Monday, November 30, 2015

அமைதியான பக்கங்கள் 4 - ஜாபாலி

அந்தக்  குடிசை புறநகரில் சரயு நதிக்கரையில் அமைந்திருந்தது. அயோத்தியின் துயர் இங்கு இருளாக பரவி இருந்தது. சலசலப்பில்லாத சரயு ராமனின் பிரிவால் கலங்கிப்போயிருந்தாள்.

இன்று நடந்த சம்பவம் ரிஷியை மிகவும் பாதித்திருந்தது .அவர் ராமரின் எதிர்காலத்தை பற்றி சற்றே வருந்திக்கொண்டிருந்தார் . நிதர்சனமான சிந்தனையில்லாமல் போகவே இப்படி ராமர் செய்வதாக அவருக்கு தோன்றியது . என்ன தான் வசிஷ்டரெனும் குருஸ்ரேஷ்டரின் தலைமையில் தசரதன் ஆட்சி புரிந்தாலும்  , தன்னையும் அவன் மதித்தது இவருக்கு பெருமையாகவே இருந்தது . ஆனால் தந்தையை போல் மகனில்லையே எனக் கவலைப்பட்டார் .

ஆச்ரமத்தில் தன் சிஷ்யர்களிடம் பின்வருவனவற்றை கூறுகிறார். 'மனிதச் சிந்தனை பரிணாமத்துக்கேற்ப நம் வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகளும் மறு பரிசீலனைக்கு உட்பட்டாக வேண்டும். நன்மை, தீது என்று எதுவும் கிடையாது. நிகழ்வன அனைத்தும் எதேச்சை ஒரு நிகழ்வு.  தத்துவார்த்தப்படி வேதங்களை சுருதிப்பிரமாணமாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது வைதிகம். மற்றவையெல்லாம் அவைதிகமாக கருதப்படுகிறது .ஞான மரபு கண்டிப்பாக வைதிகம், அவைதிகம் என்ற இரு பெரும் பிரிவைத் தன்னுள் கொண்டது. இதனை நம்மில் பலர் ஏற்க மறுக்கின்றனர் . கண்ணில் காணாதவற்றை நாம் ஏற்கும் நிலை என்றும் இருத்தல் கூடாது '.

மாணவர்கள் சென்ற பின் அன்று காலை நடந்தவற்றை யோசிக்கலானார்.

பரதன் அரசவை பெரியோரை அழைத்திருந்தான் . கானகம் சென்ற ஸ்ரீராமரை மீண்டும் அழைப்பதென்றும் , அவரை சபை பெரியோருடன் சென்று சமாதானமாய் அழைக்க வேண்டும் என முடிவு செய்தான் . பரதன் வசிஷ்டர் , சுமந்திரர் , ஜாபாலி ரிஷிகளையும் அரசமாதேவிகளையும் பெரும் திரளான அயோத்தி வாசிகளுடன் சித்ரகூடத்தை வந்தடைகிறான்.

ராமன் சென்ற பிறகு தயரதன் மனம் நொந்து பித்ருலோகம் அடைந்த செய்தியை கூற கண்ணீர் மல்க ஸ்ரீராமர் அங்கே தன் தந்தைக்கான ஜல தர்பணங்களை நிறைவேற்றினார்.

சத்யவான் ராமன், லக்ஷ்மணன் மகானுபாவன், பரதன் தார்மிகன். இம்மூவரும் மூன்று அக்னி ஜ்வாலைகளை போல விளங்கினர்  நண்பர்களும் சுற்றத்தாரும், பந்துக்களும்ராமன் மீண்டும் வர சம்மதிக்க வேண்டி காத்துக்கிடந்தனர்.

எங்கள் மன்னவா , இதோ இங்கிருக்கும் இத்துனை பேரும் தலையால் வணங்கி நாங்கள் வேண்டிக் கொள்வது இதுதான். எங்களிடம் கருணை காட்டு. உன் சகோதரன், சிஷ்யன், அடிமை என்று என்னிடம் கருணை காட்டு என்று பாதங்களில் வீழ்ந்து வணங்கி பரதன் ராமரை மீண்டும் அயோத்திக்கு வரச் சொல்லி மன்றாடினான்.

நம்  தந்தை அறிஞர்களில் மூத்தவர், மகானானவர், அவர் சொன்னதை செய்வதில் தான் எனக்கும் நமக்கும்  நன்மை இருப்பதாக நம்புகிறேன். நீங்கள் செல்லலாம் . நீ மக்களை நன்றாக ஆளப்போகிறாய் என நான் அறிவேன் என்றார் ராமர் .

அப்போது சற்றும் எதிர் பாரா விதமாய் ஜாபாலி மகரிஷி ராமனைப் பார்த்து, பேசத்  தொடங்கினார்.

'இராமா , இங்கே இத்துனை முறை பரதன் எடுத்துக்கூறியும் உன் மனம் என் மெய்யை ஏற்க மறுக்கிறது . இவர்களை பார் . இவர்கள் தான் உன் உடன் இங்கே இருக்கிறார்கள் . சென்றவர்கள் நமக்கினி வேண்டாம், உன் தந்தையையும் சேர்த்து. சாதாரண மனிதர்களைப் போல் நீ ஏன் இப்படி யோசிக்கிறாய்? யார், யாருக்கு பந்து, யாருக்கு யாரிடத்தில் என்ன காரியம், எவனால், எவனுக்கு நன்மை அல்லது தீமை, ஒருவனாக பிறக்கும் ஜீவன் ஒன்றாகவே மறைகிறது. தனிமை தான் நிதர்சனம் .

தாய், தந்தை, வீடு, செல்வம் எல்லாமே நமக்கெல்லாம் ஓர்  இடம் தான் . ராகவா  இதில் அதிக முக்கியத்துவம் கொடுத்து நல்லோர்  மயங்குவதில்லை. தந்தை வழியில் வந்த ராஜ்யத்தைத் துறந்து, மிகவும் கடினமான சிக்கல் நிறைந்த உபயோகமில்லாத வழியை ஏன் ஏற்றுக் கொள்ள விரும்புகிறாய். செல்வம் நிறைந்த அயோத்தி மாநகரில் முடிசூட்டிக் கொள்.

தயரதன் ஓர் அரசன். நீ வேறு ஒரு அரசன். ப்ரத்யக்ஷம் எதுவோ அதை மட்டுமே நம்பு. கண்ணுக்குத் தெரியாத கர்மாக்களை விடு. உலகில் நல்லவர்களை முன்னிட்டுக் கொண்டு நிதர்சனமான உண்மைகளை மட்டுமே ஏற்றுக் கொள்.'


