Sunday, August 6, 2017

அ ..ஆ..ஆம்ஸ்டெர்டாம் - 2

மாலை நான்கு மணி . பளிச்சென வெயில் போலியாய் 14 டிக்ரீயில் அடிப்பது போல் எங்களை ஏமாற்ற நினைக்கிறது . பறக்கும் ரயிலில் இறங்கி தரைவழி ரயிலில் ஏறப்போகையில் புகைமண்டலம் . பொது இடங்களில் புகைப்பதற்கு இங்கு தடை இல்லை . சில முட்டுச்சந்துகளில் கஞ்சாக்கள் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள் . ஆண் பெண் திருநங்கைகள் என பாகுபாடின்றி புகைக்கின்றனர் . பொதுவாக பார்த்தால் ஐரோப்பியர்கள் இங்கே இருவகையில் இருக்கிறார்கள் . ஆண்களில் இரண்டு , பெண்களில் இரண்டு . ஆறடி உயரம் , ஒல்லியான உடம்பு, நீண்டமுகங்கள் சோடாபுட்டிகள் ஒருவகை ஆண்கூட்டம். பெருத்த சரீரம் , கட்டையான உடம்பு வாகு , ஊதிய முகங்கள் ,  தொங்கும் தொப்பைகள் இரண்டாம் வகை ஆண்கள். ஆறடிக்கு சற்றே கம்மியான உயரம் , மெல்லிய இடை அல்லது பெருத்த பிருஷ்டங்கள்  , கனத்த தொடைகள் கனமான உடம்பென இருவகை பெண்கள் . உயரம் இல்லா மக்கள் கூட்டமென்றால் கிழக்காசிய மக்கள் என்று முகத்தை பார்த்தவுடன் தெரிந்து விடுகின்றன .

பழையதும் புதியதும் என மாறி மாறி ரயில்கள் வந்தவண்ணம் இருந்தன . நகரத்தின் மையப்பகுதியில் மாளிகை . ஓர் மதத்தினரின் பல உட்பிரிவு தேவாலயங்கள் திசையெங்கும் தெரிகின்றன. மதங்களுக்கு அப்பால்  அக்கோபுரங்களின் மணிக்கூண்டுகள் அனைவருக்கும் நேரத்தை  காட்டிக்கொண்டிருந்தன. நகரெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் அருகேயே  கால்வாய் ஓடி ஓடி  வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. வெளிநாடு என்பதால் மண்டிய புதர்களை மறைக்க வண்ணவண்ண பூக்கள் மலர்ந்திருக்கின்றன. மேல்கூறிய முதல் வகை ஆண் ஒருவர் எதிர் இருக்கையில் அமர்திருந்தார். எழுந்து இறங்கச் செல்கையில் இரு கரம் கூப்பி நமஸ்கார் என கூறிவிட்டு சென்றார் .அவர்களை போன்று இந்தியா ஒரு மொழிதேசம்
என நினைத்திருப்பார் போலும்.

சுரிநாமியர்கள் நெதர்லாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் அங்கிருந்து புலம் பெயர்ந்து இங்கிருக்கிறார்கள். சுரிநாமிற்கு பல இந்தியர்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் ஒப்பந்தடிப்படையில் போய் அங்கிருந்து நெதர்லாந்து வந்திருக்கின்றனர். அவர்கள் உணவு வகைகள்  பல, இந்திய மக்களை போன்றே உள்ளது. ரயில் கடற்கரையில் எங்களை இறக்கிவிட்டது.

பலத்த காற்று அனைவரையும் ஆட்டுவித்தது. கடலின் நீளத்துக்கு பிளாட்பாரத்தில் உணவுக்கடைகள் . அக்கடைகளை கடந்தால் மணல்வெளி .    மணல்வெளியெங்கும் முரட்டுத்தனமாய் அலைந்துகொண்டிருந்தன கடற்பறவைகள். சிலர் கையில் இருந்த  இத்தாலிய வேகப்பத்தை அதற்கு கொடுத்து அப்பறவைகளின் அமைதியை கெடுத்துவிட்டனர் . ஒரு பறவை அப்பண்டத்தை வாயில் கவ்வ அதனை பங்குபோட பத்துப்பதினைந்து பறவைகள் வட்டமிட , இது தப்பிக்கப் பார்க்க , பறவைகளினூடே கலவரம் . தலையின் மேல் கைவைத்து எங்களை காப்பாற்றிக்கொள்ள நினைத்தோம் . அங்கும் இங்கும் முப்பது நாற்பது கடற்பறவைகள் களைந்து சுற்றின . தூரத்தில் ஒரு நாய் கடல் அலைகளை பார்த்து குறைத்துக் கொண்டிருந்தது. நாயின் சொந்தக்காரர் நீர்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தார்.

