Sunday, August 6, 2017

அ ..ஆ..ஆம்ஸ்டெர்டாம் - 2

மாலை நான்கு மணி . பளிச்சென வெயில் போலியாய் 14 டிக்ரீயில் அடிப்பது போல் எங்களை ஏமாற்ற நினைக்கிறது . பறக்கும் ரயிலில் இறங்கி தரைவழி ரயிலில் ஏறப்போகையில் புகைமண்டலம் . பொது இடங்களில் புகைப்பதற்கு இங்கு தடை இல்லை . சில முட்டுச்சந்துகளில் கஞ்சாக்கள் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள் . ஆண் பெண் திருநங்கைகள் என பாகுபாடின்றி புகைக்கின்றனர் . பொதுவாக பார்த்தால் ஐரோப்பியர்கள் இங்கே இருவகையில் இருக்கிறார்கள் . ஆண்களில் இரண்டு , பெண்களில் இரண்டு . ஆறடி உயரம் , ஒல்லியான உடம்பு, நீண்டமுகங்கள் சோடாபுட்டிகள் ஒருவகை ஆண்கூட்டம். பெருத்த சரீரம் , கட்டையான உடம்பு வாகு , ஊதிய முகங்கள் ,  தொங்கும் தொப்பைகள் இரண்டாம் வகை ஆண்கள். ஆறடிக்கு சற்றே கம்மியான உயரம் , மெல்லிய இடை அல்லது பெருத்த பிருஷ்டங்கள்  , கனத்த தொடைகள் கனமான உடம்பென இருவகை பெண்கள் . உயரம் இல்லா மக்கள் கூட்டமென்றால் கிழக்காசிய மக்கள் என்று முகத்தை பார்த்தவுடன் தெரிந்து விடுகின்றன .

பழையதும் புதியதும் என மாறி மாறி ரயில்கள் வந்தவண்ணம் இருந்தன . நகரத்தின் மையப்பகுதியில் மாளிகை . ஓர் மதத்தினரின் பல உட்பிரிவு தேவாலயங்கள் திசையெங்கும் தெரிகின்றன. மதங்களுக்கு அப்பால்  அக்கோபுரங்களின் மணிக்கூண்டுகள் அனைவருக்கும் நேரத்தை  காட்டிக்கொண்டிருந்தன. நகரெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் அருகேயே  கால்வாய் ஓடி ஓடி  வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. வெளிநாடு என்பதால் மண்டிய புதர்களை மறைக்க வண்ணவண்ண பூக்கள் மலர்ந்திருக்கின்றன. மேல்கூறிய முதல் வகை ஆண் ஒருவர் எதிர் இருக்கையில் அமர்திருந்தார். எழுந்து இறங்கச் செல்கையில் இரு கரம் கூப்பி நமஸ்கார் என கூறிவிட்டு சென்றார் .அவர்களை போன்று இந்தியா ஒரு மொழிதேசம்
என நினைத்திருப்பார் போலும்.

சுரிநாமியர்கள் நெதர்லாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் அங்கிருந்து புலம் பெயர்ந்து இங்கிருக்கிறார்கள். சுரிநாமிற்கு பல இந்தியர்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் ஒப்பந்தடிப்படையில் போய் அங்கிருந்து நெதர்லாந்து வந்திருக்கின்றனர். அவர்கள் உணவு வகைகள்  பல, இந்திய மக்களை போன்றே உள்ளது. ரயில் கடற்கரையில் எங்களை இறக்கிவிட்டது.

பலத்த காற்று அனைவரையும் ஆட்டுவித்தது. கடலின் நீளத்துக்கு பிளாட்பாரத்தில் உணவுக்கடைகள் . அக்கடைகளை கடந்தால் மணல்வெளி .    மணல்வெளியெங்கும் முரட்டுத்தனமாய் அலைந்துகொண்டிருந்தன கடற்பறவைகள். சிலர் கையில் இருந்த  இத்தாலிய வேகப்பத்தை அதற்கு கொடுத்து அப்பறவைகளின் அமைதியை கெடுத்துவிட்டனர் . ஒரு பறவை அப்பண்டத்தை வாயில் கவ்வ அதனை பங்குபோட பத்துப்பதினைந்து பறவைகள் வட்டமிட , இது தப்பிக்கப் பார்க்க , பறவைகளினூடே கலவரம் . தலையின் மேல் கைவைத்து எங்களை காப்பாற்றிக்கொள்ள நினைத்தோம் . அங்கும் இங்கும் முப்பது நாற்பது கடற்பறவைகள் களைந்து சுற்றின . தூரத்தில் ஒரு நாய் கடல் அலைகளை பார்த்து குறைத்துக் கொண்டிருந்தது. நாயின் சொந்தக்காரர் நீர்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தார்.

நீளக்கடற்கரையின் மத்தியரேகையாய் ராட்சத ராட்டினம் . நடுக்கடலை ராட்டினத்திலிருந்து பெரும் கூட்டம் பணம்கொடுத்து ரசித்துக் கொண்டிருந்தது.  இராட்டினம் ஏறும்  பாலம் ஒன்று  அமைக்கப்பட்டிருந்தது. பாலத்தின் தூண்கள் வானவில்லின் வண்ணங்களால் தீட்டப்பட்டிருந்தன.   அதன் அடியில் அமைதியாய் இரண்டு கடற்பறவை.  அதன் அருகில் அழகை நிழற்படமாக்க தானும் கருவியுமாய் ஒருவர் நின்றிருந்தார் .  கொஞ்சம் தள்ளி ஒரு அண்ணண் தங்கை கல்லை வீசி தவக்களை விட்டுக்கொண்டிருந்தனர். தண்ணீரில் தவக்களை விடுவது என்பது  தட்டையான கல்லை எடுத்து தரையொட்டி நீரை நோக்கி எறிகையில் அது குதித்து குதித்து  செல்லும் . அதிகமாய் குதிக்கும் கல்லை எறிந்தவர் வெற்றிபெறுபவர் . இதை வேறுபெயரில் அந்த ஐரோப்பிய குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.


வந்தியத்தேவனுடைய வெளிமனம் சோழ நாட்டின் இயற்கை வளங்களைப் பற்றியும் இராஜரீகக் குழப்பங்களைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கையில் அவனுடைய உள்மனம் அந்த மங்கையினிடத்திலேயே ஈடுபட்டிருந்தது. இப்போது உள்மனம் வெளிமனம் இரண்டும் ஒத்து அம்மங்கையைக் குறித்துப் பட்டவர்த்தனமாகச் சிந்திக்கத் தொடங்கின. ஆம் பொன்னியின் செல்வனை பற்றிய பேச்சு தொடங்கி , கல்கியின் அமரத்துவம், பாலகுமாரனின் உடையார்  பொன்னியின் செல்வனை விட எவ்வகையில் மாறுபட்டது ?  சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு என தொடர்ந்து  தமிழ் புத்தக போதையை எங்களுக்குள் ஏற்றிக்கொண்டோம்.

மேல்சொன்ன அத்தனையும் அமைதியாய் பார்த்துக்கொண்டே கடல் அமைதியாய் எங்கள் கால்நினைத்து சென்று , தன் தோழியான மழையோடு வந்து உடல் நனைத்தது. ஓடிவந்து  ரயிலேறி , வீடு வந்து  சேர்கையில்  வானம்பளிச்சென பல்இளிக்க , ஒளிந்திருந்த மாலைக்கதிரவன் கண்ணடித்தான்.

அ ..ஆ..ஆம்ஸ்டெர்டாம்  .!