"என்னப்பா ஊர்காரங்களா" என கையில் தடியை பிடித்துக் கொண்டு எங்களை பார்த்து ஒரு வயதான பாட்டி கேட்டவுடன் , 'ஆமாம் பாட்டி ' என்று பதிலளித்தோம் . மலேசியா பத்துமலை முருகன் கோவில் அருகில் இருந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை ஆதலால் கூட்டமாக இருந்தது. எந்த ஊருப்பா நீங்கல்லாம் என்றதற்கு சென்னை, மதுரை , திருச்சி , திருநெல்வேலி , கோவை என வரிசையாக கை காட்டிக் கூறினேன் . 'ஏன்பா, எல்லா பெரிய ஊரையும் சொல்லி என்ன கிண்டல் பண்ற என்றார். அய்யயோ அப்டியெல்லம் இல்ல பாட்டி உண்மைலே அதான் என்றேன் . ஓ ! சரிப்பா . நாங்களும் ஊரு பக்கம் தான் வந்து ரொம்பகாலம் ஆச்சு . இங்க இப்டி உங்கள மாதிரி ஊர்காரங்களா பாக்கும் நானே போய் பேசிருவேன் என்று சொல்லிக்கொன்டே அன்னதான வரிசையில் அமர்ந்தார். ஏதோ மலேசியா தமிழர்களுடன் பேசுகையில் மனதிற்கு மிகவும் இதமாக இருப்பதை நாங்கள் அனைவருமே உணர்ந்தோம். முருகனை ஒரு முறை கைக்கூப்பி பலமுறை செல்பேசியில் க்ளிக்கியும் எதிரே உள்ள உணவகத்தில் ஏகபோகமாக ஒருவண்டி சிற்றுண்டி சாப்பிட்டிட்டோம். அங்கு உணவு உண்ணும் ஒவ்வொரு நொடியும் மெய்சிலிர்ப்பு . கபாலி நாயகன் தலைவர் அமர்ந்த நாற்காலியை பத்திரப்படுத்தி காட்சிப்பொருள் போல் வைத்திருந்தனர். தலைவர் பேரை சொல்லி ஆளுக்கு ஒரு செட் பூரி அதிகம் உண்டோம் . வெளியே வந்து, நல்ல பெரும் சொம்பளவு இளநீர் நான்கு வெள்ளி தான் என்பதால் அதையும் குடித்தோம் . பேசுகையில் அவர் நான் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சேர்ந்தவர் என அறிந்தேன் . 272 படிகள் ஏறி, இறங்கி மீண்டும் வந்து உங்களுக்காக வந்து இளநீர் குடிப்பதாகா வாக்களித்து ஏற ஆரம்பித்தோம். அழகான, ஆச்சர்யமான, இயற்கை எழில் சூழ்ந்த குகைகள் எங்களை சில்லென்ற காற்றோடு வரவேற்றன. பத்துமலை பற்றி கையடக்கமான புத்தகம் வாங்கி படித்துகொண்டே கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென சுற்றி வந்து வாக்கை காப்பாற்றிய தமிழனாய் இலுப்பூர் அண்ணன் கடையில் மேலும் இளநீர் குடித்தோம், உடனே அவர் நண்பர் ராமநாதபுரத்தாரின் பலாச்சுளைகளையும் பையில் போட்டுக்கொண்டு கிளம்பினோம். ஆஹா , புத்தக கடை. சிறுவயதில் அருகில் இருக்கும் நூலகத்தில் வாடகைக்கு பெரும்பாலும் சுஜாதா , ராஜேஷ்குமார் , ரமணிச்சந்திரன் , இந்திரா சௌந்தர்ராஜன் புத்தகங்கள் எளிதாக கிடைக்கும் . அதே வரிசையில் இங்கும் மிக மலிவான விலையில் புத்தகங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. எந்த மேல்சொன்ன எழுத்தாளர்களும் நம்மிடம் கோவப்படக்கூடாது என்பதால் ஒருவருக்கு தலா ஒரு புத்தகம் என வாங்கி ரயில் நோக்கி கிளம்பினேன் . ஏற்கனவே ஜெயமோகனின் விஷ்ணுபுரம் எனும் பெருவெள்ளத்தில் மூழ்கியிருக்கிறேன், இவர்களுக்கு பேசாமல் பேருந்து பயணத்தின் நாற்பது நிமிடம் ஒதுக்கலாம் என மனதுக்குள் முடிவு செய்து ரயிலில் நோக்கி பயணித்தேன் . பல தமிழர்களை சந்திக்க நேர்ந்தது , பேசி பல விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. இனி அடிக்கடி வரவேண்டும் என்பதை மனம் முடிவுசெய்து என்னிடம் அறிவுறுத்தியது.
-- தொடரும்
#மலேசியா #தமிழ் # நம்மஊறு #நல்ல சோறு
Sowmiyanarayanan
No comments:
Post a Comment