான் நானும் என் சகாவும் அழகிய கிழக்கு கடற்கரை சாலையில் கண்ணணை சரணடைய சென்றோம்.பறந்து விரிந்த ஓர் ஏரியின் ஓரத்தில் பணக்குவியலில் கட்டப்பட்ட பளிங்கு மாளிகையை அடைந்தோம், வாயிலே  தெரியாத அளவு வாகணங்கள் குவிந்து கிடந்தன . மகிழுந்து அணிவரிசையால் வியப்பில் அண்ணலை, கண்ணனை  மறந்து பளபளக்கும் வண்டி ஜன்னலில் தங்களையே பார்த்து மயங்கி இருந்தனர் பலர் . வழி மாறிவிட்டோம் என்றே முடிவு செய்த பொழுது "ஆள் உயர தாடியுடன் சிலரும் , அம்மா அய்யா  தர்மம் போடுங்க என்ற குரலும் " கண்டிப்பாய் கோவில் அருகில் உள்ளது என  உறுதி செய்தது .