Sunday, April 1, 2018

#ஒருவாழ்க்கைஉனக்காக வாழ்ந்திடு


சரவணன் சந்திரன் எழுதிய 'பாவத்தின் சம்பளம்' படித்துக்கொண்டிருக்கிறேன் . 8ஆம் அத்தியாயம்மிக முக்கியமான செய்தியை பிரதிபலிக்கிறது . காதலித்து மணந்த கணவன் மனைவி  விவாகரத்து செய்துகொண்டதற்கு  முக்கியமான ஒரு காரணம், மனைவியின் அலுவலகத்தில் அவளுடைய கணவன்  இசை ஆர்கெஸ்டராவில் பணிபுரிவதை கேலிபேசியது என விளக்கியிருந்தார் . அதன் கடைசி பத்தியில் கூறிய வார்த்தைகள் மிகக்கூர்மையானவை.

//அவ்வளவு நாள் அழகாகக்  காட்டிய முகம் பார்க்கிற கண்ணாடி உடைவதற்கு பெரிய பாறாங்கற்களெல்லாம் தேவையே இல்லை.மணல் துகளையொத்தது என ஏளனம் கொள்ளும்படியான சிறுகல் கூட போதும்.உடைசல் என்பது வந்து மோதும் எதிர்பாராத கூர்மையான வேகைத்தை பொறுத்தது //"

இது நிதர்சனமான உண்மை . நம்மில் பல பேர் பேச்சு வழக்கில் பிறரிடம் , எவ்வளோ 70மதிப்பெண் தானா உன் குழந்தை (கல்வியை எடை போடாதே முட்டாளே),
என்ன 31வயசாகப்போகுது உன் பையன் இன்னும் படிக்கிறானா ?(கல்லாதது உலகளவு)
'எப்படி 70000 சம்பளம் போதும் இருக்கிற விலைவாசில?'(100லும் , 1000த்தில் வாழ்பவன் இருக்கிறான்),
'என்ன இன்னும் சொந்தமா வீடு வாங்களையா ?'(தங்க இடம் இருந்தால் போதும்) ,
' கல்யாணம் ஆகி மூணு வருசமா பிள்ளை பிறக்கலையா ?'(வேணும் போது பெத்துப்பாங்க) , 'என்னதான் இருந்தாலும் படிச்ச பொண்ணுனு உன் மருமகளுக்கு திமிறுஇருக்கும்'(படிச்சதால தான் முகத்துக்குநேரே பதில் சொல்லுறா,இல்லாட்டி உன்ன மாதிரி புறம்பேசுவா),
 'மாப்பிள்ளை வெளியூர் சுத்தினாலும் இன்னும் உன்ன உள்ளூரே சுத்திக்காட்டால'(ஓடுற வயசு உழைக்கிறான்) ,
 'கடன் வாங்கியாது கார்ல போகணும் சார் அது தான் பெருமை'((அமரர் ஊர்தி போலாமா ?). இப்படியாக அலுவலகத்தில் தேநீர் நேரத்தில் , சிகையழகு நிலையத்தில் முகச்சாயம் பூசுகையில் , சிறைவைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் ஒற்றையடி புல்வெளி பாதைகளில் மாலை நடைப்பயணத்தில் புரளி பேசிச்செல்லாதீர்கள். காலம் 70களில் இல்லை. தனிமனித எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டன . ஒப்பீடு இன்றைய இளையர்களின் ஆழ் மனதில் தாக்கங்கள் ஏற்படுத்துகின்றன. நம்மில் ஒவ்வொருவரும் பேசநினைக்கும் ஒற்றைச்சொல்லையும் கூட மனதுக்குள் ஒத்திகை பார்த்து , நம்மையே அதில் ஒப்பிட்டுப் பார்த்து கூறவேண்டும். சமகால நண்பர்கள் இதைப் போன்ற வெட்டி பேச்சுச்களில் இருந்து தப்பித்து மனஅமைதி அடைந்திடுங்கள்.   
#ஒருவாழ்க்கைஉனக்காக வாழ்ந்திடு


    

