Sunday, September 15, 2019

தாத்தாமாமா

நான் என்னுடைய வலைப்பூவில் 10ஆம் ஆண்டு நிறைவுக்கு ஏதேனும் சிறப்பாக எழுதலாம் என எண்ணி இருந்தேன் . அது ஒரு இரங்கல் பதிவாக இருக்கும் என சற்றும் நினைக்கவில்லை. இதோ என்னுடைய தாத்தா , நெ.2 கரியமாணிக்கம் தொடக்கப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் திரு. ராமானுஜ வாத்தியார் இன்று காலை 11.30 மணியளவில் இயற்கை எய்தினார். 

அம்மாவின் மாமாவும் , அப்பாவின் சித்தப்பாவும் ஆகையால் எனக்கு தாத்தாமாமா. பள்ளிவிடுமுறை நாட்களை எங்கள் கிராமத்தில் கழிக்கும் வழக்கம் எப்போதும் இருந்தது . எனக்கு விவரம் தெரியாத வயதிலிருந்தே இவர் வீட்டில் தான் அதிக நேரம் கழித்திருப்பேன். சற்றே விவரம் தெரிந்த வயதில் புத்தகங்களை எனக்கு அறிமுக படுத்தியவர் இவர் தான். நாளிதழ் வாசிப்பும் , புத்தக வாசிப்பும் தன் கடைசி நாள் வரை கண்டிப்பாக செய்தவர் .

அக்ராஹாரத்துக்கு பொதுவாக  பவனத்தின் திண்ணையில் இரண்டு நாளிதழ்கள் எப்போதும் கிடைக்கும். முக்கிய பிரதியின் பதினாறு பக்கமும் , இணைப்பு பிரதியின் ஆறு பக்கமும் கிழமைக்கொரு இணைப்பாக வரும் புத்தகத்தின் அட்டைப்படம் முதல் கடைசி பக்கம் வரை விடாமல் படித்து விடுவார்.

எங்கள் கிராமத்திலிருந்து 3கிலோமீட்டர் அருகிலிருக்கும் சிறுகாம்புர் அரசு கிளை  நூலகத்திருந்து மிதிவண்டியில் சென்று எடுத்து வருவார். ஒரே நாளில் இரண்டு புத்தகங்களை வாசிப்பார் ஆனால் இரண்டிலும்  கண்டிப்பாக நாற்பது பக்கங்களுக்கு மேலாக வாசிக்க மாட்டார். பக்க அறிகுறிக்கு, தினசரி தேதித்தாழை எட்டாக மடித்து வைத்துவிடுவார். சிலநேரம் நான் வீம்புக்கு வேகமாக ஒரே நாளில் புத்தகத்தை வாசித்து முடித்து விட்டால் , தான் விலைகொடுத்து வாங்கிவைத்திருக்கும் ஏதேனும் ஒரு நாவலை உள்ளிருந்து எடுத்துக் கொடுப்பார். இவரின்றி என்னுள் ஒரு சதவிகிதம் கூட புத்தக வாசிப்பை யாராலும் நுழைத்திருக்க இயலாது. தேசங்கள் கடந்தும் என்னால் புத்தகங்களை பிரியமுடியவில்லை , இவரின் இந்த விதை வ்ருக்ஷமாக என்னுள் நிற்கிறது. இனி நான் படிக்கும் ஒவ்வொரு புத்தகமும் உங்களை கண்டிப்பாக நினைவுறுத்தும்.

தூர்தர்ஷன் ஆரம்பித்து, இப்போது வரும் எல்லா செய்தி நிகழ்ச்சியும் கண்டிப்பாக பார்த்துவிடுவார். செவிகளில் செயல்பாடு குறைந்தபோதும் , செய்தி நிகழ்ச்சியை தொலைக்காட்சியை கட்டிப்பிடித்து காதில் திணித்துக்கொள்வார் 

என்  தாத்தா இல்லாத குறை என்னுள் உங்களால் தான் போக்கப்பட்டது. உங்களின் பொறுமையும், நிதானமும் , தொலைநோக்குப் பார்வையும் நான் நினைத்து நினைத்து வியந்ததுண்டு. அன்று நீங்கள் சில நூறுகள் கடனாக கொடுத்திராவிட்டால் , இன்று நான் எங்கு கடல் கடந்திருக்கமுடியும். அன்பும் , கல்வியும் , அறிவும் , பாசமாக உங்களிடம் பெற்றுள்ளேன் . அத்தனையும் அண்ணனிடமும் அவன் குழந்தைளிடமும் எப்படியாவது திருப்பித்தருகிறேன்.

