Sunday, February 19, 2017

நாளொன்று போவதற்குள்

நாளொன்று போவதற்குள் ,
  நான்பட்ட பாடனைத்தும் ..!
தெரியாதோ ,  கார்முகிலே ,
  கடற்கரையை , கருவிழியே .!

ஆண் :

மேகம் சிவந்து கண்ண கசக்குது , அடியே .!!
உன் முகமோ அதுவே ,
என்னடி என் மேல் கோவம்,
சேர்ந்தே இத கடந்து போவோம் ..!!

( கார்முகிலே , கடற்கரையை , கீற்றொளியே , கருவிழியே .!)

பெண்:

நம் காதல் கண்களின் நீரும், அது தான்
சிலிர்க்கும் மழை துளியே ,
உன்மேல் எனக்கேன் கோவம் ,
மழைநீரின் குளிர்ச்சியை பார் புரியும் .!

( கார்முகிலே , கடற்கரையை , கருங்குயிலே , கருவிழியே .!)

 ஆண் :

நுனிப்புல்லாய்  ஆடித் திரிந்தேன் , பெண்ணே
உன் மூச்சின் சுவாசம் ,
எனை ஆட்டிய ஆட்டம் ,
ஒவ்வொரு நொடியும் பாடாய் படுத்தும் .


பெண் :

எப்புயலும் உனை களைந்திடவில்லை , அடடா
நம் காதலின் வீரம்  ,
உனை தாங்கிய  தாரம் ,
தினம் உடனிருந்தாயே உனக்கே தெரியும் .!!

நிலையில்லா பருவம் போல் , மனமே ,
நினைக்குது உனை தினமே ,
உண்ணலும் உண்ணேன்,
யான் நீ இல்லா வாழலும் வாழேன்..!!

( கார்முகிலே , கடற்கரையை , கண்ணொளியே , கருவிழியே .!)

ஆண் :

நாழிகைகள் நின்றதடி சிந்தித்தேன் , யாரால்
என்னவளே உன்னால் ,
கடல் மணல் அணையிது ,
கரையும் அது கடந்தால் தெரியும் .

நாளொன்று போவதற்குள் ,
   நான்பட்ட பாடனைத்தும் ..!
அறிவீரே ,  கார்முகிலே , கடற்கரையை , கண்ணொளியே , கருவிழியே .!

தூரம்

சிதறிய செந்நீர் கூழாங்கற்கள் ,
சிதிலமடைந்த சாராய பாட்டில்கள் ,
கற்பிழந்த ரசாயன குண்டுகள் ,
வீரியமிழந்த லாரிநீர்க் குழாய்கள்,
ஒளியிழந்து இருண்டுடைந்த  பல்புகள் ,
வாய்பிளந்த லத்திக் கம்பங்கள் ,
உயிரற்ற நடைப்பிணங்கள்,
சமாதானமாய் முடிந்தது தூரத்திலோர்
சமத்துவப் போராட்டம் ..!!

பாரதி பாரதி பாரதி !!!

பாரதியை போன்றதொரு ரசனைமிக்க கலைஞனை கவிஞனை  நாம் காண்பதரிது .  பக்திப்பாடல்கள் , தோத்திர பாடல்கள் , பாமாலைகள் ,வேதாந்தப் பாடல்கள் ,தேசபக்தி பாடல்கள் ,
தேசத்தலைவர்களுக்காய் பாக்கள் , காவியங்கள்  என எண்ணிலடங்கா படைப்புகளை நமக்கு அளித்திருக்கிறார் .

அவருடைய பிறந்தநாளன்று முகநூலில் நடக்கும் பாரதி பிறந்தநாள் நேரலை நிகழ்வுக்காக பாரதியின் இரண்டு அழகான படைப்புகளை கலந்து , மஹாகவியின் அதே வரிகளோடு , பொருட்சுவையோடு உங்களுக்காக இதோ அளிக்கிறேன் . மாயையை பழித்தல் எனும்  ஒரு வேதாந்தப் பாடலையும் ,  சிருங்கார ரசம் பொங்கும் கண்ணன் என் காதலன் எனும் ஒரு காதல் கவியத்தையும் கலந்து இதோ உங்களுக்காக .

