Saturday, October 20, 2018

மார்க்கெட் தாத்தாவின் பெட்டிக்கடை.

மார்க்கெட் பெட்டிக்கடை

பணத்தின் மீது எப்போதும் ஆசை உண்டு . பேருந்து , மகிழுந்து , ரயில் , மொபெட் , சைக்கிள் , விமானம்  வரை பயணித்துவிட்ட போதிலும், பள்ளிக்காலங்களில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்திரிலிருந்து  , டிவிஎஸ் நகருக்கு தினம் 2கிலோமீட்டர் நடைப்பயணத்தின் நினைவுகள் திடீரென மனதுக்குள் திரைவிரித்து ஆடுகின்றன. மதியம் 12.45மணிக்கு தொடங்கும் மதிய ஷிப்ட்டில் படித்த படியால் சுமார் 11மணிக்கு நானும் என்ன அம்மாவும் நடைப்பயணத்தை தொடங்குவோம். பராசக்தி குறுக்குத்தெருவிலிருந்து வெளியே வந்து , ராமைய்யா தெருவின் வழியே வந்தால் , மருதுபாண்டியர் சிலைகள் நிற்கும்  ஜெயஹிந்த்புரம் முக்கிய சாலையை அடைவோம். 90களில் அது  ஒரு வழிச்சாலை தான் , இன்று விரிவுபடுத்தப்பட்டு பிரதான சாலையாக காட்சியளிக்கலாம் . 19 B, ஒரே ஒரு பேருந்து மட்டுமே அந்த சாலையில் வரும். வில்லாபுரம் குடியிருப்பு முதல் அண்ணா நகர் வரை செல்லும் அந்த பேருந்தின் அட்டவணை அதன் ஓட்டுனரை தவிர யாரும் அறிந்ததில்லை. 

அந்த மருது பாண்டியர் சிலைகளின் இடப்புறம் திரும்பி ஜீவா நகர் , ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் , வாய்க்கால் , பொன்மாரி நகர் வழியே  டிவிஎஸ் நகர் வருவது தான் எங்களின் பாதை. மருது சகோதரர்களின் இடப்புறம் முத்துமாரியம்மன் கோவில் , வலப்புறம் வீரகாளியம்மன் கோவில் இருக்கும் . இந்த பகுதி முழுவதும் நிறைய குட்டிக்குட்டி கோவில்கள் அமைந்திருக்கும். ஒருமுறை என்னுடைய கால்கள் மரத்துபோய் நடக்க முடியாமல் இருக்கையில் வீரகாளியம்மன் கோவிலின் விபூதி குங்குமமும்  ,முத்துமாரியின் வேப்பிலை நீரும் தான் என்னை குணமாக்கியதாக செய்தி . முத்துமாரியம்மன் கோவிலின்  பூசாரி வயதானவர் , அமைதியானவர் . ஆனால் அந்த கோவிலில் நான் பெரும்பாலும் நின்றதில்லை. அவர் கொடுக்கும் வேப்பிலை நீரின் கசப்பு , என்னை சாலையின்  மறுபுறமாகவே நடக்கவைத்திருந்தது. பலநேரங்களில் அந்த கோவிலை கடக்க வேண்டாமே என ராமையா தெரிவிலிருந்து புலிப்பாண்டியன்(ராம்கி உங்கள் தெரு ) தெருவழியாக மெயின் ரோட்டுக்கு வந்துவிடுவேன்.

நேராக முக்கிய சாலை வழியாக வந்தால் , வீட்டுக்கும் பள்ளிக்கும் நடுமத்தியமாக ஜீவா நகர் பேருந்து நிறுத்தம் . எனக்கு மிகவும் பிடித்த நான்குமுனை சந்திப்பு இது . ஒரு புறம் செர்ரிப்பழம் உதிர்த்த தில்பாசந்த்  கிடைக்கும்  அமுதம் அடுமனை, மறுபுறம் நாவூறும் அருண் ஐஸ்கிரீம் ஹரன் ஐஸ் கடை , இன்னொரு முனையில் கரும்புச்சாறு , பழக்கடைகள் என நாவுக்கு தீனியோ இல்லையோ மனதுக்கு மிகசுவையாக இருக்கும். இவையெல்லாமே பத்து ரூபாய்க்கு மேலான சமாச்சாரங்கள். கண்ணுக்கும் மனதுக்கும் இனிப்பானவை. இங்கிருந்து  9B , 9C என வேறு வழியாக டிவிஎஸ் பள்ளியை கடந்து செல்லும் பேருந்துகள் கிடைக்கும்.