முனிச்ரேஷ்டரே , 'மூவுலகிலும் நல்லோருடன்  சத்யம், தர்மம், பராக்ரமம்,  தயை  என்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. இது தான் நாம் கடை பிடிக்க வேண்டிய நியதியும் ஆகும். தர்மத்தில் சிந்தனையுடைய சத்புருஷர்கள், ஹிம்சையை வெறுத்து, குற்றமற்றவர்களாக உலகில் வாழ்கின்றனர்
மரியாதையை விட்ட மனிதன், கெடுதலான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவன் நல்ல மதிப்பை பெறுவதுமில்லை, நல்லவர்கள் அவனது இரட்டை வேடத்தை உணர்ந்து கொள்வார்கள். பெருந்தன்மை உடையவனைப் போல சிறு புத்தி உள்ளவனும் , ஒழுக்கத்தை விட்டவன்  நல்லொழுக்கம் உள்ளவன் போலவும் குறிக்கோளே இல்லாதவன் உயர்ந்த குறிக்கோள் உள்ளவன் போலவும் நடித்தால் சத்தியவான்கள் யாரென எளிதாக அறிந்து கொள்வார்கள் .

சத்யமும் கருணையும் காலம் காலமாக மன்னனின் குணம் என்று சொல்லப் பட்டு வந்திருக்கிறது. அதனால் சத்யத்தை அடிப்படையாகக் கொண்ட ராஜ்யம், சத்யமாக உலகில் நிலைத்து நிற்கும். ரிஷிகளும், தேவர்களும், சத்யத்தை தான் போற்றினர். இந்த உலகில் சத்யவாதிகள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

 எல்லாமே சத்யத்தை சார்ந்து தான் இருக்கிறது. அதனால் சத்யத்தை மிஞ்சி வேறு எதுவுமே இல்லை. தானம், யக்ஞம் செய்தல், ஹோமம் செய்தது தவம் செய்வதும், உடலை வருத்தி செய்யும் விரதங்களும் வேதங்கள், எல்லாமே சத்யத்தின் அடிப்படையில் அமைந்தவை. அதனால் சத்யத்தை நாம் அனுஷ்டிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒருவனே உலகை ஆள்கிறான். ஒருவனே குலத்தைக் காக்கிறான்

என் தந்தை வாக்குத் தவறாதவர். அவர் சத்யத்தை நான் நிலை நிறுத்த வேண்டும். லோபத்தினாலோ, மோகத்தினாலோ, அறியாமையினாலோ கூட அதை நான் மீறுதல் கூடாது. தாங்கள் என்னை செய்யச் சொல்லும் இந்த செயல், யுக்தி பூர்வமான வாக்கியங்களால் நீங்கள் சொன்னது, எனக்கு நன்மையைச் செய்யாது. 

நான் எப்படி குருவிடம் வன வாசம் போகிறேன் என்று சத்யம் செய்து விட்டு, பரதனிடம் குருவான தந்தை சொல்லை மீறி நடப்பேன்.

நாத்திகம் பேசும் உங்களை அருகில் சேர்த்துக் கொண்ட என் தந்தையைச் சொல்ல வேண்டும். நாஸ்திக வாதம் தர்ம வழியிலிருந்து விலகிப் போகச் செய்யும். ஜாபாலி முனிவரே, உங்களுக்கு முன்னாலும், பின்னாலும் பலர் சுபமான பல காரியங்களைச் செய்தனர்.  ஹோமங்கள் செய்தும், புண்ய கர்மாக்களைச் செய்தும் சௌக்யங்களை அடைந்தார்கள்.

தங்களின் சார்வாக கருத்தாளர்  என அறிந்தும் , எம்  தந்தையார் தங்களை சபையினில் வைத்தமைக்கு நீங்கள் செய்யும் நன்றியா இந்த அவமரியாதை? என ஜாபாலியை பார்த்து வினவினார் ராமர்.

'இராமா இதோ இந்த பரதனுடைய துக்கத்தை அகற்றவும், அயோத்திமக்களின் ஆவலைப் பூர்த்தி செய்யவும்,  உனக்கு நான் எதிர்மறையான உலகாயவாத உபதேசங்களை எடுத்து கூறினேன். பிரமாணங்கள் சார்ந்த உன் பதில் என்னை இன்று திருப்தி படுத்தியுள்ளது . ஆனால் எதுவும் நிலையில்லை . இன்றைய நம் நம்பிக்கை நாளை இல்லாமல் போகலாம் . உன்னை உன் நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால்  தோன்றியதைச் சொன்னேன். சில சமயங்களில் எதிர்மறையாக பேசியும் ஒரு நல்ல செயலை நடக்கச் செய்ய வேண்டியுள்ளது. உன் தந்தை எனக்களித்த மரியாதைக்கு , உன் முடிவு எதுவாயினும் என்றும் நான் கட்டுப்படுவேன்' என பதில் கூறினார் ரிஷி

பல்வேறு பிரயத்தனங்களும் தோற்றுப் போக, இராமனின் பாதுகையை கொண்டு அடுத்த பதினான்கு ஆண்டுகள் அரசாண்டான் பரதன்.

ஜாபாலி ரிஷியையும் , சார்வாக கருத்துகளையும் சலனமில்லா சரயு நதி அமைதியாய் மறந்திருந்தது .



Thursday, November 19, 2015

அமைதியான பக்கங்கள் 3 - தாரை

கட்டைகளைக் கொண்டு வந்து நெருப்பை மூட்டினான். கொழுந்து விட்டெரியும் அக்னியை புஷ்பங்களால் பூஜித்து, சத்காரங்கள் செய்து, அடக்கத்துடன் அவர்கள் நடுவில் கொண்டு வந்து வைத்தான் அனுமன். இருவரும் அக்னியை வலம் வந்தனர்.  சுக்ரீவனும், ராகவனும் நட்பு எனும் உறவை ஏற்றுக் கொண்டனர்.

 நரனும், வானரனும் தங்கள் சுக, துக்கங்களை  பகிர்ந்து கொண்டனர். மனிதருள் மாணிக்கமான ராகவனால் தன் காரியம் நிறைவேறும் என்று சுக்ரீவன் நம்பினான்.