தூண்டிற் புழுவினைப்போல் -- வெளியே
சுடர் விளக்கினைப்போல்,
நீண்ட பொழுதாக -- எனது
நெஞ்சந் துடித்த தடீ.

கூண்டுக் கிளியினைப்போல் –
தனிமை கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளையெல்லாம் –
மனது வெறுத்து விட்டதடீ.

உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ மாயையே
மனத் திண்மை உள்ளாரை நீ செய்வதும் ஒன்றுண்டோ மாயையே.

நீண்ட பொழுதாக -- எனது
நெஞ்சந் துடித்த தடீ.
மனத் திண்மை உள்ளாரை நீ செய்வதும் ஒன்றுண்டோ மாயையே


பாயின் மிசைநானும் -- தனியே
படுத் திருக்கையிலே
தாயினைக் கண்டாலும், -- சகியே,
சலிப்பு வந்ததடி.

வாயினில் வந்ததெல்லாம், -- சகியே,
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன், -- சகியே
நுங்க ளுறவையெல்லாம்.

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்    மாயையே
 நீசித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ மாயையே.
தாயினைக் கண்டாலும், -- சகியே,
சலிப்பு வந்ததடி
நீசித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ மாயையே

உணவு செல்லவில்லை; -- சகியே
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; -- சகியே,
மலர் பிடிக்கவில்லை;
குண முறுதியில்லை; -- எதிலும்
குழப்பம் வந்ததடீ;
கணமும் உள்ளத்திலே -- சுகமே
காணக் கிடைத்ததில்லை


என்னைக் கெடுப்பதற்கு  எண்ணமுற்றாய்கெட்ட மாயையே
நான்உன்னைக் கெடுப்ப துறுதி என்றேயுணர் மாயையே.
மணம் விரும்பவில்லை; -- சகியே,
மலர் பிடிக்கவில்லை
நான்உன்னைக் கெடுப்ப துறுதி என்றேயுணர் மாயையே.


பாலுங் கசந்ததடீ; -- சகியே,
படுக்கை நொந்ததடீ.
கோலக் கிளிமொழியும் -- செவியில்
குத்த லெடுத்ததடீ.

நாலு வயித்தியரும் -- இனிமேல்
நம்புதற் கில்லையென்றார்;
பாலத்துச் சோசியனும் -- கிரகம்
படுத்து மென்றுவிட்டான்

சாகத் துணியிற் சமுத்திரம்  எம்மட்டு  மாயையே
இந்தத்தேகம் பொய் யென்றுணர்தீரரை என் செய்வாய் மாயையே.

நாலு வயித்தியரும் -- இனிமேல்
நம்புதற் கில்லையென்றார்
இந்தத்தேகம் பொய் யென்றுணர்தீரரை என் செய்வாய் மாயையே



கனவு கண்டதிலே -- ஒரு நாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை, -- எவனோ
என் அகந்தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; -- சகியே,
மேனி மறைந்துவிட்டான்;
மனதில் மட்டிலுமே -- புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ.


இருமை யழிந்தபின் எங்கிருப்பாய் அற்பமாயையே
தெளிந்தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே.
வினவக் கண்விழித்தேன்; -- சகியே,
மேனி மறைந்துவிட்டான்;
தெளிந்தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே.

உச்சி குளிர்ந்ததடீ; -- சகியே,
உடம்பு நேராச்சு.
மச்சிலும் வீடுமெல்லாம் -- முன்னைப்போல்
மனத்துக்கு  ஓத்ததடீ.

இச்சை பிறந்ததடீ -- எதிலும்
இன்பம் விளைந்ததடீ.
அச்ச மொழிந்ததடீ; -- சகியே,
அழகு வந்ததடீ.

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ   மாயையே
சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல் அரசாட்சியை மாயையே
இச்சை பிறந்ததடீ -- எதிலும்
இன்பம் விளைந்ததடீ.
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ   மாயையே
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ   மாயையே


எண்ணும் பொழுதில்லெல்லாம்,
அவன்   கை இட்டவிடத்தினிலே
தண்என்றிருந்ததடீ;
புதிதோர்  சாந்தி பிறந்ததடீ
எண்ணியெண்ணிப் பார்த்தேன்;
 அவன்தான்யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம்
அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ.