இதனை கடந்து ஐநூறு அடி தூரத்தில்  ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட்.  வலப்புறம் காய்கறி சந்தையும் , இடப்புறம்  மீன் சந்தையும் முதலில் இருந்தது . பின்னர் அங்கே ஒரு சுகாதார பூங்கா அமைத்ததால் காய் சந்தையும் கறிச்சந்தையும் ஒன்றாக குடியேறிவிட்டன. சந்தையின் அருகாமையில் அவனியாபுரத்து ஏரி நீர் வாய்க்காலாய் ஓடிக்கொண்டிருக்கும். சந்தையின் அருகே நீர்த்தேக்கம் என்றால் அந்த நீரின் நிலையை நாம் அறிந்துகொள்ளலாம்.
அந்த கலங்கிய நீரோடையின் முட்டுச்சந்தில் தான் மிகப்பெரிய ஆலமரம் நிழல் கொடுத்துக்கொண்டிருக்கும்  .

சாலை வளைந்து டிவிஎஸ் நகர் பக்கமும் , நேராக பழங்காநத்தம் பக்கமும் பிரியும் அந்த சந்திப்பில் ஒரு புறம் மார்க்கெட் , மறுபுறம் நீரோடை , ஆலமர நிழல் சூழ அமைந்திருந்தது அந்த தாத்தாவின் பெட்டிக்கடை.

ஐந்து பைசா புளிப்பு மிட்டாய் , ஐந்து பைசாவுக்கு ஒரு பாக்குமிட்டாய் ,  ஐந்து பைசாவுக்கு ஒரு சூடமிட்டாய் ,   காலணாவுக்கு ஒரு தேன்மிட்டாய் , காலணாவுக்கு ஒரு கடலைமிட்டாய் , காலணாவுக்கு ஒரு கொக்கோமிட்டாய்,    காலணாவுக்கு ஒரு கம்மர்கட்டு இதெல்லாம் சாதாரண தீனிகள்.  ஐந்து  பைசாவுக்கு ஒரு கலர் பப்படம் தான்  அதிகமாக விற்றுத்தீரும். கம்மியான விலையில் இருக்கும் பொருட்களை விட விலையுயர்ந்த அந்த லாலிபாப் தான் எனக்கு பிடித்த பண்டம்.

அது சாதாரண லாலிபாப்பில்லை . எத்தனை நிறங்கள் மொத்தமுள்ளனவோ அத்தனை நிறத்திலும் அங்கு லாலிபாப் கிடைக்கும்.  அந்த லாலிப்பாப்புகளை பிரித்து உடனே தின்று விடமுடியாது. அந்த மிட்டாய் பாகத்தை சுற்றி நகலான ருபாய் நோட்டுகள் ஒட்டப்பட்டிருக்கும். அப்படி ரூபாய்நோட்டுகளை மெல்ல கிழியாமல் முதலில் பிரிக்கவேண்டும். பிரித்த பின்னர் அதன் காகித ரூபாயின் பின்னால் இருக்கும் ஆயிரத்தில் ஒரு பங்கு சுவையை நாவின் சுவைஅரும்புகளுக்கு முதல் படையல் வைக்கவேண்டும்.

அதன் பின்னர் அந்த எச்சில் பட்ட காகித ருபாயை அரை ட்ராயரின்  உள்பக்கத்துணியில் துடைக்கவேண்டும். பின்னர் அது  பத்திரப்படுத்தப்பட்டு நட்ராஜ் ஜாமெட்ரி பெட்டிக்குள் செல்ல வேண்டும் . நக்கிய நாவின் ஈரம் விரல்களில் காயும் முன் இத்தனையும் முடிக்கப்பட்டு , லாலிபாப் நம் உள்நாக்கில் மணிஅடித்திருக்கும் . பல்துலக்க கற்றுக்கொடுக்கப்பட்ட அத்தனை வழிமுறையும் கடைபிடிக்கப் படவேண்டும். தொடர்ந்து நக்காமல் நடுவில் சிறிது நேரம் லாலிபாப் வாய்க்குள்ளே மாயணப்படுத்தப்படவேணும் . அப்போது சுரக்கும் தித்திப்பான எச்சில் மேல்நாக்கால் சுழற்றப்பட்டு , கீழ்வழிய ஓடி முழு வாயும் தித்திப்பாக்கப்பட்டவுடன்  முழுங்கப்படவேண்டும்.