 நளனை உங்களுக்கு காட்டஇயலாத வருத்தம் என்னைவிட்டு என்றும் அகலாது

அன்புடன்
உங்கள் ஆனந்த் (சௌமி )



Saturday, May 18, 2019

தென்னைமரத் தீவினிலே, மே18ம் திங்கள்

மே மாதம் , தமிழகமெங்கும் சிறார்கள் கோடை விடுமுறை கொண்டாடிக்கொண்டிருந்தனர் . பெரும்பாலும் 90களில் பிறந்த தமிழ் சிறுவர்களுக்கு கல்லூரி காலம் வரை தமிழினம் தமிழ்நாட்டுக்கு வெளியில் இருப்பது தெரிந்திருக்காது. ஆம் அதே காலகட்டத்தில் பிறந்து வளர்ந்த ஒரு சராசரி தமிழ்ச் சிறுவன் எழுதுகிறேன். இந்தியா  பரதக்கண்டமாக எனக்கு அறிமுகமாக்கப்பட்டது. இந்திய எல்லைகள் வடக்கே பாகிஸ்தான் , கிழக்கே வங்கதேசம் , தெற்கே இலங்கை, இவ்வளவே ஐந்தாம் வகுப்பு வரை வரலாறு எனக்கு சொல்லிக்கொடுத்த அண்டை தேசங்கள்.


வருடாவருடம் ஏப்ரல் மாதங்களில் ராமநவமியை ஒட்டி நடக்கும் சுந்தரகாண்ட பாராயணம் தான் இன்னும் தெளிவாக இலங்கையை சுட்டிக்காட்டியது. லிஃப்கோ பதிப்பகத்தின் சுந்தரகாண்டம் (தமிழில்) பதிப்பு  அம்மா வாசிப்பார் . சமஸ்க்ரிதம்  தெரியாததால் தமிழில் கதைவடிவில் பாராயணம் செய்ததால் கதை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. இலங்கையின் முதல் வர்ணனை ஒரு மிகச்செழிப்பான நகரத்தை மனதுக்குள்  உருவக படுத்த உதவியது.அதில் வர்ணனை வரும் சர்க்கங்கள் அழகான தென் அண்டை நாட்டை அடையாளப்படுத்தியிருந்தன.

வர்ணனை இதோ ,"மஹாபலசாலியான ஹனுமான் ஒருவராலும் தாண்ட முடியாத  சமுத்திரத்தை தாண்டி திரிகூட மலையில் கட்டப்பட்ட லங்காபுரியை பார்க்கிறார்.  பசுமையை செழித்து வளரும் புள் செடிகளும் ,பரிமளமுள்ள அநேக மரங்களும் பெரும் பாறைகளும் நிறைந்த அந்த வனங்களை கடந்து , மலர்ந்த புஷ்பங்கள் நிறைந்த தாழை , கோங்கு , மலை மல்லிகை மரங்களையும் கடந்து ,அரும்புகளால் மறைக்கப்பட்ட கடம்பு , பாலை , மலையத்தி மரங்கள் தாண்டி , வெண்தாமரை, செங்கமலம் ,கருநெய்தல் மலர்களால் பிரகாசிக்கும் நீரோடைகள் , சாதாரண மக்கள் விளையாடும் நீரோடைகள் ,ஜலக்ரீடை செய்யும் மடுக்களும், அரசகுடும்பத்தினர் விளையாடும்  பழங்கள் நிறைந்த தோட்டங்களும் கடந்து லங்காபுரியை அடைகிறார் . தங்கமயமான உயர்ந்த மதில்களால் நகரம் சூழப்பட்டது . பல வித சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிகள் ஆங்காங்கே பறந்துகொண்டிருந்தது, தோரணங்கள் கண்ணை பறித்தன , அமராவதி பட்டினமோ என அனுமனை வியக்கவைத்தது அந்த இலங்கைமாநகரம்.