நீளக்கடற்கரையின் மத்தியரேகையாய் ராட்சத ராட்டினம் . நடுக்கடலை ராட்டினத்திலிருந்து பெரும் கூட்டம் பணம்கொடுத்து ரசித்துக் கொண்டிருந்தது.  இராட்டினம் ஏறும்  பாலம் ஒன்று  அமைக்கப்பட்டிருந்தது. பாலத்தின் தூண்கள் வானவில்லின் வண்ணங்களால் தீட்டப்பட்டிருந்தன.   அதன் அடியில் அமைதியாய் இரண்டு கடற்பறவை.  அதன் அருகில் அழகை நிழற்படமாக்க தானும் கருவியுமாய் ஒருவர் நின்றிருந்தார் .  கொஞ்சம் தள்ளி ஒரு அண்ணண் தங்கை கல்லை வீசி தவக்களை விட்டுக்கொண்டிருந்தனர். தண்ணீரில் தவக்களை விடுவது என்பது  தட்டையான கல்லை எடுத்து தரையொட்டி நீரை நோக்கி எறிகையில் அது குதித்து குதித்து  செல்லும் . அதிகமாய் குதிக்கும் கல்லை எறிந்தவர் வெற்றிபெறுபவர் . இதை வேறுபெயரில் அந்த ஐரோப்பிய குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.


வந்தியத்தேவனுடைய வெளிமனம் சோழ நாட்டின் இயற்கை வளங்களைப் பற்றியும் இராஜரீகக் குழப்பங்களைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கையில் அவனுடைய உள்மனம் அந்த மங்கையினிடத்திலேயே ஈடுபட்டிருந்தது. இப்போது உள்மனம் வெளிமனம் இரண்டும் ஒத்து அம்மங்கையைக் குறித்துப் பட்டவர்த்தனமாகச் சிந்திக்கத் தொடங்கின. ஆம் பொன்னியின் செல்வனை பற்றிய பேச்சு தொடங்கி , கல்கியின் அமரத்துவம், பாலகுமாரனின் உடையார்  பொன்னியின் செல்வனை விட எவ்வகையில் மாறுபட்டது ?  சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு என தொடர்ந்து  தமிழ் புத்தக போதையை எங்களுக்குள் ஏற்றிக்கொண்டோம்.

மேல்சொன்ன அத்தனையும் அமைதியாய் பார்த்துக்கொண்டே கடல் அமைதியாய் எங்கள் கால்நினைத்து சென்று , தன் தோழியான மழையோடு வந்து உடல் நனைத்தது. ஓடிவந்து  ரயிலேறி , வீடு வந்து  சேர்கையில்  வானம்பளிச்சென பல்இளிக்க , ஒளிந்திருந்த மாலைக்கதிரவன் கண்ணடித்தான்.

அ ..ஆ..ஆம்ஸ்டெர்டாம்  .!

 

   

Sunday, July 30, 2017

#அ ..ஆ ..ஆம்ஸ்டெர்டாம் - 1

நள்ளிரவு 12 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி 80கிலோமீட்டர் பயணமாக பெங்களூருக்கு மிகத்தொலைவில்  இருக்கும் பெங்களூரு விமானநிலையத்துக்கு வந்து சேர சுமார் இரண்டு மணிநேரம் ஆனது . அதில் சிறிது கூட எனக்கு அசதியா தூக்கமோ வரவில்லை . இந்த முறை பயணம் ஆம்ஸ்டெர்டாம் வரை என்பதால் கையில்  சுதாகர் கஸ்துரியின் வலவன் டிரைவர் கதைகள்  , பாலகுமாரனின் பலாமரம் , செல்லப்பாவின் வாடிவாசல் ஆகிய புத்தகங்கள் உடன் வைத்திருந்தேன் .