இத்தனை சுகங்களையும் ஒரு சிறுவன் நடந்துகொண்டே பள்ளிநோக்கி செல்கையில் அனுபவிக்க நேரமில்லாமல்  ஏற்பட்ட கொடுமை யாருக்கும் நேர்ந்துவிடக்கூடாது. லாலிபாப்புகளின் ருபாய்கள்  என் கண்டக்டர் விளையாட்டுக்கு உபயோகமானதாக இருந்தன. சில்லறை கொடுத்து லாலிபாப் வாங்கி அதில் ருபாய் சம்பாதித்த சுகமே அலாதி.

ஆயிரம் , ஐநூறு ரூபாய்கள் அப்போது இருந்ததே தெரியாத காலம். வெறும் பத்து ரூபாய்க்கு எத்தனையோ மதிப்பிருந்தது. லாலிபாப்புகள் எனக்கு பலநூறு ரூபாய்கள் பரிசாக கொடுத்தன. மூன்று ஆண்டுகளில் பள்ளியின் அருகில் இடம்பெயர்ந்தபிறகும் சனி ஞாயிறுகளில் அங்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். திடீரென ஒரு நாள் தாத்தாவின் கடை மூடப்பட்டுவிட்டது . அவருக்கு அன்றே தெரிந்திருக்கிறது மதிப்பில்லா நோட்டுகளை நாம் விற்றுவிட்டு  கிளம்பிவிடலாம் , மதியிலா இவர்கள் அதனோடு பாடுபடட்டும் என்று.   

Sunday, August 5, 2018

இரும்புப்பாலம்


லண்டனிலிருந்து ஐம்பது மைலில் இருக்கும்  பேசிங்ஸ்டோக் ரெயில்நிலையத்தின்  மிக அருகில்  இந்த பாலம் இருக்கின்றது. ரயில் நிலையத்தின் தெற்கு வாயிலுக்கு இடப்புறம் முப்பது படிகள் கீழே இறங்கினால் சாலை ஐந்தாக பிரியும் ரவுண்டானா இருக்கும். மேற்கு நோக்கி செல்லும் சாலையின் அருகே  போக்குவரத்து சிக்னலின் கூப்பிடு தூரத்தில் இந்த பழைய இரும்பு ரயில் பாலம் திடகாத்திரமாக நிற்கிறது. ஏறி,இறங்கி ,வளைந்து, நெளிந்து நம்மை அலையவிடும் சாலைகளை வேடிக்கை பார்த்தபடி கம்பீரமாக நிற்கும். இங்கு அலுவல் வேலையாக வந்தபின்னர் இந்தப்பாலத்தை நிதமும் கடக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு  கதை சொல்கிறது .

அந்த மஞ்சள் மாலை நீண்டுகொன்டே சென்றது . இந்த வருடத்தின் அதிக வெட்பமான நாளாக அன்று அறிவிக்கப்பட்டிருந்தது. பளிச்சென கண் கூசும் சூரியனிடமிருந்து தப்பிக்க பல பறவைகள் அந்த பாலத்தின் அடியிலிருக்கும் இரும்பு அடித்தள கம்பங்களில்  ஒளிந்து கொண்டன. அது ஏற்கனவே கூட்டுக்குடும்பமாக வாழும் கருங்கழுத்தனின் குடும்ப இடமாகும். மனிதர்கள் வரும் முன்போ, ஏன் அந்த பாலமே வரும் முன்பு கூட அதன் மூதாதையர்கள் அங்கு குடிவந்திருக்கலாம். அவன்  மட்டும் அந்த கூட்டத்தில் தனியாக தெரிவான். அங்கிருக்கும்  குடும்பத்தார் அனைவரின் கழுத்தும் இளம்பச்சையாக இருக்கும் , ஆனால் இவனுக்கு மட்டும் சற்றே கருமையாக மின்னும். அதனால் இவனை கருங்கழுத்தன் என அழைக்கின்றேன். மற்றவர்கள் போலத்தான் இவர்களும் காதல்ரசம் பொழியும் போது அதன் அனுபவத்தை கணீர் குரல் கொண்டு கத்திக்கொண்டாடும் , மற்ற நேரங்களில் கீச்சிட்டும் , ரெக்கைகளை அடித்தும் சத்தம் செய்து கொண்டு விளையாடிக்கொண்டிருக்கும். 

அந்த மாலையின் சகுனங்கள் சரியாக இல்லை . அவனை பார்க்க நான் அலுவலகம் விட்டு விரைவாக கிளம்பி வந்து கொண்டிருந்தேன் .