பின்னர் அதே ஆண்டு பள்ளியின் திருவள்ளுவர் தின விழாவின் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது.  திரு கே .பி  நீலமணியின் 'தென்னைமரத் தீவினிலே புத்தகம்' கொடுத்தார்கள்.  இரண்டாம் பதிப்பு , சாய்ந்த தென்னை மரம் நிற்கும்  ஒரு கடலோரத்தை கலர் படமாக கொண்ட முகப்பு அட்டையோடு இருந்த ஞாபகம். அந்த புத்தகத்தை ஒரு நாற்பது ஐம்பது முறையாவது படித்திருப்பேன் . சிறுவர்களுக்கான நாவல் . முதல்முறை பரிசாக கிடைத்த புத்தகம் என்பதால் அடிக்கடி படிப்பேன். இப்போது pdf கிடைத்து விட்டதால் புத்தகம் பீரோவுக்குள் பத்திரப்படுத்தப்பட்டுவிட்டது.

 இலங்கையின் நிகழ்கால வர்ணனை அங்கே தான் முதன் முதலில்  படிக்கக் கிடைத்தது.
அதில்  'கொழும்பு விமான நிலையத்துக்கு வெளியே படகு போன்ற வெளிநாட்டு கார்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. அவர்கள் எல்லோரும் பிரபல செல்வந்தர்களாக இருந்தனர்.அவர்களது மனைவிகள்   விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் அணிந்து , தங்க வைர நகைகளோடு ஜொலித்தனர்.  ஆஹா எத்தனை செல்வாக்கோடு இலங்கையில் தமிழர்கள் இருந்தனர் என்ற மகிழ்ச்சி உண்டானது எனக்கு. அடுத்த நான்கு பக்கங்களில் நான் கேள்வி முதலில் கேள்விப்பட்ட அந்த தமிழ் சொல் வந்தது . ஆனால் பொருள் புரியாமல் கடந்து சென்றுவிட்டேன் 
.அந்த வரிகள்' அருணகிரிக்கு தன் தந்தையின் நினைவு வந்தது , இரவு உணவு முடித்து கயிற்றுக்கட்டிலில் அவன்  தந்தையோடு அமர்ந்திருப்பான். அப்போதெல்லாம் அவன் தந்தை அவனை அணைத்தபடி எதிர்கால 'ஈழத்தை' பற்றி பேசுவார் .இலங்கையின் தமிழர் நிலை பற்றி பேசுவார் . ஒருவன் நாட்டுக்காக உழைக்க முன்வந்து விட்டால் சொந்த சுகதுக்கங்களை பார்க்கமுடியாது.உங்களின் உணவுக்காக உழைக்கிறேன் . மீதி நேரமெல்லாம் ஈழத்தமிழர் நிலை உயர உழைக்கிறேன். அப்போதெல்லாம் நான் ஈழத்தமிழர் என்றால் கஷ்டப்படும் ஏழை இலங்கைத்  தமிழர்கள்  எனும் அனுமானத்துடன் கதையாக கடந்துவிட்டேன்.

கபாலி திரைப்படம் வந்த போது மலேசியாவின் வளர்ச்சிக்கு தமிழர்கள் உதவியதை பற்றிய பல பதிவுகள் வந்தன. நினைவுகள் பின்னோக்கி இந்த புத்தகத்தை வாசிக்க சென்றேன்.
பதினெட்டாம்  பக்கம் படித்த வரிகள் ,'இலங்கையின் காட்டையும் மேட்டையும் திருத்தி செல்வம் கொழிக்கும் பூமியாக தேயிலை காடாக மாற்றியது தமிழனின் பட்டுக் கரங்கள் தான்.தமிழர்கள் சிந்திய ரத்தமும் ,வியர்வையும் ,கண்ணீரும் வீண் போகக்கூடாது.

இலங்கை இன்றிருக்கும் ரணகள சூழலில், இனவெறித் தாக்குதல்கள் அத்துமீறி நடக்கும் அந்த குட்டித்தீவின் வரலாற்றுப் பின்னணியை அறிவது, இலங்கைத் தமிழர்களுக்காக மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தும் ஜனநாயக உணர்வுகொண்ட ஒவ்வொருவரின் கடமையாகிறது.

மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு இந்தியாவின் வரலாற்றைக் கூறுவது எப்படி உண்மைக்குப் புறம்பாக இருக்குமோ, அதுபோலத்தான் சிங்களவரின் இதிகாசமான மகா வம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு இலங்கை வரலாற்றை எழுதுவது என்பது!