வலவன், டிரைவர் கதைகள்  இப்போதைக்கு உள்ளயே இருக்கட்டும் என நினைத்தாரா என்னவோ மகிழுந்து ஓட்டுநர் அன்பு, தன் கதையை சொல்ல ஆரம்பித்தார் . ஷிமோகாவில் பிறந்த அன்பு 1960'ல் தந்தையின் பிழைப்புக்காரணமாக நெய்வேலிக்கு குடிபெயர்ந்தவர். தாய்மொழி தெலுங்கு , பிறந்தவூர் கன்னடப்பிரதேசத்தில் ஷிமோகா, வளர்ந்தது நெய்வேலி என் தென்னிந்தியா கலவை அவர் . டிப்ளமோ படித்து நிலக்கரி தொழிற்பயிற்சி கற்றுக்கொண்டிருந்த வேலையில் மத்திய சர்க்கார் மாற்றம் ஏற்பட்டு எந்த ஆஃப்ரீன்ட்டிஸ்களும் நிரந்தரமாக்கப் படமாட்டார்கள் என அறிவிப்பு வர ஒரு பிரபல வக்கீலிடம் இவரை போன்ற 75பேர் தலா 1000ரூபாய் வரை கொடுத்து நிலக்கரி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர செய்தார்களாம் . 75 பேர் கூட்டம் 500 வரை தொட , வக்கீலின் பாக்கெட்டும் வீங்கிக்கொன்டே செல்ல சுமார் 18மாதங்கள் கழித்து எந்த நம்பிக்கையும் இல்லாமல் சொந்த ஊரான ஷிமோகாவுக்கே வந்தார்களாம்.  தன்னுடன் வெளியேற்றப்பட்ட பலர் தன்னம்பிக்கை இழந்து , உடல் மெலிந்து வெளியூர் செல்ல துணிவில்லாமல் அப்படியே காலத்தின் பிடியில் சருகாகி போனார்கள் என கண்ணீருடன் கூறினார் .  தற்போது 14ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் மகிழுந்து ஓட்டுநராக இருப்பதாகவும் , இவர்களுக்கு நிரந்தர ஊழியர் நன்மைகள் கிடைக்காமலிருக்க நிறுவனம் தினக்கூலி அடிப்படையில் சம்பளம் தருவதாகவும் கூறினார். சுமார் 8 கிலோமீட்டருக்கு பளபளவென இருந்த விமானநிலைய சாலை பெரிய லாரி விபத்துக்குள்ளானதால்  அடைக்கப்பட்டு, பாலத்துக்கு அடியில் நெரிசலாக அனைத்து வாகனமும் அனுப்பப்பட்டது .

இப்போ உங்கக் கிட்ட சொன்னேன்ல எங்களை தினக்கூலியா வெச்சு முதலாலிங்க  சம்பாதிக்கிறாங்க அது தான் இதுக்கு காரணம் என்றார். ஒரு நாளில் 8மணிநேரம் வண்டி ஓட்டினால்  400ருபாய், 12 என்றால் 600 ருபாய், 16 என்றால் 800ருபாய் , 20 என்றால் 1000ருபாய் . எல்லாரும் தினம் 1000சம்பாதிக்க வேண்டி தூக்கமில்லாமல் வண்டியோட்ட ஏதோ ஒரு நாள் எல்லா வண்டிகளும் கவிழும் என்றார் . தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரின் பேரத்தினால் இந்த விமான நிலைய கதையும் , நம் பிரதமரின் மாநில வணிகச்சந்தை கொள்கைகள் பற்றியும் என் நிறுவன நிறுவனரின் குடும்ப சண்டை பற்றியும், ரஜினி-கமல் இனைந்து அரசியல் வரவேண்டிய கட்டாயம் பற்றியும் , பன்மொழிக்கல்வியின் அவசியம் பற்றியும் என என் நீண்ட பயணத்தை நினைவில் நிற்கும் பயணமாக மாற்றினார் அன்பு . பாவம் அவரும் சாதாரண ஊழியர் தான், பயண தூரத்தை குறித்துக்காட்டாமல் இரசீதில் என் கையொப்பம் பெற்று விடைபெற்றார் .