ஜாடிகள் மாற ஆரம்பித்தன

ஜாடிகளின் ஆதிக்கம் நிறைந்த காலம் அது .
ஊரெங்கும் ஜாடிகள் ஆட்டம் தான் .
நினைக்கும் போது வேண்டிய மூடியை எடுத்துக்கொண்டன
சில ஜாடிகளுக்கு பல மூடிகள் தேவைப்பட்டன 
சில ஜாடிகள் நினைத்தார் போல் மூடி மாற்றிக்கொண்டன
வீட்டுக்குள் எப்போதும் சில மூடிகள் அடைப்பட்டு கிடந்தன
வெளியில் யாருக்கும் தெரியாமல் சில முடிகளோடு ஜாடிகள் திரிந்தன.
ஒற்றை ஜாடி பல மூடிகளை மாற்றிமாற்றி பிரயோகித்தன
எள்ளுத் தாத்தாக்களின் காலம் அது.
ஒரு வீட்டில் ஒரே ஜாடிக்கு ரெண்டு மூடிகள் இருந்தன.
இரண்டாம் மூடியின் மோகம் பெரும்பாலும் ஜாடிகளை ஆட்டுவித்த காலம்.
பெரிய ஜாடிகளை சுற்றி எப்போதும் வதவதவென சிறிய ஜாடிகள்.
முலைக் கொண்ட சிறிய ஜாடிகள் உடைக்கப்பட்டன
சீக்கின் பிடியில் சில சிறிய ஜாடிகள் ஒன்றுமில்லால் போன காலம்
பசியின் பிடியில் சிறியஜாடிகள் ஒன்றுமில்லால் போன காலம்
ஆனாலும் பெரிய ஜாடிகள் ஆதிக்கம் குறையவில்லை.
வருந்திய மூடிகள் வாயடைத்து கண்ணீர் வடித்தன.
ஜாடிகளுக்கு மூடித்தேவை இருந்து கொண்டே இருந்தன.
மூடிகள் மௌனித்து அமைதி காத்தன.
காலப்போக்கில் ஒருநாள் ஜாடிகள் கண்விழிக்கையில்
மூடிகள் கல்விகற்ற நெகிழிப்புட்டிகளாகவும் கொள்கலன்களாகவும் மாறின
ஜாடிகளின் காலம் முடிந்துவிட்டது போலும்.
நெகிழிப்புட்டிகள் எல்லா திசையிலும் பிரபலமாகின
ஜாடிகளின் தேவை குறைய ஆரம்பித்தது .
ஜாடிகளை மூடுவதுமட்டும் மூடிகள் வேலையில்லை என போராட்டக்குரல் ஒலித்தது.
மூடிகள் தம்மை புதுஉலகுக்கு தயார் செய்துகொண்டன.
ஜாடிகளை மூட புட்டிகள் தயாராகயில்லை.
அப்படி மூடினாலும் ஜாடியும் புட்டியும், ஜாடியும் மூடியும் போலில்லை.
நெகிழிகளின் காலமிது.
வேண்டிய வண்ணத்தில் வேண்டிய விதத்தில் கொள்கலன்கள்
தங்களை சிங்காரித்துக்கொண்டன.
ஜாடிகள் தங்களை நோக்கி இவை வருமென நினைத்து ஏமாந்துகொண்டிருந்தன.
ஜாடிகள் மாற ஆரம்பித்தன.
ஜாடிகள் மாறவில்லையெனில் சீண்டுவாரற்று சிதிலமடைவதே நிலை
ஜாடிகள் நெகிழிகளை சமமாக உணரவேண்டிய நேரமிது.
உணரும்.

சரியானதிட்டமிடல்வேண்டும்

தொடர்ந்து நான்கு/ஐந்து மாதகாலமாக பங்கேற்க வேண்டிய முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை. ஏதோ தடை எனை அறியாமல் வந்துகொன்டே இருக்கிறது . அலுவலக வேலைச்சுமை அதிகரித்து விட்டது. சுமையாய் அதனை உணர மனம் தவிர்க்க அதன் மேல் ஓர் அதீத ஈர்ப்பு வந்துவிட்டது. அதை திருப்தி என சொல்லி குறைத்து மதிப்பிட முடியவில்லை. வீட்டிலும் என் உதவிகள் குறைந்துவிட்டதை உணர்கிறேன். நடுநடுவே அயல்நாட்டுப் பயணம் வேறு. உடல் சோர்வும் மனச்சோர்வும் சிலவாரம் நம்மை அடித்துவிடுகின்றது மாறவேண்டும். 2020க்குள் எட்டு படிகள் கடக்கவேண்டும் என முடிவெடுத்தேன். அரைக்கிணறு தாண்டியாயிற்று. 12புத்தகங்கள் இந்த ஆண்டு படித்து முடிக்க வேண்டும். எல்லாம் காத்துக்கிடக்கின்றன. சிலருக்கு எழுத ஒத்துக்கொண்டேன் . ஒன்று எழுத ஆரம்பித்து முக்காலோடு மூலையில் உள்ளது. இன்னொன்றாவது முடித்துவிடவேண்டி அமர்ந்திருக்கிறேன்.குருவிகள் சுள்ளியை பொறுக்கியாயிற்று. கூடு கட்டவேண்டியது தான் . முக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து இருக்கின்றன, கண்டிப்பாக தவிர்க்காமல் சென்றுவிடவேண்டும். சுமார் 5 திருமணங்கள் செல்ல முடியவில்லை . இரன்டு வித வாதங்கள் எனக்குள்ளேயே இந்நிகழ்வுகளுக்கு செல்லாமல் இருக்க .
1. நண்பர்கள் நம்மை புரிந்துகொள்வார்கள்
2. வேலை ஒருவித போதையை தருகிறது