இரண்டு மணிநேரம் முன்னர் ,
பெரியகுடும்பம் என்பதால் அந்த சுற்றுவட்டாரமே சற்று நசநசவென சத்தமாக இருக்கும். அந்த மாலை வேலை எதிர்பாராமல் வந்த விருந்தாளிகளால் கருங்கழுத்தனின் வீட்டார் திக்குமுக்காடி போனர். வெயில் தாங்காமல் பலர் அந்த இதமான, குளிரான பழைய பாலத்தின் அடியில் இருக்கும் இவன் குடும்பத்தாரின் வீட்டுக்கு வந்துவிட்டிருந்தனர்.  வீட்டின் சுற்று பெரியதாக இருப்பினும் தங்குமிடம் சிறிது தான். இரும்பு பாலத்தின் அக்கம்பிகளில் அமரும் அகலம் ஒரு ஜான் மட்டுமே . ஒருவர் அமரலாம் , இருவர் நிற்கலாம் . ஆனால் நீளம் சுமார் எண்பது அடி இருக்கும் , இதைப் போல் மூன்று பெரிய ராச்சத தூண்கள் இருந்தால் அவர்கள் குடும்பத்துக்குள் சமாளித்துக்கொண்டனர். 

குட்டிகளையும் , முட்டைகளையும் பத்திரப்படுத்த ஒரு தூண் தனியாக ஒதுக்கிவைத்திருந்தான் கருங்கழுத்தன். ஆனால் இன்று வந்த கூட்டத்தை உள்ளே அழைக்க வேண்டி வந்ததால் , பாதியை அவர்களுக்கு குடுத்துவிட்டு , அவனே அங்கு சென்று நின்றுகொண்டான். பொறுக்கிய சுள்ளிகளில் முட்டைகள் ஓரமாக இருந்தன. அளவுக்கதிமாக அங்கு கூடிய கூட்டத்தால் ஒரு வித கலவர நிலையை அவன் உணர்ந்திருந்தான். தன் வீட்டு இளையர்கள் அவன் மனமறிந்து அமைதியாக இருந்தனர் . 
அவர்களுக்கும் சற்றே பதற்றமாக இருந்தது. 

புதிதாய் வந்திருந்த இளையர்களுக்கு அந்த இதமான குளிரும் , நிழலும் , இருட்டும் ஒரு வித பரவச நிலையை அளித்திருக்க அவை வேகமாக ரக்கையடித்து  அந்த பாலத்தின் அடியில் ஓட ஆரம்பித்தன.

கீழே சாலை பரபரப்பாக  இயங்கிக்கொண்டிருந்தது.  

முன்பே கூறியது போல் பழைய பாலம் என்பதால் மேலே குடியிருக்கும் புறாக்களை போல் , கீழே பெருச்சாளிகள் அதிகமாக இருந்தன. மேலே நடக்கும் சலசலப்பினை பார்த்து கோவமான எலிகளில் ஒன்று விருட்டென சாலையை கடக்க முற்பட்டு ஓட, சிறு வயது பெண் ஓட்டிவந்த மகிழுந்தை சடக்கென்று நிறுத்தினாள். வலப்புற முன்சக்கரம் பாதி எலியை பதம் பார்த்திருந்து. ஒரு எலிக்கா இத்தனை என நினைக்கவேண்டாம், அதன் பருத்த சரீரம் சிறிய பூனையின் அளவிருக்கும். 

தரையிலும் ஒரு வித பதற்றம் தொற்றிக்கொண்டது. 

ஏற்கனவே எலிகளால் குஞ்சுகளை இழந்த மேல்வீட்டாரில் இருந்த கோபக்கார குடும்பக்காரன் ஒருவன் அந்த எலியை கொத்த , அதன் நிலையை காண விருட்டென சிறகடித்து கீழே பறந்தான் . இளையர்கள் பின்தொடர்ந்தனர் . சாலையில் தரையிலிருந்து இரண்டாள் உயரத்துக்கு புறாக்கள் கூட்டம் வட்டமடிக்க , மக்கள் சற்று தயங்கி க்ரெஈஈஈன் க்ரீஈஈன் என ஹார்ன் அடிக்க ஒரு வித குழப்பம் முற்றுமாக அங்கே அரங்கேறியது.

