Monday, November 14, 2016

நவம்பர் 9

நவம்பர் 9,2015 , காலை 6மணி . கொட்டும் மழை , இடி முழக்கம் காதுகளில்  எதிரொலிக்கின்றன , பளிச்சுடும் மின்னல் வெளி வர துடிக்கும் கதிரவனின் கூச்சத்தை போக்கி வானை கிழிக்கிறது . ஐந்து நாள் விடுப்பில் வந்து எனக்கு , நான்காம் நாள் காலை அது . சுமார் ஐந்தரை மணி அளவில் பெண் வீட்டார் எப்படியோ மழையில் நனைந்து எங்கள் வீடு வந்து சேர்ந்துவிட்டனர் . பெண் இன்னும் பெங்களூரிலிருந்து வரவில்லை .  பெருங்களத்தூர் அருகாமையில் வந்தவுடன் தொலைபேசியில்  அழைக்க, உடனே நானும் அரை ட்ராயர் போட்டுக்கொண்டு   , பாக்கெட்டில் மணிபர்ஸை திணித்துக்கொண்டு இருக்கும் ஒற்றை குடையை எடுத்துக்கொண்டு  பேருந்து நிலையம் நோக்கி விரைந்தேன் .  எதிரே வருவதை கூட பார்க்கமுடியாது அளவு வெளுத்துவாங்கும் மழை . எதிர்காலத்துணைவியை காண ஓடிக்கொண்டிருந்த நான் . தண்டவாளம் கடந்து ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு அது தாம்பரம் மேம்பாலம் வரை சென்று சுற்றி வரவும் , அவள் பேருந்தில் இருந்து இறங்கி நிற்கவும் சரியாக இருந்தது . ஓடும் ஆட்டோவினை மெல்ல உருட்டச்சொல்லி அவள் நிற்கும் திசை பார்த்து தலை நீட்டித்  தேடினேன் . பெங்களூரு குளிருக்காக போட்ட ஸ்வெட்டர் மழையை சுமந்துகொண்டிருக்க , கையில் கட்டைப்பையையும் முதுகில் ஏதோ பெருநிறுவனத்தில் கொடுத்த இலவச கணிணிப்பையுடன் அவள் நிற்க , கைகாட்டி ஆட்டோவினுள் இழுத்து அருகில் அமரவைத்தேன் . புதிய விடியல் ஆரம்பமானது . காலம்காலமாக பெண் வீட்டில் சென்று பார்க்கும் வழக்கம் இங்கு நடக்கவில்லை,மாறாக எங்கள் வீட்டில் பெண் வந்து பார்த்த மாறுபட்ட ஏற்பாடு .  சாயம் பூசிய முகத்திரையை பார்க்க வேண்டிய ஏமாற்றம் எனக்கில்லை , இயற்கை அன்னையின் தயவில் செயற்கைகளில்லா அகஅழகை காண நேர்ந்தது . பெண்ணை பாடச்சொல்ல வில்லை, சமையல் பற்றியே பேச்சே துளியும் இல்லை. பார்க்க , பேச , பழக , உணர சிலநொடிகள் போதுமானதாக இருந்தது . எடுத்துக்கொள்ள நான் இருக்க , தன்னை கொடுக்க அவள் இருக்க இருமணங்கள் திருமண நாள் குறிக்க ஒப்புதலானது . 
கொட்டும் மழை , இடி முழக்கம் காதுகளில்  எதிரொலிக்கின்றன , பளிச்சுடும் மின்னல் ஓடிப்போகவிருக்கும் கதிரவனின் கோழைத்தனத்தை வெளிச்சத்தில் காட்டுகிறது . அன்றை போன்ற அதே நிகழ்வுகள் . மீண்டும் மழையில் ஓடிக்கொண்டிருக்கிறேன் அவளை அழைத்துவர. இம்முறை கடல்கடந்து.  இன்று நவம்பர் 9, 2016.
காதல் , நிச்சயம் , திருமணம் கடந்து மீண்டும் அதே நாள் இருவரையும் இணைக்கிறது .!