இலங்கைத்தீவின் தென், வட பகுதி தாழ்ந்தும், மத்தியப்பகுதி எட்டாயிரம் அடி வரையில் உயர்ந்த மலைகளைக் கொண்டும் அமைந்திருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமுள்ள தூரம், உறுதிமிக்க மன இயல்பு கொண்டவர்களால் நீந்தியும், நடந்தும் கடக்கக் கூடியதாக இருக்கிறது. தற்போது சிங்களமொழி பேசும் புத்தர்கள், கிறிஸ்தவர்கள், பெரும்பான்மையாகவும், தமிழ்மொழி பேசும் சைவ இந்துக்கள், முஸ்ஸிம்கள், கிறிஸ்தவர்கள் முதலியோர் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். மொத்தத்தில் இருவேறு கலாசார மரபுகொண்ட இனங்களாகச் சிங்கள இனமும், தமிழ் இனமும் இருக்கிறது. பெரும்பான்மை இனம் என்கிற காரணத்தினால் நாட்டை ஆளும் பொறுப்பை சிங்களவர் எடுத்துக் கொண்டனர்

ஆங்கிலேயரின் மிகப் பெரிய காலனியாக சென்னை மாகாணம் இருந்தமையால், ஆரம்ப காலத்தில் இலங்கையின் மூன்று பகுதிகளையும் சென்னையோடு இணைத்தே ஆட்சி புரிந்து வந்தனர்.1831 பின்னர், நூற்றாண்டு கணக்கில் மூன்று பகுதிகளாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்ட இலங்கை -ஆங்கிலேயர் ஆட்சியில் நேர்மையாக இருந்த ஒரு சில ஆங்கிலேயராலேயே ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், வலிந்து திணிக்கப்பட்ட ஒரு செயலாக, நிர்பந்தமாக ஒரே இலங்கை என்ற "ஐக்கிய இலங்கை' உருவாக்கப்பட்டது.

போர்த்துக்கீசியரின் வருகையால் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவுகள் இலங்கையில் தலையெடுத்தது. அடுத்து அவர்களின் மொழியும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் திணிக்கப்பட்டன. இவர்களின் 150 ஆண்டு ஆட்சிக் காலத்தில்தான் நிலங்களைப் பதிவு செய்யும் முறை அமலாகிறது. ஆங்கிலேயர் காலத்தில் பைபிள் சிங்களத்திலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. கிறிஸ்தவம் வேகமாக வேரூன்றி வருவது கண்டு கொதித்த ஆறுமுகநாவலர் இந்துமதத்தைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் சைவசமய நூல்களை வெளியிட முனைந்தார். ""கிறிஸ்தவ மதமும் இந்துமதமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் சேவையில் ஈடுபட மதகுருமாரான அநகாரீக தர்மபாலா புத்த மதத்தை வளர்க்க இயக்கம் நடத்தினார். அதற்கெனச் "சிங்கள பெüத்தயா' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தினார். முஸ்லிம்களின் கடைகளைப் பகிஷ்கரிக்கும்படி தனது பத்திரிகைகளிலும், வெளியீடுகளிலும் அவர் எழுதினார்.

வெளிநாட்டவர்களால்  இலங்கையின் அன்றாட மக்களின் உணவுக்கு மூலாதாரமான அரிசி, பருப்பு முதலியவைகளை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யுமளவு நெல் உற்பத்தி குறைந்தது. பணப்பயிர்களான தேயிலை, காபி, ரப்பர் முதலியவற்றை விளைவிக்கும் வகையில் இவர்களது செயல் இருந்தது. யாழ்ப்பாணத் தமிழர்கள் இத்திட்டத்தில் பாதிப்பு எதையும் அடையவில்லை. காரணம், அந்தப் பகுதியில் மலைகளோ, காடுகளோ இல்லை. அப்பகுதி அனைத்துமே பாசன வசதி கொண்ட நிலங்கள் ஆகும். 1870 முதல் , லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய தமிழர்கள் தோட்டங்களில் குடியமர்த்தப்படுகின்றனர்.

இலங்கைத் தமிழர்களை ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். இவர்களின் சமூக வாழ்க்கை நிலைகளைக் கொண்டு பிரிக்கும்போது~

வடக்குப் பகுதி யாழ்ப்பாணத் தமிழர், கிழக்குப் பகுதித் தமிழர், ஈழத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம் தமிழர் என்றும்

தொழில் அடிப்படையில் 1. விவசாயிகள், 2. மீனவர் 3. தோட்டத் தொழிலாளர், 4. அரசு அலுவலர், 5. தொழில்துறை வல்லுநர், 6.வணிக முதலாளிகள் என்றும் பிரிக்கலாம்.

