Sunday, June 21, 2026

90களின் தந்தையர்கள்

 ஒரு தியாகத்தின் நிழல்


​நான் பார்த்த தந்தையர்கள் பெரும்பாலும் கடுகடுப்பாகவே இருந்தனர்.

தொண்ணூறுகளில் ‘தந்தையர் தினம்’ இருந்ததாக நினைவில்லை.

​ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் என்பதால், பெரும்பாலும் தீபாவளி போனஸில் முன்பணம் வாங்கி, பள்ளிச் சேர்க்கை, காலணிகள், புத்தகப் பை என வாங்குவதில் தந்தையர்கள் பெரும் கடுகடுப்புடனேயே இருந்தனர். மே மாதத்தின் கத்தரி வெயிலும், ஜூனின் கடனின் சுமையும் என அவர்களின் முகங்கள் சற்று இறுகிய மாதங்கள் அவை.

​அட்லஸ் சைக்கிளில் சித்தப்பா வீட்டிற்கும், அத்தை வீட்டிற்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் செல்வதும், மீதமுள்ள நாட்கள் இராப்பகலாக உழைப்பதுமே அவர்களின் பெரும்பாடு. என்னைப் போன்ற அடம் பிடிக்கும் குழந்தைகளிடமிருந்து தப்பித்து, 5 மணி நேர உடலுழைப்பிற்கு ஏற்ற உறக்கம் மட்டுமே அவர்களின் சொர்க்கம்.

​சில நாட்களில் ஐந்து ரூபாய்க்கு மசால் வடையும் மெது வடையும்,

​சில நாட்களில் அதே ஐந்து ரூபாய்க்கு இரண்டு பப்ஸ்,

​இன்னும் சில நாட்களில் எனக்கு ரொம்பப் பிடித்த, தேங்காய் மற்றும் செர்ரி பழம் போட்ட பேக்கரி தில்பசந்த்...

​காலையில் நான் பூஸ்ட் குடித்தவுடன் அன்றைய தினமலரை என்னிடம் கொடுப்பதும், மாலையில் விளையாடிவிட்டுத் தாமதமாக வந்தால் அதே பேப்பரால் அடிப்பதுமாக... '7G ரெயின்போ காலனி' படத்தின் தந்தையை நாம் அனைவரும் நம் வீட்டில் கண்டிருப்போம்.

​இருபது ரூபாய் பாரகான் ஸ்லிப்பரில் இருபது கிலோமீட்டர் மிதிவண்டியில் போய் வந்து, இருநூறு ரூபாய்க்கு பாட்டா பவர் ஷூவும், இரண்டாயிரம் ரூபாய் பள்ளிக் கட்டணமும் என, தன் வயிற்றைக் காய்ந்து எங்களுக்காக வாழ்ந்த தந்தையர்கள் பெரும்பாலும் கடுகடுப்பாகவே இருந்தனர்.

​சில மாதங்கள் நகை அடகு வைத்துக் கடன், போனஸ் வந்ததும் அதை மீட்டு, தீபாவளிக்குப் புதுத் துணி, மீண்டும் தாத்தாவிடம் கடன் வாங்கி ஸ்கூல் பீஸ், அந்தப் பொங்கலுக்குப் புத்தாடை... இப்படியே கையில் ஒட்டாத அந்த காகிதக் கடனோடு தங்கள் தலைமுறையை நிமிர்த்தி விட்டனர் தொண்ணூறுகளின் தந்தையர்கள்.

​அம்மாவிடம் ஒரு கடுகடுப்பு,

மாமாக்களிடம் ஒரு எரிச்சல்,

மருமகன்களிடம் ஒரு இணக்கம்,

தம்பிகளிடம் ஒரு பிணைப்பு...

பெரும்பாலும் எல்லா தொண்ணூறுகளின் தந்தையும் ஒரே சாயல் தான்.

​தந்தைகள் அன்று கடுகடுப்போடு இல்லாது இருந்திருந்தால், இன்று நான் எல்லாம் கடல் கடந்து வந்து இந்த நிலையை அடைந்திருப்பேனா என்று கண்டிப்பாய் தெரியவில்லை.

​நீ உழைத்துத் தின்னத் தவறிய உணவை, இன்று நுண்ணுயிரிகள் உன்னில் தின்று, வெறும் நினைவலைகளாய் நீ இருக்கிறாய்...!

​நன்றி அப்பா!

1 comment:

  1. உண்மை மற்றும் உருக்கமான பதிவு...

    ReplyDelete