அன்பு விஜய் டிவிக்கு

அன்பு விஜய் டிவிக்கு ,

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகளை அளிக்கும் விஜய் டிவி ரசிகனாக இதை பகிர்கிறேன். இன்றளவில் தமிழ் சேனல்களில் நல்ல ஜனரஞ்சகமாகவும் , சமுதாயம் நலன் சார்ந்தும் , திறன் வளர்க்கும், பொழுபோக்குக்கெனவும் பிரிவு வாரியாக நல்ல நிகழ்ச்சிகளை அளித்து வருகிறீர்கள். விஜய் தொலைக்காட்சி , ஸ்டார் விஜய் ஆக மாறி சுமார் பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தனி ஆளாக ஆதிக்கம் செலுத்திய சன் குழுமத்திடம் இருந்து பெருவாரியான ரசிகர்களை நீங்கள் இழுத்திருக்கிறீர்கள். தொலைக்காட்சி ரசிர்களுக்கு அன்றே, முதன் முதலில் தமிழில் ஹாலிவுட் டப்பிங் படங்கள் காட்டினீர்கள் . உங்களை போல பின்தொடர்ந்த ஜெயா , ராஜ் ஏன் சன் டிவி கூட அன்று அதில் உங்களை முந்த  முடியவில்லை. ஸ்டார் கைப்பற்றிய பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிகர  லாபம்  அடைந்தீர்கள் இன்று கண்டிப்பாக நீங்கள் தான் முன்னிலையில் இருக்க வேண்டும். 

என் சிறுவயதில் அறுபது ருபாய் கேபிளுக்கு கட்டி போர்ட்டபிள் டிவியில் வரும் பன்னிரண்டு சேனல்களில் திருகித்திருகி ட்யூன் செய்து விஜய் டிவியில்  மாயா மச்சிந்த்ரா , ஜீ பூம் பா,  விஜய் லட்சாதிபதி , ஜென்மம் எக்ஸ்  நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்திருக்கிறேன். கனா காணும் காலங்கள் தொடரின் ஒவ்வொரு எபிசோடும் மனப்பாடமாக வைத்திருந்த என் பள்ளித் தோழிகளை எனக்கு தெரியும் . 

ஒவ்வொரு வாரமும் லொள்ளு சபா யாரை கிண்டல் செய்வார்கள் எப்படி செய்வார்கள் என்ன யோசித்து மண்டை குழம்பியிருக்கிறோம், காதலிக்க நேரமில்லை தொடரை அந்தத் தொடக்கப் பாடலுக்காகவே பார்த்திருக்கிறோம். பாடத்தெரிந்த இளைஞர்களை ஊக்குவித்து சூப்பர் சிங்கர் மூலமாக மாபெரும் மேடையேற்றிய பெருமை உங்களையே சேரும் . கலக்க போவது யாரு என பல சிரிப்பு மன்னர்களை தமிழர்களுக்கு அடையாளம் காட்டியது நீங்கள் தான். 

கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், 7C  என தமிழ் தொடர்கள் தொடாத ஒரு கல்விக்கூடம் சார்ந்த கதை எடுத்தீர்கள் , பெருமை . தர்மயுத்தம் என வக்கீல் சார்ந்த தொடர் எடுத்தீர்கள் , புதுமை. கணவன் மனைவியின் அழகான உறவை சரவணன் மீனாட்சியை காட்டி மக்களை கவர்ந்தீர்கள். ஒரு வார்த்தை ஒரு லட்சம் மூலம் பள்ளிக்குழந்தைகளையும் , ஆசிரியர்களையும் உங்கள் பக்கம் இழுத்துவிட்டீர்கள் .  

லொட லொட பேச்சில் எங்களை டி.டி  உடன் அருமையான காபி அருந்த வைத்தீர்கள். நீயா நானா பற்றி கூறாவிட்டால் நான் தங்கள் தொலைக்காட்சியின் ரசிகனே அல்ல. மிகச்சிறந்த  ஒரு சமுதாய பார்வை கொண்ட நிகழ்ச்சியான இதையும்  மேடையேற்றியுள்ளீர்கள். வருடா வருடம் விஜய் விருதுகள் உலக அளவில் எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது .

