6 ஆண்டுகள் முன்பு பல்லவன் ரயிலில் திருச்சியிலிருந்து கிளம்பி சென்னை மாநகரம் வந்து , பதின்மூன்றாயிரம் சம்பளத்தில் ஆரம்பித்தது தகவல்தொழில்நுட்ப வேலைவாய்ப்பு எங்களுக்கு குழந்தைகள் தினத்தன்று. சுமார் மூன்று ஆண்டுகள் நாங்கள் ஒன்றாக இருந்திருப்போம் . ஒற்றை 18*15 விடுதி அறையில் ஆரம்பித்து , நேரக்கணக்கிட்டு காலைக்கடன் , குளியல் முடித்து உணவு டப்பி அடைத்து சென்று , பின்னர் மூன்று அறைகள் இருக்கும் வீடு வாடகைக்கு மாறி ஒரு ஒருவருடம் கடந்து , 4அறைகள் கொண்ட பெரிய வீட்டில் மாறி , இப்போது வெவ்வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
தனி வீடு எடுத்த காலங்களில் நாள் அட்டவணை போட்டு மதிய உணவு சமைப்பதும் , பாத்திரம் கழுவுவதும் , காய் கறிவாங்குவதும் , கழிவறை/குளியலறை கழுவுவதும் என செய்து வந்தோம். கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் எங்களுக்குள் விட்டுக்கொடுத்து ஒன்றாகவே இருந்திருக்கிறோம். அரசியல் பேசும் போது ஒருவரை ஒருவர் எதிர்ப்பதும் , ஆதித்தியா சேனல் பார்க்கும் போது மீண்டும் சேர்வதும் , ஐபிஎல் வந்தவுடன் மீண்டும் முட்டிக்கொள்வதும் , அஜித் விஜயென இரவுபகலாக வாதிடுவதும் என காலம் கலகலப்பாக ஓடிய தருணங்கள் அவை.
எப்போதுமே மாத பட்ஜெட் மனதுக்குள் போட்டுவிடுவோம். சிலர் டைரிக்களில் , சிலர் பழைய நோட்டில் , சிலர் தொலைபேசியில் , சிலர் போடாமலும் அளவாக செலவுகள் செய்து வந்தோம். மேடவாக்கம் குடிசைக்கடைகளில் எங்களின் பல நாள் காலை உணவு சில்லறைகளில் முடிந்திருக்கிறது. 'இன்று நம்மக்கடையில் நீங்கள் தோசைக்கு பதில் இட்லி தான் சாப்பிடவேண்டும்' என கடைக்காரர் உறவினரை போல் உரிமையாக எங்களுக்கான மெனுவை கூறியிருக்கிறார் .
ஒன்றாக சேர்ந்து வெளியூர் செல்ல வேண்டுமானால் , ஒரு முதல் தொகையை என்னிடம் அனைவரும் தந்து விடுவார்கள் . பின்னர் நாள் முழுவதுமாக செலவுசெய்து மீண்டும் வீடு வந்தவுடன் கணக்கு , ரசீதெல்லாம் வைத்து எங்கள் கணக்குப்பிள்ளை ராகவன் சரிபார்க்க மீதி
செலவுபாக்கியை சரிசெய்து கொள்வோம். விடியற்காலை 3மணிக்கு குளித்து கிளம்பி சோளிங்கர் சென்றோம், திருமண வரம் வேண்டி திருவிடவெந்தை , உல்லாசமாக மஹாபலிபுரம் , திருவல்லிக்கேணி , மெரினா கடற்கரை என பட்ஜெட் சுற்றுலாக்களில் பயணப்பட்டோம்.
செலவுபாக்கியை சரிசெய்து கொள்வோம். விடியற்காலை 3மணிக்கு குளித்து கிளம்பி சோளிங்கர் சென்றோம், திருமண வரம் வேண்டி திருவிடவெந்தை , உல்லாசமாக மஹாபலிபுரம் , திருவல்லிக்கேணி , மெரினா கடற்கரை என பட்ஜெட் சுற்றுலாக்களில் பயணப்பட்டோம்.
மாத முடிவில் பால்கணக்கு , மளிகை கணக்கு , கரண்டு பில் , வாடகை கணக்கு என எல்லாம் சரிபார்த்துக்கொள்வோம். பிரசன்னாவும் சரவணனும் கணக்குக்குள் வந்து கேள்வி கேட்டதில்லை. ராகவனின் கறாரான தணிக்கை அறிக்கைக்கு நாங்கள் கட்டுப்பட்டோம்.
மாதம் இருமுறை சிலர் சொந்தஊர்க்கு செல்வதும் , முருகன் தியேட்டரில் ஐம்பது ரூபாய்க்கு படம் பார்ப்பதும் , மொட்டைமாடியில் வெட்டி அரைட்டை அடிப்பதும், T51/C51 பேருந்தில் நாள் பாஸ் வாங்கி சும்மாக்காச்சும் ஏறிஇறங்கி பயணித்ததுமென எளிமையாக கடந்துவிட்டிருந்தோம்.
மாதம் இருமுறை சிலர் சொந்தஊர்க்கு செல்வதும் , முருகன் தியேட்டரில் ஐம்பது ரூபாய்க்கு படம் பார்ப்பதும் , மொட்டைமாடியில் வெட்டி அரைட்டை அடிப்பதும், T51/C51 பேருந்தில் நாள் பாஸ் வாங்கி சும்மாக்காச்சும் ஏறிஇறங்கி பயணித்ததுமென எளிமையாக கடந்துவிட்டிருந்தோம்.
சற்றே ஆரவாரமாக சரவணன் , கவலையற்ற பிரசன்ன , மனதுக்குள் கணக்குபோட்டுக்கொண்டு நான் , நிதானித்து திட்டமிட்ட ராகவன் என ஒரு விசு திரைப்படமாக நாங்கள் இருந்தநாட்கள் மனத்திரையில் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்தாவதாக உடன் இருந்த கார்த்தியால் எங்களுக்கு தொல்லையில் , எங்களால் அவனுக்கு தொல்லையிலை. பின்நாளில் அஸ்வின் உடன் இணைய சமையல் பளு குறைந்தது. அவன் கைப்பக்குவம் சற்றே நன்றாக இருக்கும் .
No comments:
Post a Comment