என்னிச்சை கொண்டு உனையெற்றி விட வல்லேன் மாயையே
இனி உன்னிச்சை கொண்டு எனக்கு  ஒன்றும் வராது காண் மாயையே.
கண்ணன் திருவுருவம்  அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ.
கண்ணன் திருவுருவம்  அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ.

வசீகரம்/கவர்ச்சி

அமைதியான அந்த இரவு
ஏதோ ஒரு காவுக்காய் காத்திருக்கிறது ,
யாரையேனும் புதிதாக இன்று வேட்டையாடலாமா
என யோசித்திருக்கையில் ,
அவள் வருகிறாள் .
இன்றும் அதே உணவா என நினைத்து
மனம் சோம்புகிறது இருட்டில் ஒளிந்திருக்கும் அந்த மிருகம்.
சிறுகுழந்தையாய் இருக்கும் போது
பெண் மரப்பாச்சிகளுடன்
விளையாடிய அந்த ஆண் மிருகம் ,
தான் வளர்ந்தாலும் வளராத பக்கத்து
வீட்டுக் குழந்தையுடன் விளையாடி,
பேருந்து நெரிசல்களில் அவள் ப்ருஷ்டங்கள்
தேடி  சிசினமுரசி  , வலைப்பூக்களில்
ஆடை களையப்பட்ட நாயகிகளின்
முலைகளில் இன்பம் கண்டு ,
ஐம்பதுக்கும் நூறுக்கும் நெடுஞ்சாலைப்
புதர்களில் சில நிமிடப்  பசியாறி ,
மெதுவாக நகரத்தின் உள்ளே
வந்து இப்போது மரத்தின்
பின்னே நின்றுகொண்டிருக்கிறது .
மரபுவழியுடையணிந்தவளை எடைபோடுகிறது.
 ஐந்தரை அடிக்காரி அவளின்
ஆறு  கஜப்புடவையையும் தாண்டி ,
கண்மூடி அவள் உள்ளங்கியை
மனதில் களைந்து நச்சுக்கொட்டி ,
கண் திறந்து அவளை பற்றப்
பாய்கிற அந்த மிருகம்,
 சுருண்டு சடாரென்று
தரையில் வலியில் புரள்கிறது,
மனிதமிருகத்தின் சதைக்கறியை
ருசித்த தெருநாய்கள்  வாயில் எச்சில் சொட்ட திரும்பி ஓட,
இவன் பார்த்தக் கவர்ச்சிக்கன்னி ஓடிவந்து சொல்கிறாள் ,
"அண்ணா , என்ன ஆயிற்று
இதோ  திரிவூர்தியை அழைக்கிறேன் என்று "
மிருகம் உயிர்ப்பிணமாக அந்த
வசீகரத்தொடைகளில் சாய்கிறது 

போலி - ஒரு பக்க கதை

கொல்லனை கட்டிக்கிட்டு  கொல்லைல தான்  சோறு வெடிக்கணும் என தன் ஆச்சி கூறியதை நினைத்துக் கொன்டே வெறும் சுவற்றை வெறித்துக்கொண்டிருந்தால் தங்கம்மாள் .  தீட்டாத வைரத்தின் கருமை நிறம் என்றாலும் , அக்காளுக்கு ஏற்கனவே வைரத்தம்மாள் என பெயர் வைத்துள்ளதாலும்,  ஆசாரி குடும்பம் என்பதாலும்  வைத்தபெயர் அது. தங்கத்தை நகையாக்கும் தொழில் என்பதால் இவர்களுக்கு வருமானம் அதிகமாகக் கிடைக்கும் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அப்படியல்ல, இப்போது உள்ள நிலையே வேறு. அவர் இந்தத் தொழிலுக்கு வந்தபோது இருந்த நிலைமை வேறு.


இந்த கைராசிக்காரி புதிதாக திருமணம் ஆகி வந்த நேரத்தில் , பலரும் வந்து தங்கத்தைக் கொடுத்து,  திருமண விழாக்களுக்கும் மற்ற மங்கல விழாக்களுக்கும் தங்கள் விருப்பத்துக்கேற்ப விதவிதமான வடிவங்களில், நகைகளை செய்து கொடுக்கச் சொல்வார்கள். அப்போது ஏதோ சூதனமாக சேர்த்து வைத்த காசில் இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்தாயிற்று . முதல் வாரிசின் மூன்றாவது பிரசவத்திற்கு ஒரு மாதம் முன்னர் தாலியறுத்து வீட்டோடு ஒடுக்கப்பட்டால் தங்கம்மாள்.  புகையோடே குடியிருந்த இவளுக்கு , இன்னும் ஒரு பெண்ணை கரையேற்ற வேண்டுமே என்ற கவலை நுரையீரலை அரிக்க தொடங்கியது.



