லண்டனிலிருந்து
ஐம்பது மைலில் இருக்கும் பேசிங்ஸ்டோக் ரெயில்நிலையத்தின் மிக அருகில் இந்த பாலம் இருக்கின்றது. ரயில் நிலையத்தின் தெற்கு வாயிலுக்கு இடப்புறம் முப்பது
படிகள் கீழே இறங்கினால் சாலை ஐந்தாக பிரியும் ரவுண்டானா இருக்கும். மேற்கு நோக்கி செல்லும்
சாலையின் அருகே போக்குவரத்து சிக்னலின் கூப்பிடு
தூரத்தில் இந்த பழைய இரும்பு ரயில் பாலம் திடகாத்திரமாக நிற்கிறது. ஏறி,இறங்கி ,வளைந்து,
நெளிந்து நம்மை அலையவிடும் சாலைகளை வேடிக்கை பார்த்தபடி கம்பீரமாக நிற்கும். இங்கு
அலுவல் வேலையாக வந்தபின்னர் இந்தப்பாலத்தை நிதமும் கடக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு கதை சொல்கிறது .
அந்த மஞ்சள் மாலை
நீண்டுகொன்டே சென்றது . இந்த வருடத்தின் அதிக வெட்பமான நாளாக அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பளிச்சென கண் கூசும் சூரியனிடமிருந்து தப்பிக்க பல பறவைகள் அந்த பாலத்தின் அடியிலிருக்கும்
இரும்பு அடித்தள கம்பங்களில் ஒளிந்து கொண்டன. அது ஏற்கனவே கூட்டுக்குடும்பமாக வாழும்
கருங்கழுத்தனின் குடும்ப இடமாகும். மனிதர்கள் வரும் முன்போ, ஏன் அந்த பாலமே வரும் முன்பு
கூட அதன் மூதாதையர்கள் அங்கு குடிவந்திருக்கலாம். அவன் மட்டும் அந்த கூட்டத்தில் தனியாக தெரிவான். அங்கிருக்கும் குடும்பத்தார் அனைவரின் கழுத்தும் இளம்பச்சையாக
இருக்கும் , ஆனால் இவனுக்கு மட்டும் சற்றே கருமையாக மின்னும். அதனால் இவனை கருங்கழுத்தன்
என அழைக்கின்றேன். மற்றவர்கள் போலத்தான் இவர்களும் காதல்ரசம் பொழியும் போது அதன் அனுபவத்தை
கணீர் குரல் கொண்டு கத்திக்கொண்டாடும் , மற்ற நேரங்களில் கீச்சிட்டும் , ரெக்கைகளை
அடித்தும் சத்தம் செய்து கொண்டு விளையாடிக்கொண்டிருக்கும்.
அந்த மாலையின் சகுனங்கள்
சரியாக இல்லை . அவனை பார்க்க நான் அலுவலகம் விட்டு விரைவாக கிளம்பி வந்து கொண்டிருந்தேன்
.
இரண்டு மணிநேரம்
முன்னர் ,
பெரியகுடும்பம்
என்பதால் அந்த சுற்றுவட்டாரமே சற்று நசநசவென சத்தமாக இருக்கும். அந்த மாலை வேலை எதிர்பாராமல்
வந்த விருந்தாளிகளால் கருங்கழுத்தனின் வீட்டார் திக்குமுக்காடி போனர். வெயில் தாங்காமல்
பலர் அந்த இதமான, குளிரான பழைய பாலத்தின் அடியில் இருக்கும் இவன் குடும்பத்தாரின் வீட்டுக்கு
வந்துவிட்டிருந்தனர். வீட்டின் சுற்று பெரியதாக
இருப்பினும் தங்குமிடம் சிறிது தான். இரும்பு பாலத்தின் அக்கம்பிகளில் அமரும்
அகலம் ஒரு ஜான் மட்டுமே . ஒருவர் அமரலாம் , இருவர் நிற்கலாம் . ஆனால் நீளம் சுமார்
எண்பது அடி இருக்கும் , இதைப் போல் மூன்று பெரிய ராச்சத தூண்கள் இருந்தால் அவர்கள்
குடும்பத்துக்குள் சமாளித்துக்கொண்டனர்.
குட்டிகளையும்
, முட்டைகளையும் பத்திரப்படுத்த ஒரு தூண் தனியாக ஒதுக்கிவைத்திருந்தான் கருங்கழுத்தன்.
ஆனால் இன்று வந்த கூட்டத்தை உள்ளே அழைக்க வேண்டி வந்ததால் , பாதியை அவர்களுக்கு குடுத்துவிட்டு
, அவனே அங்கு சென்று நின்றுகொண்டான். பொறுக்கிய சுள்ளிகளில் முட்டைகள் ஓரமாக இருந்தன.
அளவுக்கதிமாக அங்கு கூடிய கூட்டத்தால் ஒரு வித கலவர நிலையை அவன் உணர்ந்திருந்தான்.
தன் வீட்டு இளையர்கள் அவன் மனமறிந்து அமைதியாக இருந்தனர் .
அவர்களுக்கும் சற்றே பதற்றமாக
இருந்தது.