இன்றளவும் இன்னபிற சேனல்களை பார்க்கும் போது பல மடங்கு தரமான நிகழ்களான கனெக்ஷன், ஜோடி , அது இது எது , சமையல் சமையல் , நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்விக்கின்றன. 

பின்னர் ஏன் இந்த விபரீத முயற்சி ? 
ஆம் வரும் திங்கள் கிழமை முதல் நீங்களும் சராசரி சேனலாக மாறிவிடப் போகிறீர்கள் என்ற வருத்தம் எனக்கு. எதற்காக இந்த டப்பிங் சீரியல்கள் ?  ஏற்கனவே என் கணவன் என் தோழன் , சீதையின் ராமன் , என் அன்பு தங்கைக்கு என மூன்று டப்பிங் சீரியல்கள் ஓளிபரப்பாகின்றன. 
போதாக்குறைக்கு பிற சேனல் போல் நீங்களும் சனிக்கிழமையும் சீரியல் போட ஆரம்பித்தாயிற்று.  இப்போது மதியம் 2 மணிமுதல் இரவு 9 மணி வரையில் மீண்டும் தொடர்ந்து அலுக்கப்போகும் தொடர்கள் தேவையா ? போதாக்குறைக்கு இன்னும் நான்கு ஆறு டப்பிங் தொடர்களான மகாதேவ் , மங்கையின் சபதம் , அம்மா , என்னுடைய தோட்டத்தில் , என்றும் என்னுடன் , கிரண் மாலா என அடுக்கிக் கொண்டே செல்கிறீர்கள் .

நாங்கள் பார்த்து வளர்ந்து இன்று மாபெரும் தமிழ் தொலைக்காட்சி சாம்ராஜ்யமாய் இருக்கும் விஜய்  தொலைக்காட்சியின் சிறப்பே புதுமையும் எதார்த்தமும் தான் . டப்பிங் சீரியலில்   வருவது போல் இங்கு அலங்கரித்து நிற்கும் மருமகள்கள் இல்லை , ஆனால் மீனாட்சியை போன்ற யதார்த்தமான பெண்கள் உண்டு.  பதினைந்து பேர் எப்போதும் முழு அலங்காரத்துடன் விசாலமான அறைகளில் மொக்கையான டப்பிங் வசனங்கள் பேசுவதில்லை , ஆனால்  கூட்டமாக இருக்கும் குழந்தைகளுக்கு நல்லது சொல்லு ஸ்டாலின் போன்ற ஆசிரியர்கள் உண்டு.

பெங்காலி , ஹிந்தி சீரியல்கள் நன்றாக இருக்கலாம் , ஸ்டார் குழுமம் அதன் உரிமைகளை வைத்திருக்கலாம் , அப்படியானால் நாங்கள் பார்த்து பழகிய , தெரிந்த நம் ஊர் கலைஞர்களை வைத்து , அந்த கதைகளை ரீமேக் செய்யலாம் . அதுவும் உங்களுக்கு புதிதல்ல , இன்று ப்ரைம் டைம் ஷோவாக இருக்கும் கல்யாணம் முதல் காதல் வரை ஹிந்தி சீரியலின் ரீமேக் தான் .

உங்களிடம் இருந்து தரமான நிகழ்ச்சிகளையே பார்த்து விட்டு , இன்று இப்படி பல டப்பிங் தொடர்களை பார்க்க மனம் கஷ்டமாக இருக்கிறது . கனா காணும் காலங்களும் , காதலிக்க நேரமில்லை தொடர்களும் நீங்கள் மாரு ஒளிபரப்பு செய்தால் கூட கண்டிப்பாக பல ரசிகர்கள் உங்களுடன் இருப்பார்கள் .


