தாத்தாவின் பெட்டிக்கடையில் போனி அதிகமாக இருக்கவும் , இவர்களுக்கு இங்கு வேலைப்பளு அதிகம் .
நேற்று மாலை மூட்டைகள் பிரிக்கப்பட்டு , தரையில் கிடந்த தார்ப்பாய்கள் அந்த இரட்டை குழந்தை கருவினை சுமந்தன . நாள் முழுவதும் வெயிலில் காய்ந்து பின்னர் குளிருக்கு பயந்து வீட்டு மாடத்தினுள் அவை சரண் புகுந்தன. இன்று பாவை நோன்பிருக்கும் பெண்களை போன்று அவர்கள் விடியற்காலையே தயாராய் இருந்தனர் .
அதோ அங்கே அடுப்பங்கரையில் மிகப்பெரிய வெண்கல குழி . எந்தப் பக்கம் ஏறினாலும் வழுக்கி விடும் வாகாக அது உருக்கப்பட்டிருந்தது . அதன் அடிவயிறு வீங்கியும் கழுத்து சூம்பியும் காணப்பட்டது . கழுத்தருகே ஒரு கருவளையம் மிக தீர்கமாக இருந்தது. உடம்பெங்கிளும் யாரோ கடுமையாக பழுக்க காய்ச்சிய கம்பிகளால் கீறிய தடையங்கள் தெரிந்தன .
முட்டிவரை மடித்த வேட்டியோடு வேகமாய் வந்த ஒருவன் அக்கினிதேவனை அங்கே ஆவாஹனம் செய்தான் . வெங்கலகுழிகள் கும்பீபாகத்துக்கு தயாராயின . முட்டுசுவற்றில் சாய்ந்து கிடந்த பீப்பாவினில் கருஞ்சிவப்பு சாயம் இருந்தது . மாட்டுத்தொழுவத்து மண்சட்டிகள் அருகே கிடந்த கரும்புச் சக்கைகளின் குருதிகலந்த கண்ணீர் அவை . இராப்பகலாக அதில் அடைந்து கிடக்கவும் அவை நசநசத்து போயிருந்தன .
விறகுக்கட்டைகள் உடல் கருத்து, செந்தீ அக்கருங்குழியை சூடேற்றியது . பீப்பாவினில் குடியிருந்தவை அதனுள் தள்ளப்பட்டன. கருவருத்தலை போன்றதொரு கொடுஞ்செயல் இருக்குமோ . அத்துணை கருக்களும் இரட்டை குட்டிகளை சுமந்து கிடந்தன . அத்துனையும் அக்கினி தேவனின் ஆராதனைக்கு ஆவிர்பவிக்கப்பட்டன . ஆள் உயர எஃகு கம்பிகள் அந்த கலவையை நன்கு பதம் பார்த்தன . அத்துணை வெறிகொண்ட செயலை செய்பவன் நரகினில் வீழ்வது உறுதி.
பெரும் பிரேத படுக்கைகள் மரத்தினில் செய்து அந்த முற்றதினில் கிடத்தப்பட்டிருந்தது . அதன் இறுதிப் படையலாய் உரல் நசித்த அரிசி மாவு கிடந்தது. தீயிடப்பட கிண்ணங்களின் உள்ளிருந்தவை இதன் மேல் கொட்டப்பட்டன . இறுதி பரிசோதனை வல்லுநர் கையினில் பூரிக்கட்டைகள் கொண்டு ஒவ்வொன்றையும் அடித்து பரிசோதித்து , கத்திகள் கொண்டு துண்டங்கள் ஆக்கினார் . பல கண்ணாடி குடுவைகள் அந்தப் பிண்டங்களை சுமந்து சென்றன .
பெட்டிகடையில் சிறுவன் கேட்கிறான்,' தாத்தா கடலை மிட்டாய் எப்படி செய்றாங்க ? ரொம்ப நல்லா இருக்கு இன்னொன்னு குடுங்க ' . இரண்டு வில்லைகளுக்கு 2 ரூபாய் வாங்கிக்கொண்டு தாத்தா சிரிக்கிறார்.
#கடலை மிட்டாய்
No comments:
Post a Comment