Sunday, February 19, 2017

போலி - ஒரு பக்க கதை

கொல்லனை கட்டிக்கிட்டு  கொல்லைல தான்  சோறு வெடிக்கணும் என தன் ஆச்சி கூறியதை நினைத்துக் கொன்டே வெறும் சுவற்றை வெறித்துக்கொண்டிருந்தால் தங்கம்மாள் .  தீட்டாத வைரத்தின் கருமை நிறம் என்றாலும் , அக்காளுக்கு ஏற்கனவே வைரத்தம்மாள் என பெயர் வைத்துள்ளதாலும்,  ஆசாரி குடும்பம் என்பதாலும்  வைத்தபெயர் அது. தங்கத்தை நகையாக்கும் தொழில் என்பதால் இவர்களுக்கு வருமானம் அதிகமாகக் கிடைக்கும் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அப்படியல்ல, இப்போது உள்ள நிலையே வேறு. அவர் இந்தத் தொழிலுக்கு வந்தபோது இருந்த நிலைமை வேறு.


இந்த கைராசிக்காரி புதிதாக திருமணம் ஆகி வந்த நேரத்தில் , பலரும் வந்து தங்கத்தைக் கொடுத்து,  திருமண விழாக்களுக்கும் மற்ற மங்கல விழாக்களுக்கும் தங்கள் விருப்பத்துக்கேற்ப விதவிதமான வடிவங்களில், நகைகளை செய்து கொடுக்கச் சொல்வார்கள். அப்போது ஏதோ சூதனமாக சேர்த்து வைத்த காசில் இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்தாயிற்று . முதல் வாரிசின் மூன்றாவது பிரசவத்திற்கு ஒரு மாதம் முன்னர் தாலியறுத்து வீட்டோடு ஒடுக்கப்பட்டால் தங்கம்மாள்.  புகையோடே குடியிருந்த இவளுக்கு , இன்னும் ஒரு பெண்ணை கரையேற்ற வேண்டுமே என்ற கவலை நுரையீரலை அரிக்க தொடங்கியது.



நகை செய்யும் ஆசாரி ஆதலால்  வீட்டில் வாசலில்  பட்டறைகள், கொல்லையில் சமைக்க , படுக்க, உடுக்க ஒரே அறை , வயக்காட்டில் நீரோடையருகே கழிவறை என இருந்தது அவள் வீடு.  குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடுவர். நகை செய்வோர் தங்கத்தைக் கழுவிய நீரை சாக்கடையில் கொட்டிவிடுவதில்லை.  அந்நீரைக் காய்ச்சி அதில் இருக்கும் தங்கத் தூள்களை  எடுத்து விடுகிறார்கள். தன் வீட்டுக் பொடுசுகளுக்கு  சிறு சிறு நகைகள் செய்துவிடுகிறார்கள். அப்போதெல்லாம் நகை தொழில் செய்யும் கடைத்தெருவை அந்த கடை வாசலை தினமும் பெருக்கி எடுத்துச் செல்ல ஒரு கூட்டமே இருக்கும்.



இரண்டு பெண்டுகளுக்கு இப்படி ஏற்கனவே திருமணம் செய்தாயிற்று , மூத்தவள் மூன்று முறை வயிறு தள்ளி வந்தபோதெல்லாம் சீதனமாய் கொடுத்தாயிற்று,  இரண்டாமவளின் கணவனுக்கு அத்துணை வீரியமில்லையென்றாலும் , மனைவியிடம் வீரத்தை காட்டி அவ்வப்போது துளித்துளியாய் உருவிவிட்டான். பன்னிரெண்டாம்  வகுப்பு முடிக்கப் போகும் கடைக்குட்டியை கைப்பிடித்து கொடுப்பதே இப்போது இவளின் கவலை.


கவலை படிந்த கருத்த முகத்துத்  தங்கம்மாள், பிளாஸ்டிக் தோடின் திருகாணியை மெல்ல சரி செய்யும் போது கடைசிப்பெண் சரசு ஓடிவருகிறாள், "அம்மா நம்ம ஜில்லால  நான் தான் முதல் மதிப்பெண் , செலவில்லாம மேல படிக்கலாம் மா ". தங்கம்மாளின் போலிப் பற்கள் விடியலின் புன்னகையில் மின்னின

No comments:

Post a Comment