நன்றி,
விஜய் டிவி ரசிகன்  

கோடை

ஆழ்குழாய்கிணற்றின் உப்பு நீர் மொட்டைமாடி ஏறி 
வெதுவெதுப்பாய் குளியலறை குழாயில் ஒழுகுகையில் ,
வாசலில் அடிபம்ப்பில்  வந்த கார்பொரேஷன் நல்ல நீரால் நிரப்பப்பட்ட 
அலுமினிய வாளியில் இவர்களின் முதல் சந்திப்பு .
இருவரும் நீர்ச்சாதி  ஆயினும் வெவ்வேறு உட்பிரிவுகள் .
சிறுநொடிக்காதலை குலைக்க மானுடன் வருகை .
ஒன்றரக்  கலந்த இவர்கள் ஆறாம் அறிவின் அழுக்கை சுமக்கும் அவலம் ,
மணமணக்கும் செயற்கையான இயற்கை  நுரைகளில் மூச்சுத்திணறி 
சாக்கடைகளில் கலந்து முடிகிறது இவர்களின் காதல்.
இல்லை இதோடு முடியவில்லை , 
அண்ணன் ஆதித்தன் அணைப்பில் வெதுவெதுப்பை வளர்ந்த 
தங்கையின் நினைவாக மனிதர்களை பழிவாங்குகிறான் 
பிசுபிசுப்பான வியர்வையாய் .! 