1964ன்  போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 9,75,000 பேர் இலங்கையில் நாடற்ற தமிழர்கள் இருந்தார்கள். சிரிமாவோ~சாஸ்திரி ஒப்பந்தப்படி 6,00,000 பேரை இந்தியாவுக்கு திரும்ப அழைத்துக் கொள்வதற்காக கையெழுத்தானது. சிங்கள மொழியை ஆட்சி மொழி ஆக்கியும், புத்த மதத்திற்கு விசேஷ அந்தஸ்து அளித்தும் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. (1972). திருகோணமலையில் 1972-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தமிழர்கள் அனைவரும் ஒரு மாநாட்டினை நடத்தி தமிழர் கூட்டணியை அன்று உருவாக்கினர். 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாடு கோஷத்தை முன்வைத்துத் தேர்தலில் பங்கேற்றது. தமிழ் ஈழம் அமைக்க தமிழ் மக்கள் ஆணையிட்டனர்.

பின்னர் நடந்த பல்வேறு விதமான போராட்டங்களும் போரும் நாம் அறிந்ததே.  அதிகாரப்போட்டிகள், சகோதரக் கொன்றொழிப்புக்கள் போன்ற நிகழ்வுகளைத்தொடர்ந்து இப்போராட்டத்தை தொடக்கிய, கொண்டு நடத்திய தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல அழித்தொழிக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும் போக, அவற்றுள் வலுவான இயக்கமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே நீண்ட காலத்துக்கு தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை நடத்திவந்தது.

மே 2009 வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தனியான காவல் துறை, நீதித்துறை, அரசியல் அமைப்புக்கள், இராணுவம், வைப்பகம், பொருளாதாரக் கட்டுமானங்கள், திட்டமிடல், வரி போன்றவற்றோடு பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தனித்தேசமாகவே இயங்கிவந்தது.

இப்போராளிக்குழுவுடன் தமது முழுமையான உடன்பாட்டினை உறுதிப்படுத்திக்கொண்டு 2003ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல், மற்றும் 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்றது.
தமிழீழம் 9 மாவட்டங்களைக் கொண்டது. அவை: யாழ்ப்பாணம் (சப்த தீவுகள் உட்பட), மன்னார்,முல்லைத்தீவு,கிளிநொச்சி,வுனியா,திருக்கோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம்.

தமிழீழம் எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாயகப்பிரதேசமாக கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர் தமிழீழம். தமிழீழம் ஓர் எண்ணக்கரு. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வந்தார்கள். இந்த அரசாங்கம் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படாத அமைப்புகளும் அதன் வழிகாட்டுதல்களும் தேசிய இறையாண்மைக்கு எதிராக கருதப்பட்டதால் உருவான விளைவே ஈழப்போர்கள்.

ஈழப் போராட்ட வரலாறு குறித்து வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட பிரசுரங்கள் வெளிவந்துள்ள போதிலும், அவை அனைத்தும் எதாவது ஒரு அரசியல் பின்புலத்தை நியாயப்படுத்தும் நோக்கிலேயே வெளிவந்துள்ளன.

நாவலின் கடைசியில் மனதை பாதித்த வரிகள் ,
"இலங்கையின் அழகிய நகரங்கள் சிலரின் கோபத்தினால் அணுஅணுவாக பற்றி எரிந்து கொண்டிருந்தது. புகழ் பெற்ற காவிய லங்காதகன காட்சிகளை அப்பாவி இலங்கை தமிழர்கள் நிதர்சனமாக அனுபவித்துக் கொண்டிருந்தனர் பத்திரிக்கைகளை புரட்டவே பயமாக இருந்தது. வானொலியில் கேட்ட வடிகட்டிய செய்திகளே வயிற்றை கலக்கின"

அந்தத் தென்னை மரத்தீவினிலே இனிய தென்றல் வீசட்டும்
#மே18 #தமிழ்



*பல்வேறு இணையத்தரவுகளை அலசி எழுதப்பட்டது , சில வரிகள் உணர்வுகளுக்காக அப்படியே பதியப்பட்டுள்ளது

Monday, April 29, 2019

புதுஉலகம் பிறந்துகொண்டது..!