மூன்றாவது தூணின் அந்த ஓரத்தில் இருந்த கருங்கழுத்தனின் பார்வை ஒட்டுமொத்த நிகழ்வையும் கிரஹித்துக்கொண்டு , இந்நிலை விரைவாக கழியவேண்டிக் கொண்டிருந்தது. ஒருபுறம் குஞ்சுகளையும் , முட்டைகளையும் காக்க வேண்டியகட்டாயமும் , மறுபுறம் நெறிதவறி ஆர்பரித்துக்கொண்டிருந்த கூட்டத்தினை அடக்கவும் முடிவெடுக்க முடியாமல் தவிக்க , வெள்ளைமடி தான் குஞ்சுகளை பார்த்துக்கொள்கிறேன் என சொன்னதால் பறந்துசென்று இளையர்களை அடக்க முற்பட்டது. 

அவன் வீட்டார் , இவன் பறக்க எத்தனிப்பதை  கண்டு பெருத்த ஒலிகளை எழுப்ப ஆரம்பித்தனர் . அனைவரின் குரலும் ஓர் சீராக அந்த பாலத்தில் எதிரொலித்தது. புதிய விருந்தாளிகள் திரும்பிப்பார்க்கவும் , தூணை நெம்பிக்கொண்டு சிறகுகளை அகல விரித்துக்கொண்டு , குரல் எழுப்பியவாரு கம்பீரமாக பறக்க ஆரம்பிக்கவும் அனைவரும் ஒரு வித அமைதிக்கு வந்தனர். 

ஒவ்வொருவரும்  தூண்களை நோக்கி திரும்ப ஆரம்பித்தனர் . சற்றே பயந்து போன மூன்று இளைஞர்கள் திசையறியாமல் மூன்றாம் தூணை நோக்கி விரைய , அதனை இடக்கண்ணின் ஓரத்தில் கவனித்தவன் போல் இவனும் அங்கே சீறினான். அந்த நொடி முட்டைகளை முழுவதுமாக மறைக்க வெள்ளைமடி அதனை அணைப்பது போல் சிறகு விரிக்க , கவனியாமல் மூன்று இளைஞர்களும் அதன் மேல விழ , தடுமாறிய வெள்ளைமடி முட்டைகளை தவறவிட்டது. பதறிப்போன ,கோபமான கருங்கழுத்தன் அதனை தாவிப் பிடிக்க முற்பட சாலையில் வேகமாக வந்த அரசுப் பேருந்து இடிக்கவும்  துடிதுடித்து கீழே விழுந்தான்.

இப்போது ,

சாலை அமைதியாக இருந்தது . அந்த தூண்கள் காலியாக இருந்தன . ஓரத்தில் குப்பையோடு குப்பையாக , தன் குடும்பத்தினரின்  கொட்டிக்கிடந்த மலங்களும் , சாலையில் உடைந்த முட்டைகளும் . கருங்கழுத்தனும் , பெருச்சாளியும் குவிந்துக்கிடந்தன. அந்த மாலை முடிவை நோக்கிப் பயணிக்க , இருள் புக ஆரம்பித்தது. ஒரே மாலையில் வாங்கிய காவுக்கு பரிசாக பழைய இரும்புப்பாலம் அமைதியான மயாணமாக காட்சியளித்தது.    





Sunday, April 1, 2018

#ஒருவாழ்க்கைஉனக்காக வாழ்ந்திடு


சரவணன் சந்திரன் எழுதிய 'பாவத்தின் சம்பளம்' படித்துக்கொண்டிருக்கிறேன் . 8ஆம் அத்தியாயம்மிக முக்கியமான செய்தியை பிரதிபலிக்கிறது . காதலித்து மணந்த கணவன் மனைவி  விவாகரத்து செய்துகொண்டதற்கு  முக்கியமான ஒரு காரணம், மனைவியின் அலுவலகத்தில் அவளுடைய கணவன்  இசை ஆர்கெஸ்டராவில் பணிபுரிவதை கேலிபேசியது என விளக்கியிருந்தார் . அதன் கடைசி பத்தியில் கூறிய வார்த்தைகள் மிகக்கூர்மையானவை.

//அவ்வளவு நாள் அழகாகக்  காட்டிய முகம் பார்க்கிற கண்ணாடி உடைவதற்கு பெரிய பாறாங்கற்களெல்லாம் தேவையே இல்லை.மணல் துகளையொத்தது என ஏளனம் கொள்ளும்படியான சிறுகல் கூட போதும்.உடைசல் என்பது வந்து மோதும் எதிர்பாராத கூர்மையான வேகைத்தை பொறுத்தது //"