#கோடை #குளியல் 

Friday, September 23, 2016

சைத்தான்

சமீப காலமாக கற்பனைத்திறனும் கலைத்திறனும் திரையுலகில் இருப்போருக்கு குறைவாக இருப்பதாலோ , எங்கிருந்து எதைத் திருடுவது என்று அறியாமல் சகட்டு மேனிக்கு காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மறந்து போய் தன்னுடைய பழைய பாட்டின் தாளத்தையே போடுகிறார். மறந்ததே போயும் ஆங்கில , ஜப்பானிய படங்களை தமிழில் எடுத்துவிடுகின்றனர் பாவம் .
சரி, விஷயத்துக்கு வருவோம், இரண்டுநாட்கள் முன்னர் வெளிவந்த விஜய் அன்டனியின் சைத்தான் திரைப்பட ட்ரைலர் வந்தது . அதை பற்றி இப்போது வாட்ஸாப்பில் ஒரு குறும்செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அந்த ட்ரைலரின் பின்னணி இசை தைத்திரீய உபநிஷத் ஒலிக்கும் மெட்டில் அமைக்கப்பட்டுள்ளது . போதாக்குறைக்கு என்ன வார்த்தை போடவேண்டும் என தெரியாமல் சைத்தானே என விஷ்ணுவுக்கு பின்னர் அவர் சொருகியிருக்கிறார். இதனால் பரம்பொருளை ஷைத்தானோடு ஒப்பிட்டு மத நம்பிக்கையை கிண்டல் செய்வதாக அந்த பதிவு கூறுகிறது.
கண்டிப்பாக காக்கும் கடவுளையும் , அழிக்கும் சைத்தானையும் ஒன்றாய் கூறுவது தவறு . இதில் இந்து மத நம்பிக்கையாளர்கள் மனம் புண்படலாம் . ஆனால் , இதெல்லாம் உண்மையாகவே நம்மில் பலருக்கு தெரியாது. யாரோ உண்மையாகவே மனம்புண்பட்ட ஒருவர் புலம்பியதை , நாமும் எல்லோருடனும் பகிர்கிறோம் . இவர் காப்பியடிக்காத இசையே இல்லை . கேட்டுவிட்டு அமைதியாக , ஒரு சராசரி தமிழன் எல்லாப் பிரச்சனைகளிலும் என்ன செய்வானோ அதைப் போல் விலகிச் சென்றுவிடலாம் அல்லது சட்டப்பூர்வமாக இதனை எதிர்கொள்ளலாம் .
திரையுலகம் நம் மதங்களை(இந்து , இஸ்லாம் , கிறித்துவம்) தன் இஷ்டம்போல் தொடர்ந்து சித்தரித்து வருகின்றது. இது போல ஒவ்வொரு படங்களிலும் தன் இஷ்டப்படி செய்கிறது. பிரபல இந்தி நாயகன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நாயகியை முன்னூறு படிகளுக்கு தூக்கிச்செல்லவேண்டும் என்று கூறி, தூக்கியும் செல்வார். இல்லாத கற்பனை வழக்கம் நம் சமயத்தை அசிங்கப் படுத்தவில்லையா ? மலை உச்சியில் கிராபிக்ஸில் பெருமாளையும், சந்நிதிக்கு எதிரே மயிலையும் , பட்டை போட்ட குருக்களையும் கட்டியிருப்பார்கள் . இதெல்லாம் உச்ச கட்ட அபத்தம். படம் முழுக்க பெண் வீட்டார் தமிழர் என்பதால் ஆழ்வார்களும் , நாயன்மார்களும் , அண்ணாவும் பெரியாரும் காப்பாற்றிய தமிழை இஷ்டத்துக்கு கொச்சைப் படுத்தியிருப்பார்கள். வலிக்கவில்லையா ?
இப்பாடலில் மனது வருந்தியவர்கள் ஏன் சிலவருடங்கள் முன் மதம் மாறிய யுவன் சங்கர் ராஜாவின் பாடலை பற்றி வருந்தவில்லை ? " கோவிந்தா கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா பாடலை, தன வசதிக்காக ஓ ஈசா , என் ஈசா என்று மாற்றிக்கொண்டாரே ? ஒருவேளை ஓர் மதத்துக்குள் கடவுள்களை மாற்றியதால் மறந்தோமா ? அதற்கு பின்னர் வரும் ஆங்கில வரிகள் ஆபாசம் இருக்குமே ? அது .
தசாவதாரம் படத்தில் அழகியசிங்கர் தெரியுமா எனக் கேட்கும் காட்சியில் பகுத்தறிவு நாயகன் கிண்டலாக மடோன்னா வா எனக் கேட்பார். கவர்ச்சி நாயகியும் , பரம ஆச்சார்ய ஸ்ரேஷ்டரையும் ஒப்பிடுவது சரியா ? விஸ்வரூபம் படத்தில் குரானை கூறி தீவிரவாதியை அழிக்கும் கட்சிக்கு எவ்வளவு பெரிய சர்ச்சை நடந்தது ? இதுபோல் இந்து வழக்கங்கள் கிண்டல் செய்யப்பட்டால் கண்டிப்பாக நடக்காது .
ஜனநாயக நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செய்யப்படும் எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்ளப் படமாட்டாது என்பது நிதர்சன உண்மை. சாதிகளுக்கு அப்பாற்பட்டு இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் முன்னாள் முதல்வர் கலைஞரும் கடைசி காலத்தில் ராமாநுச காவியம் படைத்ததை யாரும் மறுக்க இயலாது . சமயங்களை கிண்டல் செய்து பிழைக்கும் ஒரு சாரார் இருந்துகொன்டே தான் இருப்பர். இது போன்ற கேலியும், கிண்டலும், சுரண்டலும் மதங்களை , அதன் மடங்களை வலுப்பெறச்செய்கிறது , அதற்கும் மேல் ஒருதலைமுறை ஆதரவாளர்களை கடந்து அடுத்த தலைமுறை வெறியர்களை தூண்டுகிறது.
மனம் வருந்துவோரை நினைக்கையில், ஒரு உபன்யாசத்தில் கேட்ட கதை நினைவுக்கு வருகிறது. தன் வாழ்நாளில் எந்த ஒரு நல்லகாரியமும் செய்யாமல் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு தந்தை கூறிய கடைசி வார்த்தை தன் மகனின் பெயர் "நாராயணா". இதனால் பரமாத்மா கிருஷ்ணர் யமதூதர்களை விளக்கி அவனை விஷ்ணுலோகம் அழைத்துச் சென்றாராம்.
எத்தனையோ தடைகளை தாண்டி சனாதன தர்மம் தழைத்தோங்குகிறது. இதுவும் கடந்து செல்லும். இந்த சைத்தானை நாம் மறப்போம் , கடவுள் மன்னிப்பார்