சுக்ரீவன் பலமாக கத்தினான். வாலியை யுத்தம் செய்ய வரும்படி அழைத்தான். அந்த அறை கூவலைக் கேட்டு, வாலி கோபத்துடன் குதித்துக் கொண்டு எழுந்து வந்தான். மகா பயங்கரமான யுத்தம், வாலி, சுக்ரீவர்களுக்கிடையில் மூண்டது. இருவரும் உருவத்தில் ஒத்து இருந்தனர். ராகவனுக்கு எது சுக்ரீவன், எது வாலி என்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. அதனால் உயிரை பறிக்கும் சரத்தை விடவில்லை. இதற்கிடையில் வாலியின் கையால் நல்ல அடி வாங்கி களைத்த சுக்ரீவன், ராமனைக் காணாமல், திரும்ப ருஸ்யமூக மலைக்கு ஓடி விட்டான்.

அழுது புலம்பிய வானர இளையவனை பார்த்து எங்கள்  மேல் நம்பிக்கை வை எனக் கூறி  ,'பூத்துக் கிடந்த புஷ்பங்களைப் பறித்து மாலையாக கட்டி, லக்ஷ்மணன் சுக்ரீவன் கழுத்தில் மாலையாக போட்டான்.
வானரத்தலைவன்  மீண்டும்  வெளியே வரும்படி போருக்கான அறைகூவலை பலமாகச்  செய், மீதம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் இராமன். வானை பிளந்தது அந்த கர்ஜனை .

அந்தப்புரத்தில் இருந்த வாலி, தன் சகோதரன் அடங்காத கோபத்துடன் எழுப்பும் போருக்கான அறைகூவலைக் கேட்டான். ஆங்காரத்துடன் எழுந்து நின்ற வாலி , இன்றோடு ஒரு முடிவு கட்டப்போவதாக கிளம்பினான்.


அவனை தாரை  அணைத்து, தன் அன்பை வெளிப்படுத்தி, பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல், பரபரப்பை அடக்கிக் கொண்டு, நிதானமாக பேசலானாள்.' சற்றே நிதானியுங்கள் மன்னா. ஒரு முறை அடி வாங்கியவன் திரும்பவும் போருக்கு அழைக்கிறான், உங்களால் அடிக்கப்பட்டு சக்தியை இழந்தவன், திசை தெரியாமல் உயிருக்கு பயந்து நடுங்கியபடி போனவன், திரும்பவும்  இங்கு வந்து நின்று போருக்கு அழைப்பது எனக்கு சந்தேகத்தை உருவாக்குகிறது. நல்ல பலமான வீரனின் உதவி கிடைத்ததாலே அவன் இங்கு வந்து நிற்கிறான். நம் குமாரன் அங்கதன் வனத்தில் சுற்றித் திரிந்து விட்டு வரும் பொழுது, அவனுக்கு ஆப்தமான சில ஒற்றர்கள் 
தசரதமைந்தர்கள் தங்கள் தம்பிக்கு உதவுவது  போல்  செய்தி பரவுதாக கூறினான் . இப்போது இவர்களை எதிர்க்க வேண்டாம் .

'தாரை ,நிறுத்து அந்த சிற்றறிவுள்ள சுக்ரீவனுக்கு வேண்டுமானால் உதவி தேவைப்படலாம் . எனக்கு வேண்டாம் . என்னை நேரில் யார் எதிர்த்தாலும் அவர்களை தூசாக்கிடுவேன்' என உறுமினான் வாலி .

நாதா , 'சுக்ரீவன் உங்களுக்கு சகோதரன் . அவனுடன் ஏன் விரோதம்? உங்கள் எதிரில் நின்றாலும், உங்களுக்கு உறவு முறையுடையவன் தான் அவன் .  உடன் பிறந்தவனுக்கு சமமான உறவினன் வேறு யார் இருக்க முடியும்
அவனை மூத்தவனாக, தமையனாக இருந்து அரவணைத்துக் கொண்டு போவது தானே தங்களுக்கு அழகு . ராமனுடன் நட்பு கொள்வதும்  உங்களுக்கு நன்மையை  பயக்கும். ' என்றாள் .

என் சகோதரன் எனக்கே எதிரில் நின்று கர்ஜிக்கும் பொழுது என்ன காரணம் சொல்லி பொறுத்துக் கொள்வேன்?
போருக்கு அறை கூவும் பொழுது பதில் கொடுக்காமல்  பொறுத்துக் கொள்வது மரணத்தை விட கொடியது. அவன் திமிரான குரல் இனிக்குன்றிப்போகும் வகையில் அதனை மிதிக்கப்போகிறேன் என புறப்பட எத்தனித்தான் வாலி .

கண்களை மூடினால் தாரை .
அன்று,
குன்றிப்போனக் குரலில் விம்மி அழுது கொண்டிருந்தான் சுக்ரீவன் . கிஷ்கிந்தையின் பெரியோர் எல்லாரும் கூடி இருந்தனர். மாயாவியை துரத்திச்  சென்ற வாலி குகையிலிருந்து வெளி வராததும் , வெகு நாட்கள் இவ்வாறு சங்கடத்துடன் தவித்தபின் ஒரு நாள், அந்த பள்ளத்திலிருந்து ரத்தமும், நிணமுமாக வெளி வந்தது. அதைக் கண்டு தான் பயந்தும் , அசுரர்கள் கூச்சலிடும் ஒலியும் காதில் விழுந்ததும் ,மூத்தவன் வலி தாங்காமல் அலறுவது போல கேட்டதும் கூறி சபையிலே புலம்பினான் .  மலை போல் இருந்த , ஒரு பெரிய கல்லை எடுத்து புரட்டி, பள்ளத்தின் நுழை வாயிலை மூடி விட்டு அவனுக்கு நீர் தெளித்து விட்டு துக்கத்துடன் தான் கிஷ்கிந்தா வந்து சேர்ந்தாக கூறி அழுதான்.

அமைதியான சபையின் நடுவே வந்தாள் தாரை . சுக்ரீவரே இந்த கிஷ்கிந்தை பிரஜைகள் எல்லாருக்கும் இப்போது வழி நடத்த ஒரு மன்னன் தேவை . தாங்கள் தான் அனைவரையும் வழிநடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தாள் .  மந்திரிகள் இதனைக் கேட்டு சேர்ந்து யோசித்து சம்மதித்து சுக்ரீவனுக்கு  முடி சூட்டினர். அப்போது சபையில்  வானர பிரஜைகளே , 'அசந்தர்ப்பம் காரணமாக அண்ணன் வாலியின் இடத்தினில் நான் அமர்ந்தாலும் , இந்த பட்டமஹிஷியின் இடத்தினில் தாரா தேவி தொடர்ந்து வழி நடத்துவார், இவரின் தெள்ளிய சிந்தனையினால்  நம் அனைவர்க்கும் நன்மை பயக்கும் என்றான்.  அமோதித்தது சபை.