பிரம்மாண்டமாய் கட்டப்பட்டிருந்த  விமான நிலையம் பாராபட்சமாய் அந்த நள்ளிரவில் கூட ஆயிரம் அன்புகளை வாயிலோடு வரவேற்று அனுப்பிக்கொண்டிருந்து .

#அ ..ஆ ..ஆம்ஸ்டெர்டாம்

Sunday, June 11, 2017

வட்டமான சாலை

வட்டமான சாலையில்
அனைவரும் வரிசையாக ,
ஒருவர் பின் ஒருவராக ,
சென்று கொண்டிருக்கிறோம்  என
அறியாமல் செல்கிறோம்.
பாலைவனங்களில்
மெல்லச்  செல்லும் ஒட்டகங்ளாக,
ஒட்டகங்கள் நடந்து செல்லும்
நீளமான மணல் பரப்பாக ,
மணல் திருடி நெடுஞ்சாலை
மறைக்கும் பாரஊர்திகளாக ,
அதன் சாரதியின் பசியலுப்புத்
தீர்க்கும் சாலையோர வேசியாக ,
அவள் அறியாமல் சுமந்து பெற்ற
தேவனின் பிள்ளைகளாக ,
தெய்வங்களிடம் ஆலயங்களுக்குள்
கைகைகூப்பி  நிற்கும் மனிதனாக ,
அதன் வாசலில் மனிதனிடம்
கையேந்தும் பிச்சைக்காரனாக ,
அவன் கைகளில் தானமாய்
பிரசாதத்தை தரும் எச்சில்கரனாக,
தரையில் சிந்திய வெல்லப்பாகை  
நக்கிச் செல்லும் சிவப்பெறும்பாக ,
எறும்புகளை மிதிக்கும்
ஒட்டகத்தோல் காலணிகளாக
மாறி மாறி மிதித்தே
முடிகிறது வட்டமான சாலை .


Tuesday, March 21, 2017

நல்லைஅல்லை


"நல்லை  அல்லை " , குறுந்தொகையை சிந்திக்க வைத்த வைரமுத்துவுக்கு நன்றி சொல்லி ஆகவேண்டும்.. இன்பத்தமிழின் இனியசொற்களை பிரயோகிக்கும் போது  வரும் சுகமே தனி .

நம்மில் எத்தனை பேர் குறுந்தொகை படைப்பினை பற்றி பேசியிருப்போம் . அதனில் இருந்து இரண்டுவார்த்தை இன்று தமிழகமே முனகிக்கொண்டிருக்கிறது .

தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகுங் காலத்தில் அவனை விரைந்து மணம் செய்து கொள்ளும்படி தூண்ட எண்ணிய தோழி, “நிலவே, நீ இரவில் வந்தொழுகுந் தலைவரது களவொழுக்கத்திற்கு நன்மை செய்வாயல்லை” என்று கூறி இரவின் நிலவை  மறுத்ததாக அமையும் பாடல் குறுந்தொகையில் 'நல்லை அல்லை ' எனும் பிரயோகத்துடன் அமைந்துள்ளது .

இந்த திரைப்பட பாடலும் அதைப் போன்றே நாயகன் தொடர்ந்து நாயகியை தேடி அவளை அடைய நினைக்கும் போது அவள் தவிக்க விட்டு ஓடுவதையும் , அந்த நேரத்தில் செல்லமாக நிலவின் , இரவின் மீதும் கோபப்படுவதும் அத்தனை அழகு .

நம்மால் கூறப்படும் செய்தியைக் கேட்டறிதற்குரியவர் முன்னே இருக்கும் போதும் ,  அவரை நேரடியாக கூறாமல், வேறு ஒருவரை யேனும், மற்றோரு  பொருளையேனும் காட்டிக் கூறுவது முன்னிலை புறமொழியாகும் . அவ்வாறாக காதலன் காதலியின் உரையாடலை சங்கத்தமிழ் சொல்லுடன் நயம்பட அளித்திருக்கிறார் கவிஞர் .


நல்லை அல்லை நன்னிலவே நீ நல்லை அல்லை ,
நல்லை அல்லை நள்ளிரவே  நீ நல்லை அல்லை ,
நல்லை அல்லை நாறும்பூவே  நீ நல்லை அல்லை ,
முல்லை கொல்லை நீ நல்லை அல்லை

#காற்றுவெளியிடை
#நல்லைஅல்லை

Sunday, February 19, 2017

நாளொன்று போவதற்குள்

நாளொன்று போவதற்குள் ,
  நான்பட்ட பாடனைத்தும் ..!
தெரியாதோ ,  கார்முகிலே ,
  கடற்கரையை , கருவிழியே .!