Tuesday, September 20, 2016

மலேசியா -2

நீங்க தண்ணி வாங்கினீங்களா , எவ்ளோ காசு ? என கேட்ட ஓட்டுனரிடம்  ஒரு பாட்டில் 2 ரிங்க்ட் என்றோம் . நான் பெட்ரோல் வாங்கினேன் ஒரு லிட்டர் ஒண்ணே முக்கால் வெள்ளி(1.75). இது தான் இந்த ஊரின் சிறப்பு .கையில காசே இல்ல , அஞ்சு வருஷ தவணைல  ஒரு காடி(கார்) வாங்கி இப்போ உபேர்ல ஓட்டுறோம்.   காசு கொஞ்சம் நல்ல வருது. என்ன சிலசமயம் சவாரியா இருக்கும் , இல்லாட்டி ஏதும் கிடையாது , பெருசா வேற வேல ஏதும் இல்ல என்றும் கூறினார்.  உங்கள மாதிரி தான், காலைல நம்ம ஊர்க்காரர் டேக்சில தான்  ஏறினோம். நீங்க சொல்லுங்க ஒன்றரை கிலோமீட்டர் நீங்க எவ்ளோ கேப்பீங்க னு கேட்டோம். ஆறுபேறு வண்டினா ஒரு ஏழு வெள்ளி ஆகும் என்றார் . அப்போ நாங்க கண்டிப்பா ஏமாந்தோம் என்று கூறினோம் .  காலையில் நாங்கள் சென்ற வண்டிக்காரர் எங்களிடம் 25ரிங்கிட் வாங்கினார், வாங்கினால் பரவாயில்லை நம்ம பசங்க உங்கள்ட கூட ரூபா கேட்பேனா என்றார். வண்டியோட்டும் போது தன் நண்பரிடம் அவர் கூறியது எங்கள் அனைவருக்கும் மணி அடித்தார் போல் நினைவுக்கு வந்தது, அவரின் வார்த்தைகள் ' காலைலேந்து ஒட்டவே இல்ல பா , இப்போ தான் ஆள் கெடச்சிருக்காங்க'. நம்மவர்கள் நம்மவர்கள் தான். இந்த மகேந்திரனுக்கு இருந்த நல்ல மனது அவருக்கு இல்லை என்பதை உணர்ந்தோம்.

சமீபத்திய சினிமாவில் பார்த்தது போன்ற கைதுகளும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஞாயிறு காலை, முதல் வேலை அருகில் இருக்கும் சிகை அலங்காரக்கடைக்கு செல்வது என வைத்திருந்தேன். அதே நினைப்பை ஐவரும் வைத்திருந்தனர் போலும், வரிசை கட்டி    
உடன் கிளம்பிவிட்டனர் . ஐநூறு அடி தூரத்திலேயே கடையை முந்தின இரவே குறித்துவைத்ததால் எட்டுமணிக்கே வரிசையாக ஐந்து வாடிக்கையாளர்களை பார்த்து குதூகளித்தார் குமரன். இவரும் புதுக்கோட்டையை சேர்ந்தவர் தான். மலேசியாவில் மொத்தம் பதிமூன்று ஆண்டுகளாக இருக்கிறார். நான்காண்டு முன்னர் அவருடைய தந்தை இறந்தபோது ஒரு முறை ஊருக்கு சென்று வந்தாராம். இல்லறத்தை பற்றி வினவிய போது , சவரக்காரனுக்கு எவன் தருவான் என்ற கவலையை உதிர்த்த தருணமும் , வானொலிப்பெட்டியில் "வா வா நீ வா தோழா , உலகம் ஒருவனுக்காக " என கபாலியின் முழக்கம் வந்தது. நடுவில் அடர்த்தியாகவும் சுற்றி கட்டையாகவும் மயிரை வெட்டிவிட்டு , அடுத்த சுருட்ட மண்டையனை அமரவைத்து தமிழ்நேசன் பத்திரிகையில் ராசிபலன் படித்து வரிக்கு வரி ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டிரும்தோம். சூடாக அவர் கடுங்காப்பி குடித்ததை பார்த்து கடை கேட்டதற்கு, அவர் கடலுக்கப்பாலும் சாயா ஆத்திக்கொண்டிருந்த  மலையாளத்தான் கடையை  காட்ட  நாங்களும் 5 தேஹ்தரீக் வாங்கிவந்து  அரட்டை தொடர்ந்தோம் , இன்னும் இரண்டு மண்டைகள் சரைக்கவேண்டியிருந்தது.