மீண்டு வந்த வாலி சபையினில் அவை வரிசைக் கண்டும்,   அரியாசனத்தினில் தம்பியினைக்  கண்டும் வெகுண்டு சுக்ரீவனை நாட்டை விட்டு வெளியேற்றினான் . உருமாதேவியை அபகரித்து தன் அரன்மையினில்  அடைக்கிறான் .

இன்று ,
கண்களில் கண்ணீர் மல்க அவனை அணைத்து தாரை  பிரியமாக பேசி, அழுது கொண்டே பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து நல்வசனங்கள் சொல்லி மங்களா சாஸனம் செய்தாள்.

'தேவி , என்னிடம் உன் பாசத்தை காட்டி விட்டாய். என்னிடம் உனக்கு பக்தி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு விட்டேன். நான் கர்வத்தோடு எதிரில் போய் நின்றாலே தாங்க மாட்டான். ஒரு தட்டு தட்டி கர்வத்தை அடக்கி விட்டு வருகிறேன்' என்று கோபமாக புறப்பட்டான் வாலி .

அன்றொருநாள் இதே போல் மாளிகையின்  வாயிலில் நடுங்கும்படி துந்துபி எனும் அசுரன் முழக்கம் இட்டான். பொறுக்க மாட்டாத கோபத்துடன் பொங்கி எழுந்து போரிட்டு அசுரனின் உடலை வீசி எறிந்தான் வாலி.
ஒரு யோசனை தூரம் தள்ளி அந்த உடல் விழுந்தது.  வீசிய வேகத்தில் அந்த இறந்த உடலில் இருந்த ரத்த துளிகளும், நிணமும் மதங்கருடைய ஆசிரமத்தில் விழுந்தது. வாலி அங்கு வந்தால் சிலையாகக்கடவான் என்ற சாபத்தினால் அன்று முதல் ருஸ்ய மூக மலையின் அருகில் கூட செல்வதை நிறுத்தியதும் தாரைக்கு நினைவு வந்தது . மனம் கலக்கமுற்றது .

 வேகமாக உருமையை சந்திக்க சென்றாள் . தனிமையில் கணவனை பிரிந்து துக்கப்படும் சுக்ரீவனின் துணைவியைப் பார்த்து இரு கரங்களையும் கூப்பினாள் . அந்த அரையினில் ஒரு முழுமை மௌனத்தினால் நிறைந்தது.

ஆக்ரோஷமான சகோதர சண்டையின் நடுவில் வானர ராஜன் இராமனின் அம்பினால் தாக்கப் பட்டு, பூமியில் விழுந்தான். மண்ணில் வீழ்ந்த வாலியின் கேள்விகளுக்கு அமைதியாய் பதிலளித்தார் ராமர்.

தன் மனம் நினைத்ததைப் போன்று வீழ்த்தப்பட்ட வாலியின் உடலை ஓடி வந்து அணைத்தாள் தாரை . ' உன் போன்ற அரசனுக்கு இப்படி தரையில் விழுந்து கிடப்பது அழகல்ல. உயிர் போனாலும் இந்த பூமியை விட மாட்டேன் என்பது போல அணைத்துக் கொண்டிருக்கிறாய்.  இந்நிலையில் உன்னைக் கண்டும் ஆயிரக் கணக்காக சிதறி விழவில்லையே கல் மனம். சுக்ரீவன் மனைவியை அபகரித்தாய். அவனையும் துரத்தினாய். ஆனால் அவன் மூலமாகவே உனக்கு முடிவும் வந்து விட்டது, பார். நன்மையை நான் சொல்லியும் ஏற்காமல் என்னை நிந்தித்தாய். அலட்சியம் செய்தாய். மோகம் உன் கண்களை மறைத்தது.  உன் நன்மையை விரும்புபவள் தானே நான். நன்மையைத் தானே சொன்னேன். என் நிலை இப்போது மிக பரிதாபமாக ஆகி விட்டது.  நம் மகன் அங்கதனை மிகப் பிரியமாக கொண்டாடி வளர்த்தோம்.  எங்கள் இருவரையும் பிரிந்து வெகு தூரம் செல்லத் தயாராகி விட்டீர்களே.  உங்கள் பாதத்தில் விழுந்து வணங்குகிறேன். அறியாமல் நாங்கள் தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்.

கீழே விழுந்த தாராவை மெதுவாக ஹனுமான் சமாதானம் செய்தான். இந்த வானர வீரர்களும், உன் மகன் அங்கதன், வானர ராஜ்யம் இவை இப்பொழுது உன் தலைமையில் இயங்கட்டும்.  நீ பொறுப்பை ஏற்றுக் கொள்.
அரசனுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளுடன் இவனுடைய சம்ஸ்காரங்களைச் செய்வோம். அங்கதனுக்கு முடி சூட்டுவோம்.

தந்தை வழி ராஜ்யத்தை சுக்ரீவனே அடையட்டும். மேற் கொண்டு கிரியைகளை அவனே செய்யட்டும். அங்கதனிடத்தில் இப்படி ஒரு எண்ணம் வேண்டாம் . அனுமனே  ஒரு புத்திரனுக்கு தந்தை தான் சிறந்த உறவு. தாயல்ல. இந்த வானர ராஜ்யத்தை நிர்வகிக்கும் சக்தியும் எனக்கில்லை . முன்பும் இல்லை, இப்பொழுதும் இல்லை. என் முன் அடிபட்டு கிடக்கும் என் நாதனை நான் சேவித்தால் போதுமானது.

வாலி தன் கடைசி சாசனத்தை உரைக்கலானான் . 'தாரையின் மகன். உனக்கு சமமான பராக்ரமம் உடையவன். எதிரிகளை வதம் செய்ய இவன் உன் முன் நிற்பான். உனக்கு அனுகூலமான காரியங்களைச் செய்து யுத்தத்தில் உதவியாக இருப்பான். இதோ தாரை  நம் சுஷேணனரின்  மகள். இவள் சூக்ஷ்மமான அறிவு உடையவள்.   இவள் சரி என்று சொல்வது கண்டிப்பாக சரியாக இருக்கும். இவள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்.  சந்தேகம் இல்லாமல் அந்த வழியில் செல். என் தேவி சொல்லி ஒரு காரியம் வேறாக ஆனதே இல்லை.