இது நிதர்சனமான உண்மை . நம்மில் பல பேர் பேச்சு வழக்கில் பிறரிடம் , எவ்வளோ 70மதிப்பெண் தானா உன் குழந்தை (கல்வியை எடை போடாதே முட்டாளே),
என்ன 31வயசாகப்போகுது உன் பையன் இன்னும் படிக்கிறானா ?(கல்லாதது உலகளவு)
'எப்படி 70000 சம்பளம் போதும் இருக்கிற விலைவாசில?'(100லும் , 1000த்தில் வாழ்பவன் இருக்கிறான்),
'என்ன இன்னும் சொந்தமா வீடு வாங்களையா ?'(தங்க இடம் இருந்தால் போதும்) ,
' கல்யாணம் ஆகி மூணு வருசமா பிள்ளை பிறக்கலையா ?'(வேணும் போது பெத்துப்பாங்க) , 'என்னதான் இருந்தாலும் படிச்ச பொண்ணுனு உன் மருமகளுக்கு திமிறுஇருக்கும்'(படிச்சதால தான் முகத்துக்குநேரே பதில் சொல்லுறா,இல்லாட்டி உன்ன மாதிரி புறம்பேசுவா),
 'மாப்பிள்ளை வெளியூர் சுத்தினாலும் இன்னும் உன்ன உள்ளூரே சுத்திக்காட்டால'(ஓடுற வயசு உழைக்கிறான்) ,
 'கடன் வாங்கியாது கார்ல போகணும் சார் அது தான் பெருமை'((அமரர் ஊர்தி போலாமா ?). இப்படியாக அலுவலகத்தில் தேநீர் நேரத்தில் , சிகையழகு நிலையத்தில் முகச்சாயம் பூசுகையில் , சிறைவைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் ஒற்றையடி புல்வெளி பாதைகளில் மாலை நடைப்பயணத்தில் புரளி பேசிச்செல்லாதீர்கள். காலம் 70களில் இல்லை. தனிமனித எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டன . ஒப்பீடு இன்றைய இளையர்களின் ஆழ் மனதில் தாக்கங்கள் ஏற்படுத்துகின்றன. நம்மில் ஒவ்வொருவரும் பேசநினைக்கும் ஒற்றைச்சொல்லையும் கூட மனதுக்குள் ஒத்திகை பார்த்து , நம்மையே அதில் ஒப்பிட்டுப் பார்த்து கூறவேண்டும். சமகால நண்பர்கள் இதைப் போன்ற வெட்டி பேச்சுச்களில் இருந்து தப்பித்து மனஅமைதி அடைந்திடுங்கள்.   
#ஒருவாழ்க்கைஉனக்காக வாழ்ந்திடு


    

ஜாடிகள் மாற ஆரம்பித்தன

ஜாடிகளின் ஆதிக்கம் நிறைந்த காலம் அது .
ஊரெங்கும் ஜாடிகள் ஆட்டம் தான் .
நினைக்கும் போது வேண்டிய மூடியை எடுத்துக்கொண்டன
சில ஜாடிகளுக்கு பல மூடிகள் தேவைப்பட்டன 
சில ஜாடிகள் நினைத்தார் போல் மூடி மாற்றிக்கொண்டன
வீட்டுக்குள் எப்போதும் சில மூடிகள் அடைப்பட்டு கிடந்தன
வெளியில் யாருக்கும் தெரியாமல் சில முடிகளோடு ஜாடிகள் திரிந்தன.
ஒற்றை ஜாடி பல மூடிகளை மாற்றிமாற்றி பிரயோகித்தன
எள்ளுத் தாத்தாக்களின் காலம் அது.
ஒரு வீட்டில் ஒரே ஜாடிக்கு ரெண்டு மூடிகள் இருந்தன.
இரண்டாம் மூடியின் மோகம் பெரும்பாலும் ஜாடிகளை ஆட்டுவித்த காலம்.
பெரிய ஜாடிகளை சுற்றி எப்போதும் வதவதவென சிறிய ஜாடிகள்.
முலைக் கொண்ட சிறிய ஜாடிகள் உடைக்கப்பட்டன
சீக்கின் பிடியில் சில சிறிய ஜாடிகள் ஒன்றுமில்லால் போன காலம்
பசியின் பிடியில் சிறியஜாடிகள் ஒன்றுமில்லால் போன காலம்
ஆனாலும் பெரிய ஜாடிகள் ஆதிக்கம் குறையவில்லை.
வருந்திய மூடிகள் வாயடைத்து கண்ணீர் வடித்தன.
ஜாடிகளுக்கு மூடித்தேவை இருந்து கொண்டே இருந்தன.
மூடிகள் மௌனித்து அமைதி காத்தன.
காலப்போக்கில் ஒருநாள் ஜாடிகள் கண்விழிக்கையில்
மூடிகள் கல்விகற்ற நெகிழிப்புட்டிகளாகவும் கொள்கலன்களாகவும் மாறின
ஜாடிகளின் காலம் முடிந்துவிட்டது போலும்.
நெகிழிப்புட்டிகள் எல்லா திசையிலும் பிரபலமாகின
ஜாடிகளின் தேவை குறைய ஆரம்பித்தது .
ஜாடிகளை மூடுவதுமட்டும் மூடிகள் வேலையில்லை என போராட்டக்குரல் ஒலித்தது.
மூடிகள் தம்மை புதுஉலகுக்கு தயார் செய்துகொண்டன.
ஜாடிகளை மூட புட்டிகள் தயாராகயில்லை.
அப்படி மூடினாலும் ஜாடியும் புட்டியும், ஜாடியும் மூடியும் போலில்லை.
நெகிழிகளின் காலமிது.
வேண்டிய வண்ணத்தில் வேண்டிய விதத்தில் கொள்கலன்கள்
தங்களை சிங்காரித்துக்கொண்டன.
ஜாடிகள் தங்களை நோக்கி இவை வருமென நினைத்து ஏமாந்துகொண்டிருந்தன.
ஜாடிகள் மாற ஆரம்பித்தன.
ஜாடிகள் மாறவில்லையெனில் சீண்டுவாரற்று சிதிலமடைவதே நிலை
ஜாடிகள் நெகிழிகளை சமமாக உணரவேண்டிய நேரமிது.
உணரும்.