கனவுகள் நிஜங்களாக எல்லோர்
வாழ்விலும் பலிக்கத்தொடங்க,
ஓநாயும் புலியும் சேர்ந்தார்போல்
மானுடம்  பேச,
தீப்பந்தமும் எண்ணைத்துணியும் சிரித்துக்கொண்டு
காற்று வாங்க 
கூன் விழுந்த வயதான வானவில்
வண்ணமில்லாமல் நிமிர்ந்த நிற்க,
இரவில்லா நேரத்தில் வௌவால்கள்
ஓடியாடி அளவளாவ,
வடை தின்ற நரியெல்லாம்
நடுநிலை அரசாக,
ஆடிக்காற்று தேடி அசந்து
அம்மியில்லாமல் அசையமறுக்க,
எல்லை தாண்டிய நட்புகள் எல்லாம்
தவறில்லை சரியென்றாக ,
பாம்பூறிய புடலங்காயெல்லாம்
கசக்கமறந்து தித்திக்க ,
மனங்களெல்லாம்  மிதிக்கப்பட்டு
மதங்கள் மதிக்கப்பட ,
உணர்ச்சியற்ற பிண்டங்களாய்
உயிருள்ள மாந்தராக ,
ஒன்றின் மேல் ஒன்றாக
வரையப்பட்ட கண்ணாடி ஓவியங்கள்
தரையில் விழுந்து சுக்குநூறாக
அர்த்தமில்லா வார்த்தைகள் எல்லாம்
ஒன்றோடு ஒன்று கூடி
தனக்கு தானே
புதுஉலகம் பிறந்துகொண்டது..!
புதுக்கவிதையாய் எழுதிக்கொண்டது..!
புதியதொரு ஓவியம் படைத்துக்கொண்டது..!

Thursday, April 18, 2019

அன்புள்ள நளன் - 2

அன்புள்ள நளன்

ஐந்தாம் திங்கள் கடந்தாயிற்றி. மகிழுந்து , ரயில் , பேருந்து , விமானம் என ஊர்ந்து , உருண்டு , பறந்து நம் மண்ணில் கிடக்கிறாய் மகனே. காலம் எத்தனை விஷயங்களை உனக்கு சாத்தியமாக்கியுள்ளது . நினைத்துப் பார்க்கையில் ; என் இரண்டாம் வயதில் ரயில் ஏறினேன் ,  பத்து வயதிருக்கும் கார் பயணிக்க , இருபத்து நான்கு வயதில் விமானம் ஏறினேன் . எல்லாவற்றையும் நீ ஐந்து மாதத்தில் பார்த்துவிட்டாய் . உனக்கு கப்பல் பயணம் சாத்தியமாக்கி விடுவேன் விரைவில் ,  ராக்கெட்டும் நீ படித்து சென்று பயணித்து விடு. நீ ஊருக்கு திரும்பி ஒரு வாரம் இருக்கும் உன் புகைப்படங்கள் , காணொளிகள் எல்லாம் அலுக்காமல் பார்க்கிறேன் . தொள்ளாயிரத்து இருபது புகைப்படங்கள் உள்ளன.  நேற்றய உன் கீச்சுக் காணொளி செங்கீரைப்பருவத்தினை நினைவில் கொண்டுவந்தது. 

"விரல் சுவை யுண்டு கனிந்தமு தூறிய மெல்லிதழ்புலராமே,
விம்மிப்பொருமி விழுந்தழுதவறியுன் மென்குரல் கம்மாமே
கரைவுறு மஞ்சன நுண்டுனிசிந்திக் கண்மலர் சிவவாமே,
கலுழ்கலுழிப்புன லருவி படிந்துடல் கருவடி வுண்ணாமே,
உருவ மணிச்சிறு தொட்டி லுதைந்துநி னொண்பத நோவாமே ,
ஒருதா ளுந்தி யெயழுந்திரு கையும் ஒருங்கு பதித்து நிமிர்ந் 
தருள் பொழி திருமுக மசைய வசைந்தினி தாடுக செங்கீரை.!!

