Saturday, March 23, 2019

அன்புள்ள நளன் - 1

23-மார்ச்-2019
லண்டன்.

அன்புள்ள நளன்

எப்படி இருக்கிறாய் ? நீ வந்து 115 நாட்கள் ஆகிவிட்டது . கீச் மூச் என இராப்பகலாக பேசிக்கொண்டிருக்கிறாய் . நீ முகம் பார்த்து சிரிக்கும் போதே உன்னிடம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என நினைக்கிறேன்.

"சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றாரிய முத்தமே வாரானை - போற்றாரிய
அம்புலியே யாய்த்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து" பிள்ளைத்தமிழ் பருவங்கள் பாடலிது .

நீ பிறந்து மூன்றாம் திங்களிது .  தமிழ் இலக்கியம் இதனை  காப்புப் பருவம் எனக் கூறுகிறது . 

தமிழர் பண்பாட்டில் முதல் இரண்டு திங்கள் குழந்தையை வெளியே கொண்டு வரமாட்டார்கள் எனவே மூன்றாம் திங்கள் முதல் பிள்ளைத்தமிழ் பாமாலைகளை காணலாம். நீ முதல் இரண்டு திங்களெல்லாம் பரதேசத்தில் கழித்துவிட்டாய் . மண்ணின் ஆசியோடும் , மொழியின் பெருமையோடும் நீ வளர்ந்திங்கு வரவேண்டும் என உனக்கு காப்பிடுகிறேன் .

விளம்பியின் பங்குனி போய் ,விகாரியின் சித்திரை பிறக்கப்போகிறது. புது இந்திய பிறந்து ஐந்தாண்டுகள் முடிந்து, மீண்டும் புது இந்தியா பிறக்க நம் தேசத்தில் தேர்தல் நடக்கப்போகிறது.  அறம் சார்ந்த அரசியலுக்கு  யாருக்கும் பெரிய நேரமிருப்பதில்லை . பெரும்பான்மை மத்திய தர வர்க்கத்தினர் வாழும் தேசங்களில் அப்போதைய தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு நகர்ந்து செல்லவே வாழ்வின் பெரும் பகுதி சென்றுவிடும் .

எந்த தேசத்தில் , எந்த ஊரில் நீ வளர போகிறாய் என கணிக்கும் அளவுக்கு என் ஜோதிடஞானமில்லை. 30 நாளில் கற்றுக்கொள்ள ஒரு புத்தகம் இருக்கிறது, வாங்கிவிடுகிறேன்.
தமிழ் மொழியினை ஆழமாக கற்றுக்கொள். இலக்கணப் பிழையின்றி எழுத நீயாவது கற்றுக்கொள். தமிழ் படிக்காமல் எழுதும் என்னைப்போல் இருந்து விடாதே.   

மொழிகளை தேடித்தேடி புரிந்துகொள். மொழியும், மண்ணும்,மனிதனும் தான் நிலையானவை. காலத்திற்கேற்றார் போல் மருவும் இவை மறையாதவை. மதங்களை தாண்டி மனிதானாய் வாழ்ப்பழகு. இன்று கடிதமெழுதி , பின்னர் உன்னை நானே மாறச்சொன்னால் இந்தக்கடிதத்தை  காட்டி என்னை திருத்து.


மதிப்பெண் சார்ந்த உன் கல்வியை நானும் உன் அம்மாவும் உன்னிடம் எதிர்பார்க்கப் போவதில்லை. உற்றாரின் அழுத்தங்களை உன்னிடம் திணிக்காமல் இருக்க முடிந்தவரை  முயற்சிப்போம்.    தமிழுக்கு கயல் , அரசியலுக்கு ஜெயன் , ஆன்மீகத்துக்கு நரேஷ் , நடனத்துக்கு சிவா , நடிப்புக்கு ராதா , கலைக்கு ஜெம்,மணி , அமைதிக்கு மாலதி , அடாவடிக்கு நீரு என பல வித்தகர்கள் என் நட்பு வட்டத்தில் உள்ளனர்.  உன் பெரியப்பாவிடம் நீண்ட உரையாடல்கள் நடத்து   உன்னை என்றும் தனிமை படுத்துக்கொள்ளாதே . அறிவார்ந்த சமூகத்தோடு ஒன்றி வாழ பழகு. 

நிதிக்கு தகுந்தாற்போல் பயணப்படு. நூல்களிலும் , நூலகங்களிலும்  வெற்றியடையாத தேடல் , கடல் கடந்து தேடினாலும் வெல்லாது என்பது என் கருத்து.  அடுத்தடுத்த கடிதங்களில் புத்தகங்கள் பற்றி உனக்கு கூறுகிறேன்.  உன் அனுபவம் உனக்கு சொல்லிக்கொடுக்கட்டும் சரியானதையும் தவறானதையும்.


இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவரெல்லாம், மந்திர மாமலர் கொண்டும், முப்போதும் வானவரேத்தும் முனிவர்கள் சொல்லார வாழ்த்தி நின்றேத்தியும்  சொப்படக் காப்பிடட்டும். 

அன்புடன்
அப்பா