Monday, April 29, 2019

புதுஉலகம் பிறந்துகொண்டது..!

கனவுகள் நிஜங்களாக எல்லோர்
வாழ்விலும் பலிக்கத்தொடங்க,
ஓநாயும் புலியும் சேர்ந்தார்போல்
மானுடம்  பேச,
தீப்பந்தமும் எண்ணைத்துணியும் சிரித்துக்கொண்டு
காற்று வாங்க 
கூன் விழுந்த வயதான வானவில்
வண்ணமில்லாமல் நிமிர்ந்த நிற்க,
இரவில்லா நேரத்தில் வௌவால்கள்
ஓடியாடி அளவளாவ,
வடை தின்ற நரியெல்லாம்
நடுநிலை அரசாக,
ஆடிக்காற்று தேடி அசந்து
அம்மியில்லாமல் அசையமறுக்க,
எல்லை தாண்டிய நட்புகள் எல்லாம்
தவறில்லை சரியென்றாக ,
பாம்பூறிய புடலங்காயெல்லாம்
கசக்கமறந்து தித்திக்க ,
மனங்களெல்லாம்  மிதிக்கப்பட்டு
மதங்கள் மதிக்கப்பட ,
உணர்ச்சியற்ற பிண்டங்களாய்
உயிருள்ள மாந்தராக ,
ஒன்றின் மேல் ஒன்றாக
வரையப்பட்ட கண்ணாடி ஓவியங்கள்
தரையில் விழுந்து சுக்குநூறாக
அர்த்தமில்லா வார்த்தைகள் எல்லாம்
ஒன்றோடு ஒன்று கூடி
தனக்கு தானே
புதுஉலகம் பிறந்துகொண்டது..!
புதுக்கவிதையாய் எழுதிக்கொண்டது..!
புதியதொரு ஓவியம் படைத்துக்கொண்டது..!

Thursday, April 18, 2019

அன்புள்ள நளன் - 2

அன்புள்ள நளன்

ஐந்தாம் திங்கள் கடந்தாயிற்றி. மகிழுந்து , ரயில் , பேருந்து , விமானம் என ஊர்ந்து , உருண்டு , பறந்து நம் மண்ணில் கிடக்கிறாய் மகனே. காலம் எத்தனை விஷயங்களை உனக்கு சாத்தியமாக்கியுள்ளது . நினைத்துப் பார்க்கையில் ; என் இரண்டாம் வயதில் ரயில் ஏறினேன் ,  பத்து வயதிருக்கும் கார் பயணிக்க , இருபத்து நான்கு வயதில் விமானம் ஏறினேன் . எல்லாவற்றையும் நீ ஐந்து மாதத்தில் பார்த்துவிட்டாய் . உனக்கு கப்பல் பயணம் சாத்தியமாக்கி விடுவேன் விரைவில் ,  ராக்கெட்டும் நீ படித்து சென்று பயணித்து விடு. நீ ஊருக்கு திரும்பி ஒரு வாரம் இருக்கும் உன் புகைப்படங்கள் , காணொளிகள் எல்லாம் அலுக்காமல் பார்க்கிறேன் . தொள்ளாயிரத்து இருபது புகைப்படங்கள் உள்ளன.  நேற்றய உன் கீச்சுக் காணொளி செங்கீரைப்பருவத்தினை நினைவில் கொண்டுவந்தது. 

"விரல் சுவை யுண்டு கனிந்தமு தூறிய மெல்லிதழ்புலராமே,
விம்மிப்பொருமி விழுந்தழுதவறியுன் மென்குரல் கம்மாமே
கரைவுறு மஞ்சன நுண்டுனிசிந்திக் கண்மலர் சிவவாமே,
கலுழ்கலுழிப்புன லருவி படிந்துடல் கருவடி வுண்ணாமே,
உருவ மணிச்சிறு தொட்டி லுதைந்துநி னொண்பத நோவாமே ,
ஒருதா ளுந்தி யெயழுந்திரு கையும் ஒருங்கு பதித்து நிமிர்ந் 
தருள் பொழி திருமுக மசைய வசைந்தினி தாடுக செங்கீரை.!!