அந்தநாள்ஞாபகம்

6 ஆண்டுகள் முன்பு பல்லவன் ரயிலில் திருச்சியிலிருந்து கிளம்பி சென்னை மாநகரம் வந்து , பதின்மூன்றாயிரம் சம்பளத்தில் ஆரம்பித்தது தகவல்தொழில்நுட்ப வேலைவாய்ப்பு எங்களுக்கு குழந்தைகள் தினத்தன்று. சுமார் மூன்று ஆண்டுகள் நாங்கள் ஒன்றாக இருந்திருப்போம் . ஒற்றை 18*15 விடுதி அறையில் ஆரம்பித்து , நேரக்கணக்கிட்டு காலைக்கடன் , குளியல் முடித்து உணவு டப்பி அடைத்து சென்று , பின்னர் மூன்று அறைகள் இருக்கும் வீடு வாடகைக்கு மாறி ஒரு ஒருவருடம் கடந்து , 4அறைகள் கொண்ட பெரிய வீட்டில் மாறி , இப்போது வெவ்வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
தனி வீடு எடுத்த காலங்களில் நாள் அட்டவணை போட்டு மதிய உணவு சமைப்பதும் , பாத்திரம் கழுவுவதும் , காய் கறிவாங்குவதும் , கழிவறை/குளியலறை கழுவுவதும் என செய்து வந்தோம். கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் எங்களுக்குள் விட்டுக்கொடுத்து ஒன்றாகவே இருந்திருக்கிறோம். அரசியல் பேசும் போது ஒருவரை ஒருவர் எதிர்ப்பதும் , ஆதித்தியா சேனல் பார்க்கும் போது மீண்டும் சேர்வதும் , ஐபிஎல் வந்தவுடன் மீண்டும் முட்டிக்கொள்வதும் , அஜித் விஜயென இரவுபகலாக வாதிடுவதும் என காலம் கலகலப்பாக ஓடிய தருணங்கள் அவை.
எப்போதுமே மாத பட்ஜெட் மனதுக்குள் போட்டுவிடுவோம். சிலர் டைரிக்களில் , சிலர் பழைய நோட்டில் , சிலர் தொலைபேசியில் , சிலர் போடாமலும் அளவாக செலவுகள் செய்து வந்தோம். மேடவாக்கம் குடிசைக்கடைகளில் எங்களின் பல நாள் காலை உணவு சில்லறைகளில் முடிந்திருக்கிறது. 'இன்று நம்மக்கடையில் நீங்கள் தோசைக்கு பதில் இட்லி தான் சாப்பிடவேண்டும்' என கடைக்காரர் உறவினரை போல் உரிமையாக எங்களுக்கான மெனுவை கூறியிருக்கிறார் .
ஒன்றாக சேர்ந்து வெளியூர் செல்ல வேண்டுமானால் , ஒரு முதல் தொகையை என்னிடம் அனைவரும் தந்து விடுவார்கள் . பின்னர் நாள் முழுவதுமாக செலவுசெய்து மீண்டும் வீடு வந்தவுடன் கணக்கு , ரசீதெல்லாம் வைத்து எங்கள் கணக்குப்பிள்ளை ராகவன் சரிபார்க்க மீதி
செலவுபாக்கியை சரிசெய்து கொள்வோம். விடியற்காலை 3மணிக்கு குளித்து கிளம்பி சோளிங்கர் சென்றோம், திருமண வரம் வேண்டி திருவிடவெந்தை , உல்லாசமாக மஹாபலிபுரம் , திருவல்லிக்கேணி , மெரினா கடற்கரை என பட்ஜெட் சுற்றுலாக்களில் பயணப்பட்டோம்.
மாத முடிவில் பால்கணக்கு , மளிகை கணக்கு , கரண்டு பில் , வாடகை கணக்கு என எல்லாம் சரிபார்த்துக்கொள்வோம். பிரசன்னாவும் சரவணனும் கணக்குக்குள் வந்து கேள்வி கேட்டதில்லை. ராகவனின் கறாரான தணிக்கை அறிக்கைக்கு நாங்கள் கட்டுப்பட்டோம்.
மாதம் இருமுறை சிலர் சொந்தஊர்க்கு செல்வதும் , முருகன் தியேட்டரில் ஐம்பது ரூபாய்க்கு படம் பார்ப்பதும் , மொட்டைமாடியில் வெட்டி அரைட்டை அடிப்பதும், T51/C51 பேருந்தில் நாள் பாஸ் வாங்கி சும்மாக்காச்சும் ஏறிஇறங்கி பயணித்ததுமென எளிமையாக கடந்துவிட்டிருந்தோம்.
சற்றே ஆரவாரமாக சரவணன் , கவலையற்ற பிரசன்ன , மனதுக்குள் கணக்குபோட்டுக்கொண்டு நான் , நிதானித்து திட்டமிட்ட ராகவன் என ஒரு விசு திரைப்படமாக நாங்கள் இருந்தநாட்கள் மனத்திரையில் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்தாவதாக உடன் இருந்த கார்த்தியால் எங்களுக்கு தொல்லையில் , எங்களால் அவனுக்கு தொல்லையிலை. பின்நாளில் அஸ்வின் உடன் இணைய சமையல் பளு குறைந்தது. அவன் கைப்பக்குவம் சற்றே நன்றாக இருக்கும் .