சரியானதிட்டமிடல்வேண்டும்

தொடர்ந்து நான்கு/ஐந்து மாதகாலமாக பங்கேற்க வேண்டிய முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை. ஏதோ தடை எனை அறியாமல் வந்துகொன்டே இருக்கிறது . அலுவலக வேலைச்சுமை அதிகரித்து விட்டது. சுமையாய் அதனை உணர மனம் தவிர்க்க அதன் மேல் ஓர் அதீத ஈர்ப்பு வந்துவிட்டது. அதை திருப்தி என சொல்லி குறைத்து மதிப்பிட முடியவில்லை. வீட்டிலும் என் உதவிகள் குறைந்துவிட்டதை உணர்கிறேன். நடுநடுவே அயல்நாட்டுப் பயணம் வேறு. உடல் சோர்வும் மனச்சோர்வும் சிலவாரம் நம்மை அடித்துவிடுகின்றது மாறவேண்டும். 2020க்குள் எட்டு படிகள் கடக்கவேண்டும் என முடிவெடுத்தேன். அரைக்கிணறு தாண்டியாயிற்று. 12புத்தகங்கள் இந்த ஆண்டு படித்து முடிக்க வேண்டும். எல்லாம் காத்துக்கிடக்கின்றன. சிலருக்கு எழுத ஒத்துக்கொண்டேன் . ஒன்று எழுத ஆரம்பித்து முக்காலோடு மூலையில் உள்ளது. இன்னொன்றாவது முடித்துவிடவேண்டி அமர்ந்திருக்கிறேன்.குருவிகள் சுள்ளியை பொறுக்கியாயிற்று. கூடு கட்டவேண்டியது தான் . முக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து இருக்கின்றன, கண்டிப்பாக தவிர்க்காமல் சென்றுவிடவேண்டும். சுமார் 5 திருமணங்கள் செல்ல முடியவில்லை . இரன்டு வித வாதங்கள் எனக்குள்ளேயே இந்நிகழ்வுகளுக்கு செல்லாமல் இருக்க .
1. நண்பர்கள் நம்மை புரிந்துகொள்வார்கள்
2. வேலை ஒருவித போதையை தருகிறது