வாலியின் உயிர் பிரிந்து சென்றதும் , இராமனை பார்த்துக் கேட்கிறாள் ,'ஒரே பாணத்தால் என் கணவனை அடித்து வீழ்த்தி விட்டாய். என்னையும் அதே அம்பால் அடித்து விடேன். ராமா, நானும் என் கணவன் இருக்குமிடம் செல்வேன்.  நான் இல்லாமல் வாலி மிகவும் கஷ்டப்படுவான். மனைவியை பிரிந்து, குமாரர்களான ஆண்கள் எப்படி கஷ்டப் படுவார்கள், துக்கம் அனுபவிப்பார்கள்  என்று நீ உணர்ந்தவன் அதனால், மனதில் புரிந்து கொண்டு என்னையும் வாலி சமீபம் அனுப்பி விடு.

தாராதேவி நீ மன அமைதியை பெறுவாய். உன் மகனும் யுவராஜா பதவியை அடைவான். இது விதியின் விளையாட்டு அல்லது படைத்தவனின் விருப்பம், என்றும்  வீர பத்தினிகள் வருந்துவதில்லை' என்று   பரந்தாமனான ராகவனால்,  சமாதானம் செய்யப் பட்ட தாரை,  தன் துயரை மறந்து இயல்பாக ஆனாள்

 நான்கு மாதங்கள் ஓடி விட்டன . சுக்ரீவனின் சேனை இன்னும் வந்தடையவில்லை என இலக்குவனை அழைத்து வர அனுப்புகிறார் ராமர். வாக்குத் தவறிய வானரத் தலைவனை கோபத்துடன் காண மாளிகைக்குள் செல்கிறான் . அவன் கோபத்தை பார்த்து சமாதானப் படுத்த தாரை ஓடி வருகிறாள் . இலக்குவன் சொல்கிறான் . நியாயம் மறந்தானோ தங்கள் மன்னவன் . நாம் இணைந்து ஒரு செயலில் இறங்கினோம். பாதியில் அதை விட்டு விலகினால், தத்துவம் அறிந்த தாரையே நீயே சொல். எங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறான்.

'கோபம் கொள்ள இது நேரம் இல்லை. தன்னைச் சார்ந்தவர்களிடம் அதிகமாக கோபம் கொள்வதும் விவேகமாகாது. உங்கள் நலத்தில் அக்கறை கொண்டவன் தான் சுக்ரீவன், அவனுடைய கவனக் குறைவை பொறுத்துக் கொள்.ங்களுக்கு நீங்கள் செய்த பெரும் உதவியையும் அறிவேன். இனி செய்ய வேண்டியதையும் அறிவேன். அதே சமயம் மன்மதனுடைய தவிர்க்க முடியாத சக்தியையும் அறிவேன்.  பெரிய மகரிஷிகளே, தர்மத்தை அனவரதமும் அனுஷ்டிப்பவர்கள், தவத்தில் மூழ்கியவர்களே, சமயத்தில் காமனின் வசமாகி, மோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த வானர மன்னன் தன்னை மறந்ததில் என்ன ஆச்சர்யம்?' என  உண்மை நிலையை எடுத்துச் சொல்லி  அழகாக சமாதானம் செய்தாள்.

சுக்ரீவன், உங்களுக்கு உதவி செய்ய வானரங்களை பல இடங்களுக்கும் அனுப்பி, படையுடன் வரச் சொல்லி இருக்கிறான். யுத்தம் செய்ய படைபலம் வேண்டாமா?
இந்த ஏற்பாட்டை சுக்ரீவன் முதலிலேயே செய்து விட்டான். ஆயிரம் கரடிகள், வானரங்கள் இன்று வந்து உன்னை சந்திப்பார்கள். ஆத்திரத்தை விடு லக்ஷ்மணா, கோடிக் கணக்கான அதற்கும் அதிகமான வானர வீரர்களை சந்திக்கப் போகிறாய்.


ஸ்ரீராம சேவைக்காக சமாதானமான இலக்குவனோடு மாபெரும் வானர சேனை தெற்கு நோக்கி புறப்பட்டது.

சந்திரனின் ஸ்பரிசத்தால் மகிழ்ச்சியுடன் கண் விழித்த தாரகையோடு கிஷ்கிந்தை தாரையை  அமைதியாய் மறந்திருந்தது .

Friday, November 6, 2015

அமைதியான பக்கங்கள் 2 - சம்பாதி

நீலக்கடல் அன்று சேதுக்கரையிலே வேகமாக மோதி ஆரவாரம் செய்துகொண்டிருந்தது. அங்கே குழுமியிருந்த வானரர்களுக்கு ஏதோ குறிப்புக் காட்டுவது போல ஒலித்தது . திக்கெட்டும் ராமனுக்காய் தேடிச்சென்ற அவர்கள் இங்கே மீண்டும் திசை அறியாதவர்களாய் கூடியிருந்தனர் .


இந்தக் கூட்டத்தை பார்த்து சிரித்தவாறு அந்த முதிர்ந்த கழுகு மலை உச்சியினில் சிரித்து கொண்டிருந்தது . கண்டிப்பாக இன்னும் தான் ஓராண்டாவது இறை தேடிச்செல்லவேண்டாம் அதற்கான உணவை இந்த குரங்குக்கூட்டமே விட்டுச் செல்லும் என நினைத்து அகமகிழ்ந்தது.


 வானரர்கள் சீதையை காக்க வந்து தாம் அனைவரும் உதவ முடியாமல் தவிப்பதை விட உயிர் துறப்பதே மேல் என புலம்பிக்கொண்டிருந்தனர் .


அப்போது அனுமன் கூறுகிறான்,' நம்மால் முடிந்தவரை எல்லாவிடங்களிலும் சீதையைத் தேடிப் பார்த்தும் , அவள் அகப்படாவிட்டால் அப்போது நாம் உயிர்விடுவது சிறந்ததாகுமேயல்லாமல், இப்பொழுதே உயிர்விடுவோமென்பத தக்கதாகாது. சீதையை காக்க வேண்டி உயிர் துறந்த ஜடாயுவை போன்றல்லவா நாமும் இறக்க வேண்டும் . இப்படிக் கோழைகளாக அல்ல'.


அந்தக் குரல் கேட்டு சம்பாதி எனும் வயதான கழுகின் கண்கள் நீர்க்குளமாகின. சில நிமிடம் மூர்ச்சையாய் விழுந்து கிடந்தது. தன் சிறகுகள் இப்போது தான் மெய்யிலே எரியூட்டப்பட்டதாக உணர்ந்தது.

தன்மீது விழும் சூரியகிரணங்கள் குருதி படிந்து கறைகளாய் தெரிந்தது.

