Sunday, July 30, 2017

#அ ..ஆ ..ஆம்ஸ்டெர்டாம் - 1

நள்ளிரவு 12 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி 80கிலோமீட்டர் பயணமாக பெங்களூருக்கு மிகத்தொலைவில்  இருக்கும் பெங்களூரு விமானநிலையத்துக்கு வந்து சேர சுமார் இரண்டு மணிநேரம் ஆனது . அதில் சிறிது கூட எனக்கு அசதியா தூக்கமோ வரவில்லை . இந்த முறை பயணம் ஆம்ஸ்டெர்டாம் வரை என்பதால் கையில்  சுதாகர் கஸ்துரியின் வலவன் டிரைவர் கதைகள்  , பாலகுமாரனின் பலாமரம் , செல்லப்பாவின் வாடிவாசல் ஆகிய புத்தகங்கள் உடன் வைத்திருந்தேன் .

வலவன், டிரைவர் கதைகள்  இப்போதைக்கு உள்ளயே இருக்கட்டும் என நினைத்தாரா என்னவோ மகிழுந்து ஓட்டுநர் அன்பு, தன் கதையை சொல்ல ஆரம்பித்தார் . ஷிமோகாவில் பிறந்த அன்பு 1960'ல் தந்தையின் பிழைப்புக்காரணமாக நெய்வேலிக்கு குடிபெயர்ந்தவர். தாய்மொழி தெலுங்கு , பிறந்தவூர் கன்னடப்பிரதேசத்தில் ஷிமோகா, வளர்ந்தது நெய்வேலி என் தென்னிந்தியா கலவை அவர் . டிப்ளமோ படித்து நிலக்கரி தொழிற்பயிற்சி கற்றுக்கொண்டிருந்த வேலையில் மத்திய சர்க்கார் மாற்றம் ஏற்பட்டு எந்த ஆஃப்ரீன்ட்டிஸ்களும் நிரந்தரமாக்கப் படமாட்டார்கள் என அறிவிப்பு வர ஒரு பிரபல வக்கீலிடம் இவரை போன்ற 75பேர் தலா 1000ரூபாய் வரை கொடுத்து நிலக்கரி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர செய்தார்களாம் . 75 பேர் கூட்டம் 500 வரை தொட , வக்கீலின் பாக்கெட்டும் வீங்கிக்கொன்டே செல்ல சுமார் 18மாதங்கள் கழித்து எந்த நம்பிக்கையும் இல்லாமல் சொந்த ஊரான ஷிமோகாவுக்கே வந்தார்களாம்.  தன்னுடன் வெளியேற்றப்பட்ட பலர் தன்னம்பிக்கை இழந்து , உடல் மெலிந்து வெளியூர் செல்ல துணிவில்லாமல் அப்படியே காலத்தின் பிடியில் சருகாகி போனார்கள் என கண்ணீருடன் கூறினார் .  தற்போது 14ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் மகிழுந்து ஓட்டுநராக இருப்பதாகவும் , இவர்களுக்கு நிரந்தர ஊழியர் நன்மைகள் கிடைக்காமலிருக்க நிறுவனம் தினக்கூலி அடிப்படையில் சம்பளம் தருவதாகவும் கூறினார். சுமார் 8 கிலோமீட்டருக்கு பளபளவென இருந்த விமானநிலைய சாலை பெரிய லாரி விபத்துக்குள்ளானதால்  அடைக்கப்பட்டு, பாலத்துக்கு அடியில் நெரிசலாக அனைத்து வாகனமும் அனுப்பப்பட்டது .

இப்போ உங்கக் கிட்ட சொன்னேன்ல எங்களை தினக்கூலியா வெச்சு முதலாலிங்க  சம்பாதிக்கிறாங்க அது தான் இதுக்கு காரணம் என்றார். ஒரு நாளில் 8மணிநேரம் வண்டி ஓட்டினால்  400ருபாய், 12 என்றால் 600 ருபாய், 16 என்றால் 800ருபாய் , 20 என்றால் 1000ருபாய் . எல்லாரும் தினம் 1000சம்பாதிக்க வேண்டி தூக்கமில்லாமல் வண்டியோட்ட ஏதோ ஒரு நாள் எல்லா வண்டிகளும் கவிழும் என்றார் . தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரின் பேரத்தினால் இந்த விமான நிலைய கதையும் , நம் பிரதமரின் மாநில வணிகச்சந்தை கொள்கைகள் பற்றியும் என் நிறுவன நிறுவனரின் குடும்ப சண்டை பற்றியும், ரஜினி-கமல் இனைந்து அரசியல் வரவேண்டிய கட்டாயம் பற்றியும் , பன்மொழிக்கல்வியின் அவசியம் பற்றியும் என என் நீண்ட பயணத்தை நினைவில் நிற்கும் பயணமாக மாற்றினார் அன்பு . பாவம் அவரும் சாதாரண ஊழியர் தான், பயண தூரத்தை குறித்துக்காட்டாமல் இரசீதில் என் கையொப்பம் பெற்று விடைபெற்றார் .

பிரம்மாண்டமாய் கட்டப்பட்டிருந்த  விமான நிலையம் பாராபட்சமாய் அந்த நள்ளிரவில் கூட ஆயிரம் அன்புகளை வாயிலோடு வரவேற்று அனுப்பிக்கொண்டிருந்து .

#அ ..ஆ ..ஆம்ஸ்டெர்டாம்