அந்தநாள்ஞாபகம்

6 ஆண்டுகள் முன்பு பல்லவன் ரயிலில் திருச்சியிலிருந்து கிளம்பி சென்னை மாநகரம் வந்து , பதின்மூன்றாயிரம் சம்பளத்தில் ஆரம்பித்தது தகவல்தொழில்நுட்ப வேலைவாய்ப்பு எங்களுக்கு குழந்தைகள் தினத்தன்று. சுமார் மூன்று ஆண்டுகள் நாங்கள் ஒன்றாக இருந்திருப்போம் . ஒற்றை 18*15 விடுதி அறையில் ஆரம்பித்து , நேரக்கணக்கிட்டு காலைக்கடன் , குளியல் முடித்து உணவு டப்பி அடைத்து சென்று , பின்னர் மூன்று அறைகள் இருக்கும் வீடு வாடகைக்கு மாறி ஒரு ஒருவருடம் கடந்து , 4அறைகள் கொண்ட பெரிய வீட்டில் மாறி , இப்போது வெவ்வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
தனி வீடு எடுத்த காலங்களில் நாள் அட்டவணை போட்டு மதிய உணவு சமைப்பதும் , பாத்திரம் கழுவுவதும் , காய் கறிவாங்குவதும் , கழிவறை/குளியலறை கழுவுவதும் என செய்து வந்தோம். கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் எங்களுக்குள் விட்டுக்கொடுத்து ஒன்றாகவே இருந்திருக்கிறோம். அரசியல் பேசும் போது ஒருவரை ஒருவர் எதிர்ப்பதும் , ஆதித்தியா சேனல் பார்க்கும் போது மீண்டும் சேர்வதும் , ஐபிஎல் வந்தவுடன் மீண்டும் முட்டிக்கொள்வதும் , அஜித் விஜயென இரவுபகலாக வாதிடுவதும் என காலம் கலகலப்பாக ஓடிய தருணங்கள் அவை.
எப்போதுமே மாத பட்ஜெட் மனதுக்குள் போட்டுவிடுவோம். சிலர் டைரிக்களில் , சிலர் பழைய நோட்டில் , சிலர் தொலைபேசியில் , சிலர் போடாமலும் அளவாக செலவுகள் செய்து வந்தோம். மேடவாக்கம் குடிசைக்கடைகளில் எங்களின் பல நாள் காலை உணவு சில்லறைகளில் முடிந்திருக்கிறது. 'இன்று நம்மக்கடையில் நீங்கள் தோசைக்கு பதில் இட்லி தான் சாப்பிடவேண்டும்' என கடைக்காரர் உறவினரை போல் உரிமையாக எங்களுக்கான மெனுவை கூறியிருக்கிறார் .
ஒன்றாக சேர்ந்து வெளியூர் செல்ல வேண்டுமானால் , ஒரு முதல் தொகையை என்னிடம் அனைவரும் தந்து விடுவார்கள் . பின்னர் நாள் முழுவதுமாக செலவுசெய்து மீண்டும் வீடு வந்தவுடன் கணக்கு , ரசீதெல்லாம் வைத்து எங்கள் கணக்குப்பிள்ளை ராகவன் சரிபார்க்க மீதி
செலவுபாக்கியை சரிசெய்து கொள்வோம். விடியற்காலை 3மணிக்கு குளித்து கிளம்பி சோளிங்கர் சென்றோம், திருமண வரம் வேண்டி திருவிடவெந்தை , உல்லாசமாக மஹாபலிபுரம் , திருவல்லிக்கேணி , மெரினா கடற்கரை என பட்ஜெட் சுற்றுலாக்களில் பயணப்பட்டோம்.
மாத முடிவில் பால்கணக்கு , மளிகை கணக்கு , கரண்டு பில் , வாடகை கணக்கு என எல்லாம் சரிபார்த்துக்கொள்வோம். பிரசன்னாவும் சரவணனும் கணக்குக்குள் வந்து கேள்வி கேட்டதில்லை. ராகவனின் கறாரான தணிக்கை அறிக்கைக்கு நாங்கள் கட்டுப்பட்டோம்.
மாதம் இருமுறை சிலர் சொந்தஊர்க்கு செல்வதும் , முருகன் தியேட்டரில் ஐம்பது ரூபாய்க்கு படம் பார்ப்பதும் , மொட்டைமாடியில் வெட்டி அரைட்டை அடிப்பதும், T51/C51 பேருந்தில் நாள் பாஸ் வாங்கி சும்மாக்காச்சும் ஏறிஇறங்கி பயணித்ததுமென எளிமையாக கடந்துவிட்டிருந்தோம்.
சற்றே ஆரவாரமாக சரவணன் , கவலையற்ற பிரசன்ன , மனதுக்குள் கணக்குபோட்டுக்கொண்டு நான் , நிதானித்து திட்டமிட்ட ராகவன் என ஒரு விசு திரைப்படமாக நாங்கள் இருந்தநாட்கள் மனத்திரையில் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்தாவதாக உடன் இருந்த கார்த்தியால் எங்களுக்கு தொல்லையில் , எங்களால் அவனுக்கு தொல்லையிலை. பின்நாளில் அஸ்வின் உடன் இணைய சமையல் பளு குறைந்தது. அவன் கைப்பக்குவம் சற்றே நன்றாக இருக்கும் .