தன் மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள் திரை பிம்பங்களாக ஓடின .


அந்த பிம்பங்களிலே ..


அந்த இரண்டு சகோதரர்களுக்கும் சூரியனை காணும் போது , எப்போதும் சூரியனார் இரண்டாவதாகத் தான் தெரிவதுண்டு . அவரின் சாரதியும் தங்களின்  தந்தையுமான அருணன் தான் அவர்களுக்கு முதலில் தெரிவார் . எப்போதுமே இவர்களுக்கு சூரியன் மேல் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டிருந்தது .


சிலநேரங்களில் தம்பி ஜடாயு கூறியது போல் , ' ஒரு வேலை சூரியனாரல் நாள் முழுவதும் வேலை செய்யமுடியாமல் போகவே சந்திரனை மாற்றாளாக அனுப்பி வைத்திருப்பாரோ' என்ற சந்தேகம் தனக்கும் வரும் என நினைத்த வாரே சென்றுகொண்டிருந்தான் இளமையான சம்பாதி.


'அண்ணா , நம்  தந்தை ஏன் தன் தாயார் வினதையிடம் எப்போதும் கடிந்து கொள்கிறார் '. என்றான் ஜடாயு


'தான் முழு பராக்ரமும் அடையாமல் போக , பாட்டியாரின் அவசரம் தான் காரணம் என அவருக்கு என்றும் மாறாக் கோபம், நீ அதை பற்றி ஏதும் தந்தையிடம் கேட்காதே .  ' என்றான் சம்பாதி .


'உங்களுக்கு எப்படி அண்ணா இது தெரியும்' என அடுத்த கேள்வியை முன் வைத்தான் ஜடாயு .


'ஒருமுறை உன்னைப்போல் இதே கேள்வியை நான் நம் சிறியா தந்தையான கருடனை கேட்டேன் . அவர் இந்த விளக்கத்தை என்னிடம் கூறி , தந்தையிடம் கேட்கக் கூடதென  கூறினார். அதையே இன்று உன்னிடம் நான் கூறினேன் ' என்றான் அண்ணன் சம்பாதி .


வேறொருநாள் , சகோதரர்கள் இருவரும் குன்றின் மேல் நின்று கொண்டு சூரியனை பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஜடாயு கூறினான் ,'அண்ணா அந்த சூரியன் பார்க்க வெகுதூரமாய் இருப்பது வெறும் ஏமாற்று என்று நினைக்கிறேன் . அதன் உயரத்தை சென்று பார்கலாமா ? ' என்றான் .


'இல்லை தம்பி அது உன்னால் முடியாது. அதன் வெகு உயரத்தினில் இருக்கிறது . அங்கு வரை செல்ல இயலாது' என்று பதிலளித்தான் சம்பாதி .



'உங்காளால் முடியாமல் போகலாம் அண்ணா , என்னால் மிக எளிதாக அதன் உயரத்தினை அடைய முடியும் . பாருங்கள்' என கூறிக்கொண்டே பறக்கலானான்.


'நில் தம்பி அது அபாயமானது' என ஜடாயுவினை பின்தொடர்ந்தான் சம்பாதி.


விளையாட்டு அபாயமானதை உணர ஆரம்பித்து ஜடாயுவினை முந்த வேகமெடுத்தான் அண்ணன் .


வெகுளியாய் விளையாட்டை ஆரம்பித்த தம்பி , அண்ணன் போட்டியில் வெல்ல வேகமாக துரத்துவதாக எண்ணி இன்னும் அதிகவேகமாக பறந்தான் .


குளங்கள் சிறுவட்டமாகவும் , குன்றுகள் புள்ளிகளாகவும் , மாளிகைகள் பெட்டிகளாகவும் தெரிய தொடங்கின.

பகலவக்கதிர்கள் சுட்டெரிக்க ஆரம்பித்தன . சிறியவன் பதட்டமடைந்தான் .. கண்கள் இருண்டன , உடலெங்கும் அனல் தகித்தது . தம்பியை காப்பாற்ற தன்  சிறகுகளை அகலவிரித்து அவனை அணைத்து நிலமடைந்தான் சம்பாதி .


மயங்கிய கழுகுகள் கண் திறக்கின்றன .


ஜடாயு கதறுகிறான் , 'என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா . என்னால் தானே இப்படி ஆனது . உங்கள் பேச்சினைக்  கேட்டிருந்தால் இப்படி ஆகிருக்குமோ . இப்போது நான் என்ன செய்வேன் . நம் தந்தை என்னையும் இனி கடிந்து கொள்வாரே . உன்னகிந்த நிலைமையின் காரணம் நான் அல்லவோ . எனக்கிது நேர்ந்திருக்கலாமே . மும்மாரி பெய்யும் மேகங்காள், துளி நீர்த் தெளித்திருக்கலாமே. என் முட்டாள் கூற்றுகளுக்காய் என் அண்ணனைக் தண்டிக்கலாமா சூரியதேவா . உன் கோபம் என் மீது தானே .


தம்பியை காத்த திருப்தியில் சம்பாதி கூறிகிறான் ,' தம்பி நான் இன்னும் சுவாசத்தோடு தான் இருக்கிறேன் . அப்படியெனில் எனக்கு ஏதோ ஒரு கர்மம் இன்னும் மீதம் இருக்கிறது . சிறகுகள் இல்லா பறவையாக நான் இனி தனித்து காணப்படுவேன் . உனக்கு முன்னர் நான் பிறந்தது உன்னை காக்கவே என்பது எனக்கு இப்போது புரிந்தது . நீ கவலைப்  படாதே '


அன்று ஜடாயுவின் கண்களில் இருந்த  அந்த வலியுடன் கலந்த கண்ணீர், இன்று சம்பாதியின் கண்களில்.


இன்று , கண்விழித்து சம்பாதி அனுமனை நோக்கிச் செல்கிறான் .


சம்பாதி வேகமாக அவர்களை நோக்கி நடந்து வருகையில் சம்பாதியின் பேருருவத்தைக் கண்டு மற்றைய வானர வீரர்கள் அஞ்சியோட, அவனை இராவணன் சார்பினன் என்றே கருதி 'பறவை வேடம் பூண்ட ராவண அடிமையா  நீ' என கர்ஜிக்கிறான் அனுமன்


பின்னர் , பிறர் முகக் குறிப்பறிந்து உண்மையையுணர்பவனாதலால், சீற்றமில்லாமலும், துயரத்தால கண்ணீரைப் பெருக்கியும் வருகின்ற சம்பாதியைக் கண்டு அவன் குற்றமறறவன் என உணர்ந்தான்.


