Tuesday, July 28, 2015

முதல் ஒப்பாரி

நான் கண்விழிச்சு பாக்கயிலே , அய்யா நீர் கண்மூடி கிடப்பதுவா ,
நாடு கண்ட கனவெல்லாம் இப்போ, உன்னோட உறங்குதைய்யா .

செய்தித்தாள் நிதம் வித்து , அப்பனுக்கு உதவி செஞ்ச ,
பாரெல்லாம் உன் சாதனைகள்  , இப்போ தினம் செய்தியா பேசுதைய்யா .!

வானோடி தேர்வினிலே,  நீ தோத்து போனாயே ,
பாரத தேசம் மொத்தம் , வான் உயர பறப்பதற்கோ ..!

இராப்பகலா அசராம ,செயற்கைக்கோள் நீ பறக்க விட்ட
அப்படி ஓர் சோதனைக்கோ , இப்ப  நீயும்  போயிருக்க ??

வீரமெனும் திட்டத்தால் , ப்ரிதிவியை பிறக்க வெச்ச ,
கண்டம் விட்டு கண்டம் போய் , அப்பிசாசத் தான்  தேடுறியோ ?

மொதல் குடிமகனா இருந்தாலும் , மன்னவனா திகழ்ந்தாயே ,
மன்னவனா இருந்தாலும் , வெறும் குடிமகனாய் திரிஞ்சாயே .!

அக்னிச்சிறகுகளால் நம் பயணம் , இந்தியத்திட்டமய்யா .!
உன் வெளிச்சத் தீப்பொறிகள்,  ஆயிரம் ஆண்டு காலத்துக்கோர் பார்வையையா,

நில மகளின் நிலைமையை, நீ மேடையிலே பேசயிலே
நிலமகளே வந்துன்னை , கூட்டிகிட்டு போனாலோ .

கண்ணியமான உன் கனவெல்லாம் , கலப்படமா போயிடுமோ
கனவானே கண்மணியே , ஏதும் கோள் பிடிச்சு நீ  வருவாயோ .!

நான் கண்விழிச்சு பாக்கயிலே , அய்யா நீர் கண்மூடி கிடப்பதுவா ,
நாடு கண்ட கனவெல்லாம் இப்போ, உன்னோட உறங்குதைய்யா .

நாடு கண்ட கனவெல்லாம் இப்போ, உன்னோட உறங்குதைய்யா .



#கலாம் கனவுகள்

No comments:

Post a Comment