மூன்றாவது ஆளின் கிருதாவை செதுக்கிக்கொண்டிருக்கையில் ஒரு அலைபேசி அண்ணனுக்கு வந்தது. அண்ணனின் உரையாடல் இதோ ," ஆமாம்னே, மூணு நாளா  காபந்து போலீஸ் நோட்டம் விட்ருக்காங்க . இந்தப்பய சும்மா இல்லாம கடைல இருக்கிற வேலையெல்லாம் செய்றத படம் பிடிச்சருக்காங்க. நேத்து மதியம் மூணு மணி வாக்குல, உள்ள வரவும் அவனுக்கு என்ன செய்ய னு தெரில . சும்மா தான் இருக்கேன்னு சொல்லிருக்கான் , ஆனா படத்தக்காட்டி  கையில  விலங்கு போட்டாக என்றார் . ஆமாம், எனக்கு தெரியாது , இந்த மயிரு மெஷின நோண்டிட்டு இருந்தேன். ஜோஹார்லெந்து கடைக்கு சொந்தக்காரர் என் நம்பர்க்கு அடிச்சாரு , அப்பறம் போய் பார்த்தேன், வண்டி வெளிய இருக்கு ஆனா ஆள தூக்கிட்டாங்க", அழைப்பு துண்டிக்கப்பட்டது . அண்ணன், தூக்கிட்டாங்கணா ? சுட்டுருவாங்களா  ? என்றதற்கு இல்லை , அனுமதியில்லாமல் வேலை செய்ததால் கைது செய்யப்பட்டார் என விளக்கினார். தலைக்கு பத்து வெள்ளி வீதம் ஐம்பது கொடுத்துவிட்டு, வெந்நீர்  குளியல் போட கிளம்பிவிட்டோம்.

