Sunday, February 19, 2017

பாரதி பாரதி பாரதி !!!

பாரதியை போன்றதொரு ரசனைமிக்க கலைஞனை கவிஞனை  நாம் காண்பதரிது .  பக்திப்பாடல்கள் , தோத்திர பாடல்கள் , பாமாலைகள் ,வேதாந்தப் பாடல்கள் ,தேசபக்தி பாடல்கள் ,
தேசத்தலைவர்களுக்காய் பாக்கள் , காவியங்கள்  என எண்ணிலடங்கா படைப்புகளை நமக்கு அளித்திருக்கிறார் .

அவருடைய பிறந்தநாளன்று முகநூலில் நடக்கும் பாரதி பிறந்தநாள் நேரலை நிகழ்வுக்காக பாரதியின் இரண்டு அழகான படைப்புகளை கலந்து , மஹாகவியின் அதே வரிகளோடு , பொருட்சுவையோடு உங்களுக்காக இதோ அளிக்கிறேன் . மாயையை பழித்தல் எனும்  ஒரு வேதாந்தப் பாடலையும் ,  சிருங்கார ரசம் பொங்கும் கண்ணன் என் காதலன் எனும் ஒரு காதல் கவியத்தையும் கலந்து இதோ உங்களுக்காக .

தூண்டிற் புழுவினைப்போல் -- வெளியே
சுடர் விளக்கினைப்போல்,
நீண்ட பொழுதாக -- எனது
நெஞ்சந் துடித்த தடீ.

கூண்டுக் கிளியினைப்போல் –
தனிமை கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளையெல்லாம் –
மனது வெறுத்து விட்டதடீ.

உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ மாயையே
மனத் திண்மை உள்ளாரை நீ செய்வதும் ஒன்றுண்டோ மாயையே.

நீண்ட பொழுதாக -- எனது
நெஞ்சந் துடித்த தடீ.
மனத் திண்மை உள்ளாரை நீ செய்வதும் ஒன்றுண்டோ மாயையே


பாயின் மிசைநானும் -- தனியே
படுத் திருக்கையிலே
தாயினைக் கண்டாலும், -- சகியே,
சலிப்பு வந்ததடி.

வாயினில் வந்ததெல்லாம், -- சகியே,
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன், -- சகியே
நுங்க ளுறவையெல்லாம்.

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்    மாயையே
 நீசித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ மாயையே.
தாயினைக் கண்டாலும், -- சகியே,
சலிப்பு வந்ததடி
நீசித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ மாயையே

உணவு செல்லவில்லை; -- சகியே
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; -- சகியே,
மலர் பிடிக்கவில்லை;
குண முறுதியில்லை; -- எதிலும்
குழப்பம் வந்ததடீ;
கணமும் உள்ளத்திலே -- சுகமே
காணக் கிடைத்ததில்லை


என்னைக் கெடுப்பதற்கு  எண்ணமுற்றாய்கெட்ட மாயையே
நான்உன்னைக் கெடுப்ப துறுதி என்றேயுணர் மாயையே.
மணம் விரும்பவில்லை; -- சகியே,
மலர் பிடிக்கவில்லை
நான்உன்னைக் கெடுப்ப துறுதி என்றேயுணர் மாயையே.


பாலுங் கசந்ததடீ; -- சகியே,
படுக்கை நொந்ததடீ.
கோலக் கிளிமொழியும் -- செவியில்
குத்த லெடுத்ததடீ.

நாலு வயித்தியரும் -- இனிமேல்
நம்புதற் கில்லையென்றார்;
பாலத்துச் சோசியனும் -- கிரகம்
படுத்து மென்றுவிட்டான்

சாகத் துணியிற் சமுத்திரம்  எம்மட்டு  மாயையே
இந்தத்தேகம் பொய் யென்றுணர்தீரரை என் செய்வாய் மாயையே.

நாலு வயித்தியரும் -- இனிமேல்
நம்புதற் கில்லையென்றார்
இந்தத்தேகம் பொய் யென்றுணர்தீரரை என் செய்வாய் மாயையே



கனவு கண்டதிலே -- ஒரு நாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை, -- எவனோ
என் அகந்தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; -- சகியே,
மேனி மறைந்துவிட்டான்;
மனதில் மட்டிலுமே -- புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ.


இருமை யழிந்தபின் எங்கிருப்பாய் அற்பமாயையே
தெளிந்தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே.
வினவக் கண்விழித்தேன்; -- சகியே,
மேனி மறைந்துவிட்டான்;
தெளிந்தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே.

உச்சி குளிர்ந்ததடீ; -- சகியே,
உடம்பு நேராச்சு.
மச்சிலும் வீடுமெல்லாம் -- முன்னைப்போல்
மனத்துக்கு  ஓத்ததடீ.

இச்சை பிறந்ததடீ -- எதிலும்
இன்பம் விளைந்ததடீ.
அச்ச மொழிந்ததடீ; -- சகியே,
அழகு வந்ததடீ.

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ   மாயையே
சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல் அரசாட்சியை மாயையே
இச்சை பிறந்ததடீ -- எதிலும்
இன்பம் விளைந்ததடீ.
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ   மாயையே
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ   மாயையே


எண்ணும் பொழுதில்லெல்லாம்,
அவன்   கை இட்டவிடத்தினிலே
தண்என்றிருந்ததடீ;
புதிதோர்  சாந்தி பிறந்ததடீ
எண்ணியெண்ணிப் பார்த்தேன்;
 அவன்தான்யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம்
அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ.

என்னிச்சை கொண்டு உனையெற்றி விட வல்லேன் மாயையே
இனி உன்னிச்சை கொண்டு எனக்கு  ஒன்றும் வராது காண் மாயையே.
கண்ணன் திருவுருவம்  அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ.
கண்ணன் திருவுருவம்  அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ.

No comments:

Post a Comment