குருபரரின் சொற்களில் உன்னை காண்கிறேன் . பொருள் தெரியாத ஒலியை குழந்தை எழுப்பும் பருவமாகும். தொட்டில் பிள்ளை தலையை உயர்த்தி கையை ஊன்றி உடம்பை அசைத்தலை செங்கீரைப் பருவமென்றனர். தகப்பனுக்கு சளைக்காமல் நீ கடந்த இரண்டு மாதமாகவே விடாமல் தொணதொணவென பேசிக்கொண்டிருக்கிறாய். 

பேசிப் பழகு. 6வயதில் தமிழ் மேடையேறிய அத்தை இருக்கிறாள் . போட்டி போட தயாராகிவிடு.  பேச்சிலே வென்றோர் மன்னராய் திகழும் பூமி இது.

நயம்பட பேசிப் பழகு . சிலநேரங்களில் என்னையும் மறந்து வார்த்தைகளில் நஞ்சினை கலந்துவிடுகிறேன், தவிர்க்க நினைக்கிறேன். அதனை நீ மறந்தும் பழகிவிடாதே.     
ஆங்கிலேயனோடு பேசி பேசி சொற்களின் பின்னே இருக்கும் அந்த உணர்ச்சிகளை ஆழமாக  உணர முடிகிறது. ஒரு காலை வணக்கத்தை கூறும் போது , அவன் ஆழ் மனதிலிருந்தது நமக்காக ஒரு நல்ல நாளை வேண்டுகிறான் எனும் நினைப்பு மேலிடுகிறது. 

உடன் சேர்ந்திருப்போருடன் நல்ல செய்திகளை பகிர்ந்து கொள் , உற்சாகத்துடன் பழகு , தைரியம் குடு. எத்தனை சிறிய செயலாக இருந்தாலும் பாராட்டிப் பழகு. உன் பாராட்டின் போது நேர்மையான புன்னகை இருத்தல் வேண்டும். 

எந்த அளவு பேசுகிறாயோ அதே அளவுக்கு செவிமடுத்து கேட்டுப்பழகு. கேட்பாரின்றியும் ,யாரிடம் சொல்ல வேண்டும் என தெரியா தவிப்புடனும் பலர் உடன் இருப்பார்கள் . நீ பாரங்களை அவர்களுக்காக சுமக்க வேண்டாம்,அவர் பாராத்தினை மௌனத்தாலும் , சொல்லாலும் , கண்ணீராலும்  இறக்கிவைக்க உடன் இரு . 

முடிந்தால் கதை சொல்லி பழகு . புத்தக உலகை , இலக்கிய உலகை உனக்கு அறிமுகப் படுத்துவது என் தலையாய கடமை. வாசித்து பழகு . பாவா எனும் கதைசொல்லியை கேட்டுக் கேட்டுக் ஆர்பரிக்கிறேன். எழுத்தாளர்களின் படைப்புக்களை ஆச்சர்யமாக கதையாய் சொல்லிக் பட்டையை கிளப்புகிறார். முடிந்தால் எனக்காக ஒரு கதை சொல்  .

உன் கீச்சுப் பேச்சுக்கு நான் அதிகமாகவே பேசிவிட்டேன். 

செங்கமலக்கழலில் சிற்றிதழ் போல்விரலில்,
சேர்திகழாழகளும் கிண்கிணியும்அரையில்,
தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின் பூவொடுபொன்மணியும் மோதிர மும்கிறியும்
மங்கல ஐம்படையும் தோல்வளை யும்குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எம் குடிக்கரசே ஆடுக செங்கீரை  ஆடுக ஆடுகவே.

Sunday, April 14, 2019

Loksabha 2019


Parties Count of Constituency
ADMK 13
CLOSE FIGHT 9
CON 2
CPI 1
DMK 11
NRC 1
PMK 1
PNK 1
PT 1
Grand Total 40