குருபரரின் சொற்களில் உன்னை காண்கிறேன் . பொருள் தெரியாத ஒலியை குழந்தை எழுப்பும் பருவமாகும். தொட்டில் பிள்ளை தலையை உயர்த்தி கையை ஊன்றி உடம்பை அசைத்தலை செங்கீரைப் பருவமென்றனர். தகப்பனுக்கு சளைக்காமல் நீ கடந்த இரண்டு மாதமாகவே விடாமல் தொணதொணவென பேசிக்கொண்டிருக்கிறாய். 

பேசிப் பழகு. 6வயதில் தமிழ் மேடையேறிய அத்தை இருக்கிறாள் . போட்டி போட தயாராகிவிடு.  பேச்சிலே வென்றோர் மன்னராய் திகழும் பூமி இது.

நயம்பட பேசிப் பழகு . சிலநேரங்களில் என்னையும் மறந்து வார்த்தைகளில் நஞ்சினை கலந்துவிடுகிறேன், தவிர்க்க நினைக்கிறேன். அதனை நீ மறந்தும் பழகிவிடாதே.     
ஆங்கிலேயனோடு பேசி பேசி சொற்களின் பின்னே இருக்கும் அந்த உணர்ச்சிகளை ஆழமாக  உணர முடிகிறது. ஒரு காலை வணக்கத்தை கூறும் போது , அவன் ஆழ் மனதிலிருந்தது நமக்காக ஒரு நல்ல நாளை வேண்டுகிறான் எனும் நினைப்பு மேலிடுகிறது. 

உடன் சேர்ந்திருப்போருடன் நல்ல செய்திகளை பகிர்ந்து கொள் , உற்சாகத்துடன் பழகு , தைரியம் குடு. எத்தனை சிறிய செயலாக இருந்தாலும் பாராட்டிப் பழகு. உன் பாராட்டின் போது நேர்மையான புன்னகை இருத்தல் வேண்டும். 

எந்த அளவு பேசுகிறாயோ அதே அளவுக்கு செவிமடுத்து கேட்டுப்பழகு. கேட்பாரின்றியும் ,யாரிடம் சொல்ல வேண்டும் என தெரியா தவிப்புடனும் பலர் உடன் இருப்பார்கள் . நீ பாரங்களை அவர்களுக்காக சுமக்க வேண்டாம்,அவர் பாராத்தினை மௌனத்தாலும் , சொல்லாலும் , கண்ணீராலும்  இறக்கிவைக்க உடன் இரு . 

முடிந்தால் கதை சொல்லி பழகு . புத்தக உலகை , இலக்கிய உலகை உனக்கு அறிமுகப் படுத்துவது என் தலையாய கடமை. வாசித்து பழகு . பாவா எனும் கதைசொல்லியை கேட்டுக் கேட்டுக் ஆர்பரிக்கிறேன். எழுத்தாளர்களின் படைப்புக்களை ஆச்சர்யமாக கதையாய் சொல்லிக் பட்டையை கிளப்புகிறார். முடிந்தால் எனக்காக ஒரு கதை சொல்  .

உன் கீச்சுப் பேச்சுக்கு நான் அதிகமாகவே பேசிவிட்டேன். 

செங்கமலக்கழலில் சிற்றிதழ் போல்விரலில்,
சேர்திகழாழகளும் கிண்கிணியும்அரையில்,
தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின் பூவொடுபொன்மணியும் மோதிர மும்கிறியும்
மங்கல ஐம்படையும் தோல்வளை யும்குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எம் குடிக்கரசே ஆடுக செங்கீரை  ஆடுக ஆடுகவே.

Sunday, April 14, 2019

Loksabha 2019


Parties Count of Constituency
ADMK 13
CLOSE FIGHT 9
CON 2
CPI 1
DMK 11
NRC 1
PMK 1
PNK 1
PT 1
Grand Total 40

Saturday, March 23, 2019

அன்புள்ள நளன் - 1

23-மார்ச்-2019
லண்டன்.

அன்புள்ள நளன்

எப்படி இருக்கிறாய் ? நீ வந்து 115 நாட்கள் ஆகிவிட்டது . கீச் மூச் என இராப்பகலாக பேசிக்கொண்டிருக்கிறாய் . நீ முகம் பார்த்து சிரிக்கும் போதே உன்னிடம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என நினைக்கிறேன்.

"சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றாரிய முத்தமே வாரானை - போற்றாரிய
அம்புலியே யாய்த்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து" பிள்ளைத்தமிழ் பருவங்கள் பாடலிது .