'இளையவன் இறக்க மூத்தவனாகிய நான் உயிரோடு இருக்கின்றேனே'   என்று  இரக்கம் தோன்றுமாறு சம்பாதி

சடாயுவைக் கொன்றவனை பற்றி வினவினான் .


மாயமான் காரணமாக இராம இலக்குவர் சீதையைப் பிரியுமாறு செய்ததும் , சீதையைக் கவர்ந்து செல்லும் வழியில் ஜடாயு அதை கண்டதும் , நீதி தவறாத ஜடாயு மைதிலியை காப்பாற்ற இராவணனைத் தன் மூக்கினாலும் நகங்களாலும் சிறகுகளாலும் பலவாறு துன்புறுத்தி, இறுதியில் அந்தக் கொடியவனது தெய்வ வாளால் உயிர் மாய்ந்தான் என்றான் அனுமன்


சீதையை மீட்பதற்குத் தன்னுயிரைக் கொடுத்தவனாதலால் அவனது புகழ் பாரெல்லாம் நிலையாய் இருக்கும் என்றும் சம்பாதியை தேற்றினான் அனுமன் .


ஜடாயுவின் கிரியைகளை செய்ய முடியாமல் போனாலும் சமுத்திரத்தின் அருகினில் அவனுக்காய் ஜலதர்ப்பணம் செய்து பின்னர் ராம நாமம் ஜப்பிக்க , தன் சிறகுகளை மீண்டும் பெற்றார் சம்பாதி.


தன் சிறகுகள் அழிந்ததும் , இன்று இங்கு வானர சேனையைக் கண்டதும், தான் அன்று ஜடாயுவுக்கு கூறிய  அந்த ஒற்றை கர்மத்திர்க்கும் ஒரு தொடர்பு இருப்பாதை உணர்ந்தார் சம்பாதி


இராவணன், சீதையினோடு  இலங்கையிற் போய்ச் சேர்ந்தான் என்றும் , கொடிய சிறைக் காவலில்
வைத்துவிட்டான் , அங்கே சென்று காணுங்கள் என்றும் தென்திசை நோக்கி வழிகாட்டினார் சம்பாதி.


இலங்கைக்குள் புகுவது யமனுக்குக் கூட முடியாது, ஆகவே, இது பற்றி ஆராய்ந்து முடிவெடுத்துத் தக்கவாறு
செய்யுங்கள் என்றார் .


சடாயுவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கழுகுகளை  பாதுகாக்கும் பொருட்டு நான் விரைந்து செல்ல வேண்டியுள்ளது.  நீங்கள் நான் சொல்லியவற்றுள் ஏற்றதைச் செய்யுங்கள்' என்று கூறிச் சம்பாதி வான்வழியாகப் பறந்து சென்றான்.


நிலையான குன்றும்,  நீலக்கடலும் திசை தெரிந்த பின்னர் , திசைக்கருவியான சம்பாதியை  அமைதியாய் மறந்திருந்தது .

Sunday, November 1, 2015

அமைதியான பக்கங்கள்1 - ஊர்மிளை

அழகிய சோலைகள் சூழ்ந்த அந்த மாளிகையின் மேல் அறையிலே நான்கு பெண்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டிருந்தனர் . சிலபுறாக்கள் சட சட வென நந்தவனத்தில் துள்ளி பறக்க எத்தனித்தன . இதைக் கேட்ட அம்மங்கையர் யாரோ வருவதை அறிந்து , அத்திசை நோக்கி பார்த்தனர் . சந்திர சூர்யர்களுக்கு ஒப்பனா பிரகாசத்துடன் ஆஜானுபாஹுவான இரு இளைஞர்கள் நந்தவனம் கடந்து சென்றுகொண்டிருந்தனர் . ஒருவனை கண்டால் கருணையின் வடிவமாயும் , மற்றொருவன் அழகிய கோபக்காரனாகவும் இருந்தனர் .

அதே நாள் மாலைவேளையில் நடந்த ஸ்வயம்வரத்தில் நான்கு மங்கையருள், மிதிலையின் ராஜகுமாரி கௌசல்யை மைந்தனை மணமுடிக்க மாலையிட்டாள் . அயோத்தி முதல் மிதிலை வரை சாலைகள் எங்கும் அலங்கரிக்கபட்டிருந்தன . வனங்களும் கூட இந்த திருமனவிழாவினை கொண்டாட பூத்துக்குலுங்கின . இல்லங்கள் தோறும் தோரணம் கட்டப்பட்டன , மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தன்கள் வீட்டு விழாவினை போன்று கொண்டாடிக்கொண்டிருந்தனர் .

நாட்கள் கடந்து சென்றன தசரத மைந்தர்கள் நால்வரும் மிதிலை ராஜகுமாரிகளை மணந்து , இல்லறம் தொடங்கி சில நாட்கள் ஆயிற்று .  வருணனுக்கு முன்னரே தெரிந்தது போலும் இவளின் எதிர்காலம் , ஓ வென அழுது கொண்டிருந்தான் . இலக்குவன்  கேட்கிறான் ,' உன்னுடைய அக்காவுக்கோ ஸ்வயம்வரம் நடத்தி தன் மணாளனை தேர்வு செய்ய வைத்தார்கள் , உனக்கு என் அப்படி ஒரு வாய்ப்பு தரவில்லை . உன் தந்தையின் மீது உனக்கு கோவமில்லையா ?

அவள் மிகவும் கனிவாக பதில் கூறுகிறாள் ,' நாதா . இந்த பேதைப் பெண் நீங்கள் மிதிலை வந்தவுடன் தங்களிடம் மனதை ஒப்படைத்துவிட்டேன் . அன்று நீங்கள் இருவரும் சூர்ய சந்திரர்களை போல் நந்தவனதினுள் வந்த போது , நான் வளர்த்த புறாக்கள் தூது வந்தன எனக்காய் . சூரியனான தங்கள் அண்ணனிடம் ஒளியினை பெற்று சந்திரனை போன்று நீங்கள் பிரகாசித்தீர்கள் . அந்த நாளே என்னை உங்களுக்கு அர்ப்பனித்துவிட்டேன்  '

'தேவி , உன்னுடைய நயமான பேச்சும் , என் அண்ணனுடன் உன் ஒப்பீடும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது . நானோ உன்னிடம் என்னை பற்றியோ என் அண்ணனை பற்றியோ கூறவில்லை . பின்னர் எப்படி சரியாக என் மனதை புரிந்தார் போல் பேசுகிறாய் ' என்றான் 

'சுமித்திரை மைந்தரே , நானும் சீதாதேவியும் இன்று வரை நிஜமும் நிழலுமாய் இருக்கிறோம் . நாங்கள் இருவரும் எப்படியோ நீங்களும் அப்படித்தான் என என்னால் உணர சில நொடிகள் போதுமாய் இருந்தன . 

