ஆழ்குழாய்கிணற்றின் உப்பு நீர் மொட்டைமாடி ஏறி
வெதுவெதுப்பாய் குளியலறை குழாயில் ஒழுகுகையில் ,
வாசலில் அடிபம்ப்பில் வந்த கார்பொரேஷன் நல்ல நீரால் நிரப்பப்பட்ட
அலுமினிய வாளியில் இவர்களின் முதல் சந்திப்பு .
இருவரும் நீர்ச்சாதி ஆயினும் வெவ்வேறு உட்பிரிவுகள் .
சிறுநொடிக்காதலை குலைக்க மானுடன் வருகை .
ஒன்றரக் கலந்த இவர்கள் ஆறாம் அறிவின் அழுக்கை சுமக்கும் அவலம் ,
மணமணக்கும் செயற்கையான இயற்கை நுரைகளில் மூச்சுத்திணறி
சாக்கடைகளில் கலந்து முடிகிறது இவர்களின் காதல்.
இல்லை இதோடு முடியவில்லை ,
அண்ணன் ஆதித்தன் அணைப்பில் வெதுவெதுப்பை வளர்ந்த
தங்கையின் நினைவாக மனிதர்களை பழிவாங்குகிறான்
பிசுபிசுப்பான வியர்வையாய் .!
#கோடை #குளியல்
No comments:
Post a Comment