நீ பிறந்து மூன்றாம் திங்களிது .  தமிழ் இலக்கியம் இதனை  காப்புப் பருவம் எனக் கூறுகிறது . 

தமிழர் பண்பாட்டில் முதல் இரண்டு திங்கள் குழந்தையை வெளியே கொண்டு வரமாட்டார்கள் எனவே மூன்றாம் திங்கள் முதல் பிள்ளைத்தமிழ் பாமாலைகளை காணலாம். நீ முதல் இரண்டு திங்களெல்லாம் பரதேசத்தில் கழித்துவிட்டாய் . மண்ணின் ஆசியோடும் , மொழியின் பெருமையோடும் நீ வளர்ந்திங்கு வரவேண்டும் என உனக்கு காப்பிடுகிறேன் .

விளம்பியின் பங்குனி போய் ,விகாரியின் சித்திரை பிறக்கப்போகிறது. புது இந்திய பிறந்து ஐந்தாண்டுகள் முடிந்து, மீண்டும் புது இந்தியா பிறக்க நம் தேசத்தில் தேர்தல் நடக்கப்போகிறது.  அறம் சார்ந்த அரசியலுக்கு  யாருக்கும் பெரிய நேரமிருப்பதில்லை . பெரும்பான்மை மத்திய தர வர்க்கத்தினர் வாழும் தேசங்களில் அப்போதைய தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு நகர்ந்து செல்லவே வாழ்வின் பெரும் பகுதி சென்றுவிடும் .

எந்த தேசத்தில் , எந்த ஊரில் நீ வளர போகிறாய் என கணிக்கும் அளவுக்கு என் ஜோதிடஞானமில்லை. 30 நாளில் கற்றுக்கொள்ள ஒரு புத்தகம் இருக்கிறது, வாங்கிவிடுகிறேன்.
தமிழ் மொழியினை ஆழமாக கற்றுக்கொள். இலக்கணப் பிழையின்றி எழுத நீயாவது கற்றுக்கொள். தமிழ் படிக்காமல் எழுதும் என்னைப்போல் இருந்து விடாதே.   

மொழிகளை தேடித்தேடி புரிந்துகொள். மொழியும், மண்ணும்,மனிதனும் தான் நிலையானவை. காலத்திற்கேற்றார் போல் மருவும் இவை மறையாதவை. மதங்களை தாண்டி மனிதானாய் வாழ்ப்பழகு. இன்று கடிதமெழுதி , பின்னர் உன்னை நானே மாறச்சொன்னால் இந்தக்கடிதத்தை  காட்டி என்னை திருத்து.


மதிப்பெண் சார்ந்த உன் கல்வியை நானும் உன் அம்மாவும் உன்னிடம் எதிர்பார்க்கப் போவதில்லை. உற்றாரின் அழுத்தங்களை உன்னிடம் திணிக்காமல் இருக்க முடிந்தவரை  முயற்சிப்போம்.    தமிழுக்கு கயல் , அரசியலுக்கு ஜெயன் , ஆன்மீகத்துக்கு நரேஷ் , நடனத்துக்கு சிவா , நடிப்புக்கு ராதா , கலைக்கு ஜெம்,மணி , அமைதிக்கு மாலதி , அடாவடிக்கு நீரு என பல வித்தகர்கள் என் நட்பு வட்டத்தில் உள்ளனர்.  உன் பெரியப்பாவிடம் நீண்ட உரையாடல்கள் நடத்து   உன்னை என்றும் தனிமை படுத்துக்கொள்ளாதே . அறிவார்ந்த சமூகத்தோடு ஒன்றி வாழ பழகு. 

நிதிக்கு தகுந்தாற்போல் பயணப்படு. நூல்களிலும் , நூலகங்களிலும்  வெற்றியடையாத தேடல் , கடல் கடந்து தேடினாலும் வெல்லாது என்பது என் கருத்து.  அடுத்தடுத்த கடிதங்களில் புத்தகங்கள் பற்றி உனக்கு கூறுகிறேன்.  உன் அனுபவம் உனக்கு சொல்லிக்கொடுக்கட்டும் சரியானதையும் தவறானதையும்.


இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவரெல்லாம், மந்திர மாமலர் கொண்டும், முப்போதும் வானவரேத்தும் முனிவர்கள் சொல்லார வாழ்த்தி நின்றேத்தியும்  சொப்படக் காப்பிடட்டும். 

அன்புடன்
அப்பா