ஆண் :

மேகம் சிவந்து கண்ண கசக்குது , அடியே .!!
உன் முகமோ அதுவே ,
என்னடி என் மேல் கோவம்,
சேர்ந்தே இத கடந்து போவோம் ..!!

( கார்முகிலே , கடற்கரையை , கீற்றொளியே , கருவிழியே .!)

பெண்:

நம் காதல் கண்களின் நீரும், அது தான்
சிலிர்க்கும் மழை துளியே ,
உன்மேல் எனக்கேன் கோவம் ,
மழைநீரின் குளிர்ச்சியை பார் புரியும் .!

( கார்முகிலே , கடற்கரையை , கருங்குயிலே , கருவிழியே .!)

 ஆண் :

நுனிப்புல்லாய்  ஆடித் திரிந்தேன் , பெண்ணே
உன் மூச்சின் சுவாசம் ,
எனை ஆட்டிய ஆட்டம் ,
ஒவ்வொரு நொடியும் பாடாய் படுத்தும் .


பெண் :

எப்புயலும் உனை களைந்திடவில்லை , அடடா
நம் காதலின் வீரம்  ,
உனை தாங்கிய  தாரம் ,
தினம் உடனிருந்தாயே உனக்கே தெரியும் .!!

நிலையில்லா பருவம் போல் , மனமே ,
நினைக்குது உனை தினமே ,
உண்ணலும் உண்ணேன்,
யான் நீ இல்லா வாழலும் வாழேன்..!!

( கார்முகிலே , கடற்கரையை , கண்ணொளியே , கருவிழியே .!)

ஆண் :

நாழிகைகள் நின்றதடி சிந்தித்தேன் , யாரால்
என்னவளே உன்னால் ,
கடல் மணல் அணையிது ,
கரையும் அது கடந்தால் தெரியும் .

நாளொன்று போவதற்குள் ,
   நான்பட்ட பாடனைத்தும் ..!
அறிவீரே ,  கார்முகிலே , கடற்கரையை , கண்ணொளியே , கருவிழியே .!

தூரம்

சிதறிய செந்நீர் கூழாங்கற்கள் ,
சிதிலமடைந்த சாராய பாட்டில்கள் ,
கற்பிழந்த ரசாயன குண்டுகள் ,
வீரியமிழந்த லாரிநீர்க் குழாய்கள்,
ஒளியிழந்து இருண்டுடைந்த  பல்புகள் ,
வாய்பிளந்த லத்திக் கம்பங்கள் ,
உயிரற்ற நடைப்பிணங்கள்,
சமாதானமாய் முடிந்தது தூரத்திலோர்
சமத்துவப் போராட்டம் ..!!

பாரதி பாரதி பாரதி !!!

பாரதியை போன்றதொரு ரசனைமிக்க கலைஞனை கவிஞனை  நாம் காண்பதரிது .  பக்திப்பாடல்கள் , தோத்திர பாடல்கள் , பாமாலைகள் ,வேதாந்தப் பாடல்கள் ,தேசபக்தி பாடல்கள் ,
தேசத்தலைவர்களுக்காய் பாக்கள் , காவியங்கள்  என எண்ணிலடங்கா படைப்புகளை நமக்கு அளித்திருக்கிறார் .

அவருடைய பிறந்தநாளன்று முகநூலில் நடக்கும் பாரதி பிறந்தநாள் நேரலை நிகழ்வுக்காக பாரதியின் இரண்டு அழகான படைப்புகளை கலந்து , மஹாகவியின் அதே வரிகளோடு , பொருட்சுவையோடு உங்களுக்காக இதோ அளிக்கிறேன் . மாயையை பழித்தல் எனும்  ஒரு வேதாந்தப் பாடலையும் ,  சிருங்கார ரசம் பொங்கும் கண்ணன் என் காதலன் எனும் ஒரு காதல் கவியத்தையும் கலந்து இதோ உங்களுக்காக .