நகை செய்யும் ஆசாரி ஆதலால்  வீட்டில் வாசலில்  பட்டறைகள், கொல்லையில் சமைக்க , படுக்க, உடுக்க ஒரே அறை , வயக்காட்டில் நீரோடையருகே கழிவறை என இருந்தது அவள் வீடு.  குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடுவர். நகை செய்வோர் தங்கத்தைக் கழுவிய நீரை சாக்கடையில் கொட்டிவிடுவதில்லை.  அந்நீரைக் காய்ச்சி அதில் இருக்கும் தங்கத் தூள்களை  எடுத்து விடுகிறார்கள். தன் வீட்டுக் பொடுசுகளுக்கு  சிறு சிறு நகைகள் செய்துவிடுகிறார்கள். அப்போதெல்லாம் நகை தொழில் செய்யும் கடைத்தெருவை அந்த கடை வாசலை தினமும் பெருக்கி எடுத்துச் செல்ல ஒரு கூட்டமே இருக்கும்.



இரண்டு பெண்டுகளுக்கு இப்படி ஏற்கனவே திருமணம் செய்தாயிற்று , மூத்தவள் மூன்று முறை வயிறு தள்ளி வந்தபோதெல்லாம் சீதனமாய் கொடுத்தாயிற்று,  இரண்டாமவளின் கணவனுக்கு அத்துணை வீரியமில்லையென்றாலும் , மனைவியிடம் வீரத்தை காட்டி அவ்வப்போது துளித்துளியாய் உருவிவிட்டான். பன்னிரெண்டாம்  வகுப்பு முடிக்கப் போகும் கடைக்குட்டியை கைப்பிடித்து கொடுப்பதே இப்போது இவளின் கவலை.


கவலை படிந்த கருத்த முகத்துத்  தங்கம்மாள், பிளாஸ்டிக் தோடின் திருகாணியை மெல்ல சரி செய்யும் போது கடைசிப்பெண் சரசு ஓடிவருகிறாள், "அம்மா நம்ம ஜில்லால  நான் தான் முதல் மதிப்பெண் , செலவில்லாம மேல படிக்கலாம் மா ". தங்கம்மாளின் போலிப் பற்கள் விடியலின் புன்னகையில் மின்னின

நகல்

மெல்லிய நாற்பது வாட் மின் குமிழ்விளக்கின் 
வெளிச்சம் தான் அங்கு , 
ஐம்பதுக்கு ஐம்பது சதுரடி அறை, 
அவளெப்போதும் அந்த அறையினுள் தான் , 
வடமேற்கு மூலையில் கிடப்பாள் 
திரைச்சீலையிடப்பட்ட அந்த ஓரத்தில் மெலிதான காற்றுக்காய் 
தளிகைவிசிறி ஓடிக்கொண்டிருக்க 
அன்று அவன் வருகிறான்,
சிலநாள் முன்னே மலர்ந்த சாம்பல் நிறத்து மொட்டிவள், 
அவன் வெளிர்த்தோற்றத்தையும் ,
கருமையான சுருட்டைமயிரையும் பார்த்து பல்லிளிக்க ,
அவன் மெதுவாக இவளை நோக்கி நெருங்கினான்.
அவன் தேகம் அவளின் மேல் அணைக்கையில் ,
வெட்கப்  புன்னகை பளிச்சென 
குறுக்கும்நெடுக்குமாய் தெறித்தன ,
வண்ணங்கள் அவளூடே கரைந்து 
கருப்புவெள்ளையாய் மாற முற்பட்டன.
சிலநிமிட சல்லாபத்தின் முடிவில் 
அந்த வீரியத்தின் நகல்கள் 
ரெண்டாகவோ , நான்காகவோ .
எச்சமாய் கீழே ..!!