புதிதாய் வந்திருந்த இளையர்களுக்கு அந்த இதமான குளிரும் , நிழலும் , இருட்டும்
ஒரு வித பரவச நிலையை அளித்திருக்க அவை வேகமாக ரக்கையடித்து அந்த பாலத்தின் அடியில் ஓட ஆரம்பித்தன.
கீழே சாலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
முன்பே கூறியது போல் பழைய பாலம் என்பதால் மேலே குடியிருக்கும்
புறாக்களை போல் , கீழே பெருச்சாளிகள் அதிகமாக இருந்தன. மேலே நடக்கும் சலசலப்பினை
பார்த்து கோவமான எலிகளில் ஒன்று விருட்டென சாலையை கடக்க முற்பட்டு ஓட, சிறு வயது பெண்
ஓட்டிவந்த மகிழுந்தை சடக்கென்று நிறுத்தினாள். வலப்புற முன்சக்கரம் பாதி எலியை பதம்
பார்த்திருந்து. ஒரு எலிக்கா இத்தனை என நினைக்கவேண்டாம், அதன் பருத்த சரீரம் சிறிய
பூனையின் அளவிருக்கும்.
தரையிலும் ஒரு வித பதற்றம் தொற்றிக்கொண்டது.
ஏற்கனவே எலிகளால்
குஞ்சுகளை இழந்த மேல்வீட்டாரில் இருந்த கோபக்கார குடும்பக்காரன் ஒருவன் அந்த எலியை
கொத்த , அதன் நிலையை காண விருட்டென சிறகடித்து கீழே பறந்தான் . இளையர்கள் பின்தொடர்ந்தனர்
. சாலையில் தரையிலிருந்து இரண்டாள் உயரத்துக்கு புறாக்கள் கூட்டம் வட்டமடிக்க , மக்கள்
சற்று தயங்கி க்ரெஈஈஈன் க்ரீஈஈன் என ஹார்ன் அடிக்க ஒரு வித குழப்பம் முற்றுமாக அங்கே
அரங்கேறியது.
மூன்றாவது தூணின்
அந்த ஓரத்தில் இருந்த கருங்கழுத்தனின் பார்வை ஒட்டுமொத்த நிகழ்வையும் கிரஹித்துக்கொண்டு
, இந்நிலை விரைவாக கழியவேண்டிக் கொண்டிருந்தது. ஒருபுறம் குஞ்சுகளையும் , முட்டைகளையும்
காக்க வேண்டியகட்டாயமும் , மறுபுறம் நெறிதவறி ஆர்பரித்துக்கொண்டிருந்த கூட்டத்தினை
அடக்கவும் முடிவெடுக்க முடியாமல் தவிக்க , வெள்ளைமடி தான் குஞ்சுகளை பார்த்துக்கொள்கிறேன்
என சொன்னதால் பறந்துசென்று இளையர்களை அடக்க முற்பட்டது.
அவன் வீட்டார் , இவன் பறக்க
எத்தனிப்பதை கண்டு பெருத்த ஒலிகளை
எழுப்ப ஆரம்பித்தனர் . அனைவரின் குரலும் ஓர் சீராக அந்த பாலத்தில் எதிரொலித்தது. புதிய
விருந்தாளிகள் திரும்பிப்பார்க்கவும் , தூணை நெம்பிக்கொண்டு சிறகுகளை அகல விரித்துக்கொண்டு
, குரல் எழுப்பியவாரு கம்பீரமாக பறக்க ஆரம்பிக்கவும் அனைவரும் ஒரு வித அமைதிக்கு வந்தனர்.
ஒவ்வொருவரும் தூண்களை நோக்கி திரும்ப ஆரம்பித்தனர்
. சற்றே பயந்து போன மூன்று இளைஞர்கள் திசையறியாமல் மூன்றாம் தூணை நோக்கி விரைய , அதனை
இடக்கண்ணின் ஓரத்தில் கவனித்தவன் போல் இவனும் அங்கே சீறினான். அந்த நொடி முட்டைகளை
முழுவதுமாக மறைக்க வெள்ளைமடி அதனை அணைப்பது போல் சிறகு விரிக்க , கவனியாமல் மூன்று
இளைஞர்களும் அதன் மேல விழ , தடுமாறிய வெள்ளைமடி முட்டைகளை தவறவிட்டது. பதறிப்போன ,கோபமான
கருங்கழுத்தன் அதனை தாவிப் பிடிக்க முற்பட சாலையில் வேகமாக வந்த அரசுப் பேருந்து இடிக்கவும் துடிதுடித்து கீழே விழுந்தான்.
இப்போது ,
சாலை அமைதியாக இருந்தது
. அந்த தூண்கள் காலியாக இருந்தன . ஓரத்தில் குப்பையோடு குப்பையாக , தன் குடும்பத்தினரின் கொட்டிக்கிடந்த மலங்களும் , சாலையில் உடைந்த முட்டைகளும்
. கருங்கழுத்தனும் , பெருச்சாளியும் குவிந்துக்கிடந்தன. அந்த மாலை முடிவை நோக்கிப்
பயணிக்க , இருள் புக ஆரம்பித்தது. ஒரே மாலையில் வாங்கிய காவுக்கு பரிசாக பழைய இரும்புப்பாலம்
அமைதியான மயாணமாக காட்சியளித்தது.
No comments:
Post a Comment