தூண்டிற் புழுவினைப்போல் -- வெளியே
சுடர் விளக்கினைப்போல்,
நீண்ட பொழுதாக -- எனது
நெஞ்சந் துடித்த தடீ.

கூண்டுக் கிளியினைப்போல் –
தனிமை கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளையெல்லாம் –
மனது வெறுத்து விட்டதடீ.

உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ மாயையே
மனத் திண்மை உள்ளாரை நீ செய்வதும் ஒன்றுண்டோ மாயையே.

நீண்ட பொழுதாக -- எனது
நெஞ்சந் துடித்த தடீ.
மனத் திண்மை உள்ளாரை நீ செய்வதும் ஒன்றுண்டோ மாயையே


பாயின் மிசைநானும் -- தனியே
படுத் திருக்கையிலே
தாயினைக் கண்டாலும், -- சகியே,
சலிப்பு வந்ததடி.

வாயினில் வந்ததெல்லாம், -- சகியே,
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன், -- சகியே
நுங்க ளுறவையெல்லாம்.

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்    மாயையே
 நீசித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ மாயையே.
தாயினைக் கண்டாலும், -- சகியே,
சலிப்பு வந்ததடி
நீசித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ மாயையே

உணவு செல்லவில்லை; -- சகியே
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; -- சகியே,
மலர் பிடிக்கவில்லை;
குண முறுதியில்லை; -- எதிலும்
குழப்பம் வந்ததடீ;
கணமும் உள்ளத்திலே -- சுகமே
காணக் கிடைத்ததில்லை


என்னைக் கெடுப்பதற்கு  எண்ணமுற்றாய்கெட்ட மாயையே
நான்உன்னைக் கெடுப்ப துறுதி என்றேயுணர் மாயையே.
மணம் விரும்பவில்லை; -- சகியே,
மலர் பிடிக்கவில்லை
நான்உன்னைக் கெடுப்ப துறுதி என்றேயுணர் மாயையே.


பாலுங் கசந்ததடீ; -- சகியே,
படுக்கை நொந்ததடீ.
கோலக் கிளிமொழியும் -- செவியில்
குத்த லெடுத்ததடீ.

நாலு வயித்தியரும் -- இனிமேல்
நம்புதற் கில்லையென்றார்;
பாலத்துச் சோசியனும் -- கிரகம்
படுத்து மென்றுவிட்டான்

சாகத் துணியிற் சமுத்திரம்  எம்மட்டு  மாயையே
இந்தத்தேகம் பொய் யென்றுணர்தீரரை என் செய்வாய் மாயையே.

நாலு வயித்தியரும் -- இனிமேல்
நம்புதற் கில்லையென்றார்
இந்தத்தேகம் பொய் யென்றுணர்தீரரை என் செய்வாய் மாயையே



கனவு கண்டதிலே -- ஒரு நாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை, -- எவனோ
என் அகந்தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; -- சகியே,
மேனி மறைந்துவிட்டான்;
மனதில் மட்டிலுமே -- புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ.


இருமை யழிந்தபின் எங்கிருப்பாய் அற்பமாயையே
தெளிந்தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே.
வினவக் கண்விழித்தேன்; -- சகியே,
மேனி மறைந்துவிட்டான்;
தெளிந்தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே.

உச்சி குளிர்ந்ததடீ; -- சகியே,
உடம்பு நேராச்சு.
மச்சிலும் வீடுமெல்லாம் -- முன்னைப்போல்
மனத்துக்கு  ஓத்ததடீ.

இச்சை பிறந்ததடீ -- எதிலும்
இன்பம் விளைந்ததடீ.
அச்ச மொழிந்ததடீ; -- சகியே,
அழகு வந்ததடீ.

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ   மாயையே
சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல் அரசாட்சியை மாயையே
இச்சை பிறந்ததடீ -- எதிலும்
இன்பம் விளைந்ததடீ.
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ   மாயையே
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ   மாயையே


எண்ணும் பொழுதில்லெல்லாம்,
அவன்   கை இட்டவிடத்தினிலே
தண்என்றிருந்ததடீ;
புதிதோர்  சாந்தி பிறந்ததடீ
எண்ணியெண்ணிப் பார்த்தேன்;
 அவன்தான்யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம்
அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ.

