Tuesday, October 28, 2014

விழிகள் பேசும் மொழியில் - எனை சாய்த்தாளே .!

விழிகள் பேசும் மொழியில் நானே
புது கவிதை ஆகின்றேன் .!
கவிதையில் பார்த்த பொய்கள் உன்னில்
தானே மெய்யாய் காண்கின்றேன் ..!

இரவும் , பகலும்.
என் நிழல் போல் வந்தாயே .
இமை , நொடி,கணம்
உயிராய் பயணிப்போம்

விழியும் , இமையும் .
இணை பார்வையை போல் ஆவோம் .
கடல், அலை, மணல் ,சுழல்,
கலந்தோர் உயிராவோம்

தோள் சாய்கிறேன் , நிழல் காய்கிறேன் ,
நாம் சேரவே , நிதம் விழிக்கிறேன்

கனவோ , நனவோ
இருக்கட்டும் , நாம் இணைவது நடக்கட்டும்

முகிலும் நிலமகளும்
மழைத்துளியால் இணைவது போல்

உன்னோடு பயணிக்க ,
தடமெல்லாம் பிழைசெய்து
நடப்பதுவும் அறியாமல்
உன்னுடனே நிற்பதுவோ .

நான் போகும் சாலைகள் ,
நாமாக தெரிகிறதே ,
பயின்றது உன்னுடன் தான் ,
என்பது தான் காரணமோ .

இருவிழிகளில் பேசிய ரகசிய கவிதைகள்
இதயத்துள் கசிந்ததுவோ ,
என் மனதினில் வருடிய அழகிய பனித்துளி
அடிவேரினை சேர்ந்ததுவோ

கைக்கோர்த்த நினைவெல்லாம் ,
சலனங்கள் அழியாதோ .

உன்னுடன் இருக்கையில் பெண்மையை மறக்கிறேன் ,
நிதம் நிதம் தவிக்கிறேன் .

வெயிலும் மழையும்
இணை வானவில் போலாவோம்
எனை உனை கரம் மனம்
ஒன்றினில் ஒன்றாவோம்

பிழை செய்கிறேன் , உனை ரசிக்கிறேன் ,
நட்பிலே துளி விஷம் கலக்கிறேன் .

மலரும் முள்ளும்
சார்ந்தே இருப்பது போலே ..!


விழிகள் பேசும் மொழியில் நானே
புது கவிதை ஆகின்றேன் .!
கவிதையில் பார்த்த பொய்கள் உன்னில்
தானே மெய்யாய் காண்கின்றேன் ..!

Monday, October 6, 2014

மின்வணிக மோகம் ..!

கிழமைக்கொன்றாய் வண்ணக்காலணி ,
உடன் ஜோடிக்கிளியாய் பதமானக் காலுறை ,
பாதவிரல் உரசும் மெல்லிய மெட்டி ,
கணுக்கால் அணைக்கும் வெள்ளிக்கொலுசு,
முழங்கால்வலிக்கு தென்னமரக்குடி எண்ணெய் ,
வீண்கொழுபடக்கும் மின்தொடைசுருக்கி ,
தீராப்பசி தீர்க்கும் வாச மிகு குறிஉறை,
சுழற்சி செலவாய் விடாய் அணையாடை ,
வண்துணி மேல் எட்டிப்பார்க்கும் ஒளிர்வு உள்ளாடை ,
கால்குழாய்களின் காவல், தோல் இடைவார் ,
உதரம் குறைய பல ஆயிரம் உண்ட கருவி,
காற்றினில் எப்போதும் மார் மறந்த துப்பட்டா,
தாய்ப்பால் மறக்கடிக்கும் போலி முலைப்புட்டி ,
விளம்பரங்களில் மட்டும் பெண்ணை மயக்கும் கமகம் ,
விரல்களின் முத்தங்களுடன் உறவாடும் கைப்பேசி ,
நினைவில் நில்லா வகை ஆயிரம் ஆரங்கள் ,
திரை நாயகன் போல் மயிர் மழிக்கும் சவரக்கத்தி ,
பயோரியா மறந்து பளபளக்க பற்பசை ,
வடிவங்கள் இவைதான் என வகுப்பெடுக்கும் காதணிகள் ,
கலர் பார்வை மறைக்கும் கருப்பு கண்ணாடி,
அமேசான் காட்டிலிருந்து அரிய வகை தைலம் ,
படித்து வேலைக்குப் போகும் தனக்கு அடங்கும் மணப்பெண் ,
லட்சங்களாய்  மேல்நாட்டினில் சம்பாதிக்கும் வயதாகா மணமகன் ,
குடும்பப்பாங்காய் விவாகரத்தான இரண்டாம்தாரங்களென,
உச்சி முதல் பாதம் வரை வீட்டிலியே விலைக்கு வாங்க ,
மின்வணிக மோகத்தினால் நாம் உழல்கின்றோமே ..!!