அன்பு விஜய் டிவிக்கு ,
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகளை அளிக்கும் விஜய் டிவி ரசிகனாக இதை பகிர்கிறேன். இன்றளவில் தமிழ் சேனல்களில் நல்ல ஜனரஞ்சகமாகவும் , சமுதாயம் நலன் சார்ந்தும் , திறன் வளர்க்கும், பொழுபோக்குக்கெனவும் பிரிவு வாரியாக நல்ல நிகழ்ச்சிகளை அளித்து வருகிறீர்கள். விஜய் தொலைக்காட்சி , ஸ்டார் விஜய் ஆக மாறி சுமார் பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தனி ஆளாக ஆதிக்கம் செலுத்திய சன் குழுமத்திடம் இருந்து பெருவாரியான ரசிகர்களை நீங்கள் இழுத்திருக்கிறீர்கள். தொலைக்காட்சி ரசிர்களுக்கு அன்றே, முதன் முதலில் தமிழில் ஹாலிவுட் டப்பிங் படங்கள் காட்டினீர்கள் . உங்களை போல பின்தொடர்ந்த ஜெயா , ராஜ் ஏன் சன் டிவி கூட அன்று அதில் உங்களை முந்த முடியவில்லை. ஸ்டார் கைப்பற்றிய பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிகர லாபம் அடைந்தீர்கள் இன்று கண்டிப்பாக நீங்கள் தான் முன்னிலையில் இருக்க வேண்டும்.
என் சிறுவயதில் அறுபது ருபாய் கேபிளுக்கு கட்டி போர்ட்டபிள் டிவியில் வரும் பன்னிரண்டு சேனல்களில் திருகித்திருகி ட்யூன் செய்து விஜய் டிவியில் மாயா மச்சிந்த்ரா , ஜீ பூம் பா, விஜய் லட்சாதிபதி , ஜென்மம் எக்ஸ் நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்திருக்கிறேன். கனா காணும் காலங்கள் தொடரின் ஒவ்வொரு எபிசோடும் மனப்பாடமாக வைத்திருந்த என் பள்ளித் தோழிகளை எனக்கு தெரியும் .
ஒவ்வொரு வாரமும் லொள்ளு சபா யாரை கிண்டல் செய்வார்கள் எப்படி செய்வார்கள் என்ன யோசித்து மண்டை குழம்பியிருக்கிறோம், காதலிக்க நேரமில்லை தொடரை அந்தத் தொடக்கப் பாடலுக்காகவே பார்த்திருக்கிறோம். பாடத்தெரிந்த இளைஞர்களை ஊக்குவித்து சூப்பர் சிங்கர் மூலமாக மாபெரும் மேடையேற்றிய பெருமை உங்களையே சேரும் . கலக்க போவது யாரு என பல சிரிப்பு மன்னர்களை தமிழர்களுக்கு அடையாளம் காட்டியது நீங்கள் தான்.
கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், 7C என தமிழ் தொடர்கள் தொடாத ஒரு கல்விக்கூடம் சார்ந்த கதை எடுத்தீர்கள் , பெருமை . தர்மயுத்தம் என வக்கீல் சார்ந்த தொடர் எடுத்தீர்கள் , புதுமை. கணவன் மனைவியின் அழகான உறவை சரவணன் மீனாட்சியை காட்டி மக்களை கவர்ந்தீர்கள். ஒரு வார்த்தை ஒரு லட்சம் மூலம் பள்ளிக்குழந்தைகளையும் , ஆசிரியர்களையும் உங்கள் பக்கம் இழுத்துவிட்டீர்கள் .
லொட லொட பேச்சில் எங்களை டி.டி உடன் அருமையான காபி அருந்த வைத்தீர்கள். நீயா நானா பற்றி கூறாவிட்டால் நான் தங்கள் தொலைக்காட்சியின் ரசிகனே அல்ல. மிகச்சிறந்த ஒரு சமுதாய பார்வை கொண்ட நிகழ்ச்சியான இதையும் மேடையேற்றியுள்ளீர்கள். வருடா வருடம் விஜய் விருதுகள் உலக அளவில் எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது .
இன்றளவும் இன்னபிற சேனல்களை பார்க்கும் போது பல மடங்கு தரமான நிகழ்களான கனெக்ஷன், ஜோடி , அது இது எது , சமையல் சமையல் , நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்விக்கின்றன.
பின்னர் ஏன் இந்த விபரீத முயற்சி ?
ஆம் வரும் திங்கள் கிழமை முதல் நீங்களும் சராசரி சேனலாக மாறிவிடப் போகிறீர்கள் என்ற வருத்தம் எனக்கு. எதற்காக இந்த டப்பிங் சீரியல்கள் ? ஏற்கனவே என் கணவன் என் தோழன் , சீதையின் ராமன் , என் அன்பு தங்கைக்கு என மூன்று டப்பிங் சீரியல்கள் ஓளிபரப்பாகின்றன.
போதாக்குறைக்கு பிற சேனல் போல் நீங்களும் சனிக்கிழமையும் சீரியல் போட ஆரம்பித்தாயிற்று. இப்போது மதியம் 2 மணிமுதல் இரவு 9 மணி வரையில் மீண்டும் தொடர்ந்து அலுக்கப்போகும் தொடர்கள் தேவையா ? போதாக்குறைக்கு இன்னும் நான்கு ஆறு டப்பிங் தொடர்களான மகாதேவ் , மங்கையின் சபதம் , அம்மா , என்னுடைய தோட்டத்தில் , என்றும் என்னுடன் , கிரண் மாலா என அடுக்கிக் கொண்டே செல்கிறீர்கள் .
நாங்கள் பார்த்து வளர்ந்து இன்று மாபெரும் தமிழ் தொலைக்காட்சி சாம்ராஜ்யமாய் இருக்கும் விஜய் தொலைக்காட்சியின் சிறப்பே புதுமையும் எதார்த்தமும் தான் . டப்பிங் சீரியலில் வருவது போல் இங்கு அலங்கரித்து நிற்கும் மருமகள்கள் இல்லை , ஆனால் மீனாட்சியை போன்ற யதார்த்தமான பெண்கள் உண்டு. பதினைந்து பேர் எப்போதும் முழு அலங்காரத்துடன் விசாலமான அறைகளில் மொக்கையான டப்பிங் வசனங்கள் பேசுவதில்லை , ஆனால் கூட்டமாக இருக்கும் குழந்தைகளுக்கு நல்லது சொல்லு ஸ்டாலின் போன்ற ஆசிரியர்கள் உண்டு.
பெங்காலி , ஹிந்தி சீரியல்கள் நன்றாக இருக்கலாம் , ஸ்டார் குழுமம் அதன் உரிமைகளை வைத்திருக்கலாம் , அப்படியானால் நாங்கள் பார்த்து பழகிய , தெரிந்த நம் ஊர் கலைஞர்களை வைத்து , அந்த கதைகளை ரீமேக் செய்யலாம் . அதுவும் உங்களுக்கு புதிதல்ல , இன்று ப்ரைம் டைம் ஷோவாக இருக்கும் கல்யாணம் முதல் காதல் வரை ஹிந்தி சீரியலின் ரீமேக் தான் .
உங்களிடம் இருந்து தரமான நிகழ்ச்சிகளையே பார்த்து விட்டு , இன்று இப்படி பல டப்பிங் தொடர்களை பார்க்க மனம் கஷ்டமாக இருக்கிறது . கனா காணும் காலங்களும் , காதலிக்க நேரமில்லை தொடர்களும் நீங்கள் மாரு ஒளிபரப்பு செய்தால் கூட கண்டிப்பாக பல ரசிகர்கள் உங்களுடன் இருப்பார்கள் .
நன்றி,
விஜய் டிவி ரசிகன்
No comments:
Post a Comment