என்னிச்சை கொண்டு உனையெற்றி விட வல்லேன் மாயையே
இனி உன்னிச்சை கொண்டு எனக்கு  ஒன்றும் வராது காண் மாயையே.
கண்ணன் திருவுருவம்  அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ.
கண்ணன் திருவுருவம்  அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ.

வசீகரம்/கவர்ச்சி

அமைதியான அந்த இரவு
ஏதோ ஒரு காவுக்காய் காத்திருக்கிறது ,
யாரையேனும் புதிதாக இன்று வேட்டையாடலாமா
என யோசித்திருக்கையில் ,
அவள் வருகிறாள் .
இன்றும் அதே உணவா என நினைத்து
மனம் சோம்புகிறது இருட்டில் ஒளிந்திருக்கும் அந்த மிருகம்.
சிறுகுழந்தையாய் இருக்கும் போது
பெண் மரப்பாச்சிகளுடன்
விளையாடிய அந்த ஆண் மிருகம் ,
தான் வளர்ந்தாலும் வளராத பக்கத்து
வீட்டுக் குழந்தையுடன் விளையாடி,
பேருந்து நெரிசல்களில் அவள் ப்ருஷ்டங்கள்
தேடி  சிசினமுரசி  , வலைப்பூக்களில்
ஆடை களையப்பட்ட நாயகிகளின்
முலைகளில் இன்பம் கண்டு ,
ஐம்பதுக்கும் நூறுக்கும் நெடுஞ்சாலைப்
புதர்களில் சில நிமிடப்  பசியாறி ,
மெதுவாக நகரத்தின் உள்ளே
வந்து இப்போது மரத்தின்
பின்னே நின்றுகொண்டிருக்கிறது .
மரபுவழியுடையணிந்தவளை எடைபோடுகிறது.
 ஐந்தரை அடிக்காரி அவளின்
ஆறு  கஜப்புடவையையும் தாண்டி ,
கண்மூடி அவள் உள்ளங்கியை
மனதில் களைந்து நச்சுக்கொட்டி ,
கண் திறந்து அவளை பற்றப்
பாய்கிற அந்த மிருகம்,
 சுருண்டு சடாரென்று
தரையில் வலியில் புரள்கிறது,
மனிதமிருகத்தின் சதைக்கறியை
ருசித்த தெருநாய்கள்  வாயில் எச்சில் சொட்ட திரும்பி ஓட,
இவன் பார்த்தக் கவர்ச்சிக்கன்னி ஓடிவந்து சொல்கிறாள் ,
"அண்ணா , என்ன ஆயிற்று
இதோ  திரிவூர்தியை அழைக்கிறேன் என்று "
மிருகம் உயிர்ப்பிணமாக அந்த
வசீகரத்தொடைகளில் சாய்கிறது 

போலி - ஒரு பக்க கதை

கொல்லனை கட்டிக்கிட்டு  கொல்லைல தான்  சோறு வெடிக்கணும் என தன் ஆச்சி கூறியதை நினைத்துக் கொன்டே வெறும் சுவற்றை வெறித்துக்கொண்டிருந்தால் தங்கம்மாள் .  தீட்டாத வைரத்தின் கருமை நிறம் என்றாலும் , அக்காளுக்கு ஏற்கனவே வைரத்தம்மாள் என பெயர் வைத்துள்ளதாலும்,  ஆசாரி குடும்பம் என்பதாலும்  வைத்தபெயர் அது. தங்கத்தை நகையாக்கும் தொழில் என்பதால் இவர்களுக்கு வருமானம் அதிகமாகக் கிடைக்கும் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அப்படியல்ல, இப்போது உள்ள நிலையே வேறு. அவர் இந்தத் தொழிலுக்கு வந்தபோது இருந்த நிலைமை வேறு.