நான் கண்டிப்பாக உன்னை போன்ற மனைவியை பெற மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி அவளின் கைகளை மெதுவாக பற்றினான் .

இப்படி ஓர் அழகிய காதல் தொடங்கிய நேரத்தில், அரண்மனையின் 
மற்றொரு இடத்தில் மாபெரும் பிரளயம் ஒன்று கிளம்பி தசரத சக்கரவர்த்தியை நொடித்திருந்தது .
'பரதன் இந்த பெருங்கடலால் சூழப்பட்ட நிலப்பகுதியை முழுமையாக ஆளவேண்டும் என்றும், ராமன்  மறவுரி தரித்து காடு, மலை மற்றும் புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று ஈரேழாண்டு அதாவது பதினான்கு ஆண்டுகள் கழித்து நாடு திரும்ப வேண்டும்' என்பதற்கு ஏற்ப ராமன் கானகம் புறப்பட தயாரானான் .


இதை அறிந்த இலக்குவன் கண்களில் கோவம் கொப்பளிக்க தன் அந்தப்புரத்தில் இருந்து கிளம்புகிறான் . 
ஊர்மிளை அவனை தடுக்கிறாள்,' நாதா இது கோவப்படும் தருணமில்லை . பகலவனின் ஒளியை மறைக்க ஏற்படும் க்ரஹனம் தானிது . இது விலகிச் செல்கையில் அதன் பிரகாசம் பன்மடங்காகும் . உங்கள் மனதினுள் இருக்கும் கோபக்கணைகளை ஒன்றாக திரட்டி அதன் வலிமையை தங்கள் அண்ணனுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக்குங்கள். நீங்கள் உடன் செல்லாவிட்டால், நல்நேரங்களில் உடன் இருந்த இலக்குவனும் ஸ்ரீராமரின் துன்பகாலத்தினில் பிரிந்தான் என மக்கள் கூற நேரலாம். என்  மணாளனை அப்படி யாரும் கூற என் மனம் ஒவ்வாது .  ஒரு மகனாக நீங்கள் சுமித்த்ராதேவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் நான் பார்த்து கொள்கிறேன் . 

கண்களில் நீர் ததும்ப இலக்குவன் அவன் கைகளை பற்றி பேச்சில்லாமல் நிற்கிறான் .

தன் கணவர் அப்படி இருத்தல் , அவளை உசத்திக் காட்டுவதை உணர்ந்த ஊர்மிளை ,' நாதா இது என் சுயநலத்திற்காக தான் நான் கூறினேன் . நானும் உடன் வந்தால் , தங்களால்  ராமரையும் சீதையையும் விழிமூடாமல் கவனித்துக்கொள்ள முடியாது . நீங்கள் தங்கள் அண்ணனை பார்த்துக்கொண்டால் , என்னுடைய சகோதரியும் அங்கு பத்திரமாக இருக்கமுடியும் என்ற சுயநலத்தினால் தான் இதனை கூறுகிறேன்'.

ஒரு நல் பதியாய் தன்  மனைவியின் மெய்மனதறிந்த இலக்குவன் அவளை பார்த்து புன்னகைத்து அவளிடம் கைகூப்பி விடைபெறுகிறான் .

அயோத்தி நகரம் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. 
செய்தியறிந்த பரதன் கேகய நாட்டிலிருந்து விரைந்தோடி வருகிறான். தன் தாயின் ஆசையினை எதிர்த்து ராமனை மீண்டும் அழைத்து வர புறப்படத் தயாராகிறான். 

அப்போது சுமித்திரைக்கு உணவளித்துக் கொண்டிருகிறாள் ஊர்மிளை.  'குழந்தாய் , இலக்குவன் சென்று நாட்கள் ஓடிவிட்டன . உன்னை தனியாளக்கிய பாவம் என்னைத் தான் சூழும் . ஒரு தாயாக நான் ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். இன்று பரதன் ராமனை பார்த்து அழைத்து வரப் போகிறான். நீயும் உடன் சென்று வருகிறாயா' என்றாள் சுமித்ரை .

அன்னையே , 'தந்தை வாக்கை காப்பாற்ற கானகம் சென்றுள்ளார் ராமர் . அண்ணனை நிழலாக தொடர்ந்து தங்கள் மகன் சகோதரத்துவத்தை காக்கச் சென்றுள்ளார் . பரதரோ நீதி தவறாமைக்கை அண்ணனை அழைக்க செல்கிறார் . இதனிடையில் நானும் பரதரோடு அவர்களை நாடு திரும்ப அழைக்க  சென்றால் ஏதும் தவறு நடக்கலாம் . என் துன்பத்தை பார்த்து என் நாதன் திரும்ப வர நினைத்து என்னுடன் வந்து , ராமர் கானகத்தை  தொடர்ந்தால் அது ஒருவித இழுக்காகி விடும் .  என்னை பார்த்தும் மனம் மாறாமல் இருந்து , அவர் அண்ணனுடன் சென்றால் அது தாம்பத்யத்தை மதிக்கதை கறையை என் கணவரின் மீது சுமற்றிவிடும். இது இதில் எது நடந்தாலும் அயோத்தி மக்கள் , சுமித்திரை மகன் தவறிழைத்தான் என்றே கூறுவர். அவர்களில் பலபேருக்கு இந்த ஊர்மிளையை யாரென்றே தெரியாது . ஆகையால் உங்களுக்கு நான் அவப்பெயர் கொண்டுவந்ததாகி விடும் .ஆகையால் நான் வரவில்லை அம்மா ' என்றாள் ஊர்மிளா .

அவள் பேச்சின் நிதானத்தையும் சிந்தனையும் கண்டு வியந்த சுமித்திரை ஊர்மிளையை கட்டித்தழுவினாள்.

பதிவ்ரதை பதினான்கு ஆண்டுகள் தனிமை சிறைவாசத்தை  அனுபவித்து, பின்னர் இலக்குவனுடன்  இஷ்வாகு குலவாரிசுகளை பெற்றெடுத்தாள் . இவள் வாழ்ந்த பக்கங்களை மட்டும் அயோத்தி அமைதியாய் மறந்திருந்தது .