இந்த கைராசிக்காரி புதிதாக திருமணம் ஆகி வந்த நேரத்தில் , பலரும் வந்து தங்கத்தைக் கொடுத்து,  திருமண விழாக்களுக்கும் மற்ற மங்கல விழாக்களுக்கும் தங்கள் விருப்பத்துக்கேற்ப விதவிதமான வடிவங்களில், நகைகளை செய்து கொடுக்கச் சொல்வார்கள். அப்போது ஏதோ சூதனமாக சேர்த்து வைத்த காசில் இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்தாயிற்று . முதல் வாரிசின் மூன்றாவது பிரசவத்திற்கு ஒரு மாதம் முன்னர் தாலியறுத்து வீட்டோடு ஒடுக்கப்பட்டால் தங்கம்மாள்.  புகையோடே குடியிருந்த இவளுக்கு , இன்னும் ஒரு பெண்ணை கரையேற்ற வேண்டுமே என்ற கவலை நுரையீரலை அரிக்க தொடங்கியது.



நகை செய்யும் ஆசாரி ஆதலால்  வீட்டில் வாசலில்  பட்டறைகள், கொல்லையில் சமைக்க , படுக்க, உடுக்க ஒரே அறை , வயக்காட்டில் நீரோடையருகே கழிவறை என இருந்தது அவள் வீடு.  குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடுவர். நகை செய்வோர் தங்கத்தைக் கழுவிய நீரை சாக்கடையில் கொட்டிவிடுவதில்லை.  அந்நீரைக் காய்ச்சி அதில் இருக்கும் தங்கத் தூள்களை  எடுத்து விடுகிறார்கள். தன் வீட்டுக் பொடுசுகளுக்கு  சிறு சிறு நகைகள் செய்துவிடுகிறார்கள். அப்போதெல்லாம் நகை தொழில் செய்யும் கடைத்தெருவை அந்த கடை வாசலை தினமும் பெருக்கி எடுத்துச் செல்ல ஒரு கூட்டமே இருக்கும்.



இரண்டு பெண்டுகளுக்கு இப்படி ஏற்கனவே திருமணம் செய்தாயிற்று , மூத்தவள் மூன்று முறை வயிறு தள்ளி வந்தபோதெல்லாம் சீதனமாய் கொடுத்தாயிற்று,  இரண்டாமவளின் கணவனுக்கு அத்துணை வீரியமில்லையென்றாலும் , மனைவியிடம் வீரத்தை காட்டி அவ்வப்போது துளித்துளியாய் உருவிவிட்டான். பன்னிரெண்டாம்  வகுப்பு முடிக்கப் போகும் கடைக்குட்டியை கைப்பிடித்து கொடுப்பதே இப்போது இவளின் கவலை.


கவலை படிந்த கருத்த முகத்துத்  தங்கம்மாள், பிளாஸ்டிக் தோடின் திருகாணியை மெல்ல சரி செய்யும் போது கடைசிப்பெண் சரசு ஓடிவருகிறாள், "அம்மா நம்ம ஜில்லால  நான் தான் முதல் மதிப்பெண் , செலவில்லாம மேல படிக்கலாம் மா ". தங்கம்மாளின் போலிப் பற்கள் விடியலின் புன்னகையில் மின்னின

நகல்

மெல்லிய நாற்பது வாட் மின் குமிழ்விளக்கின் 
வெளிச்சம் தான் அங்கு , 
ஐம்பதுக்கு ஐம்பது சதுரடி அறை, 
அவளெப்போதும் அந்த அறையினுள் தான் , 
வடமேற்கு மூலையில் கிடப்பாள் 
திரைச்சீலையிடப்பட்ட அந்த ஓரத்தில் மெலிதான காற்றுக்காய் 
தளிகைவிசிறி ஓடிக்கொண்டிருக்க 
அன்று அவன் வருகிறான்,
சிலநாள் முன்னே மலர்ந்த சாம்பல் நிறத்து மொட்டிவள், 
அவன் வெளிர்த்தோற்றத்தையும் ,
கருமையான சுருட்டைமயிரையும் பார்த்து பல்லிளிக்க ,
அவன் மெதுவாக இவளை நோக்கி நெருங்கினான்.
அவன் தேகம் அவளின் மேல் அணைக்கையில் ,
வெட்கப்  புன்னகை பளிச்சென 
குறுக்கும்நெடுக்குமாய் தெறித்தன ,
வண்ணங்கள் அவளூடே கரைந்து 
கருப்புவெள்ளையாய் மாற முற்பட்டன.
சிலநிமிட சல்லாபத்தின் முடிவில் 
அந்த வீரியத்தின் நகல்கள் 
ரெண்டாகவோ , நான்காகவோ .
எச்சமாய் கீழே ..!!