#மலேசியா #காடி #சலூன் #வெள்ளி

மலேசியா -1

"என்னப்பா ஊர்காரங்களா" என கையில் தடியை பிடித்துக் கொண்டு எங்களை பார்த்து ஒரு வயதான பாட்டி கேட்டவுடன் , 'ஆமாம் பாட்டி ' என்று பதிலளித்தோம் . மலேசியா பத்துமலை முருகன் கோவில் அருகில் இருந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை ஆதலால் கூட்டமாக இருந்தது. எந்த ஊருப்பா நீங்கல்லாம் என்றதற்கு சென்னை, மதுரை , திருச்சி , திருநெல்வேலி , கோவை என வரிசையாக கை காட்டிக் கூறினேன் . 'ஏன்பா, எல்லா பெரிய ஊரையும் சொல்லி என்ன கிண்டல் பண்ற என்றார். அய்யயோ அப்டியெல்லம் இல்ல பாட்டி  உண்மைலே அதான் என்றேன் . ஓ ! சரிப்பா . நாங்களும் ஊரு பக்கம்  தான் வந்து ரொம்பகாலம் ஆச்சு . இங்க இப்டி உங்கள மாதிரி ஊர்காரங்களா பாக்கும் நானே போய் பேசிருவேன் என்று சொல்லிக்கொன்டே அன்னதான வரிசையில் அமர்ந்தார். ஏதோ மலேசியா தமிழர்களுடன் பேசுகையில் மனதிற்கு மிகவும் இதமாக இருப்பதை நாங்கள் அனைவருமே உணர்ந்தோம். முருகனை ஒரு முறை கைக்கூப்பி பலமுறை செல்பேசியில் க்ளிக்கியும் எதிரே உள்ள உணவகத்தில் ஏகபோகமாக ஒருவண்டி சிற்றுண்டி சாப்பிட்டிட்டோம். அங்கு உணவு உண்ணும் ஒவ்வொரு நொடியும் மெய்சிலிர்ப்பு . கபாலி நாயகன் தலைவர் அமர்ந்த நாற்காலியை பத்திரப்படுத்தி காட்சிப்பொருள் போல் வைத்திருந்தனர். தலைவர் பேரை சொல்லி ஆளுக்கு ஒரு செட் பூரி அதிகம் உண்டோம் . வெளியே வந்து,  நல்ல பெரும் சொம்பளவு  இளநீர் நான்கு வெள்ளி தான் என்பதால் அதையும் குடித்தோம் . பேசுகையில் அவர் நான் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சேர்ந்தவர் என அறிந்தேன் . 272 படிகள் ஏறி, இறங்கி  மீண்டும் வந்து உங்களுக்காக வந்து இளநீர் குடிப்பதாகா வாக்களித்து ஏற ஆரம்பித்தோம். அழகான, ஆச்சர்யமான, இயற்கை எழில்  சூழ்ந்த குகைகள் எங்களை சில்லென்ற காற்றோடு வரவேற்றன.  பத்துமலை பற்றி கையடக்கமான புத்தகம் வாங்கி படித்துகொண்டே  கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென சுற்றி வந்து வாக்கை காப்பாற்றிய தமிழனாய் இலுப்பூர் அண்ணன் கடையில்   மேலும் இளநீர் குடித்தோம், உடனே அவர் நண்பர் ராமநாதபுரத்தாரின் பலாச்சுளைகளையும் பையில் போட்டுக்கொண்டு கிளம்பினோம். ஆஹா , புத்தக கடை. சிறுவயதில் அருகில் இருக்கும் நூலகத்தில் வாடகைக்கு பெரும்பாலும் சுஜாதா , ராஜேஷ்குமார் , ரமணிச்சந்திரன் , இந்திரா சௌந்தர்ராஜன் புத்தகங்கள் எளிதாக கிடைக்கும் . அதே வரிசையில் இங்கும் மிக மலிவான விலையில் புத்தகங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. எந்த மேல்சொன்ன எழுத்தாளர்களும் நம்மிடம் கோவப்படக்கூடாது என்பதால் ஒருவருக்கு தலா ஒரு புத்தகம் என வாங்கி ரயில் நோக்கி கிளம்பினேன் . ஏற்கனவே ஜெயமோகனின் விஷ்ணுபுரம் எனும் பெருவெள்ளத்தில் மூழ்கியிருக்கிறேன், இவர்களுக்கு பேசாமல் பேருந்து பயணத்தின் நாற்பது நிமிடம் ஒதுக்கலாம் என மனதுக்குள் முடிவு செய்து ரயிலில் நோக்கி பயணித்தேன் . பல தமிழர்களை சந்திக்க நேர்ந்தது , பேசி பல விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. இனி அடிக்கடி வரவேண்டும் என்பதை மனம் முடிவுசெய்து என்னிடம் அறிவுறுத்தியது.  

-- தொடரும்  

#மலேசியா #தமிழ் # நம்மஊறு #நல்ல சோறு  

-- 
Sowmiyanarayanan

Thursday, August 25, 2016

முதல் மோதல்

முன்னோர் சொல்லின்  மீது இருக்கும் நம்பிக்கை எனக்கின்று பன்மடங்கானது . ஆசை அறுபது நாள் மோகம்முப்பது நாள், மொத்தம் தொண்ணூறு நாள். ஆம் , திருமணமாகி இன்றோடு தொண்ணூறு நாட்கள் ஆகிவிட்டது. வண்ண நாட்காட்டியில் சிவப்பு மை குறிப்புக்கோளால் வட்டம் போட்டுவிட்டேன் . முக்கியமான நாட்கள் இவை , தாம்பத்ய வாழ்க்கையிலே.  ஒரு முகச்சினுங்கல்கள் கூட இல்லாத எங்கள் இருவரிடையே திருஷ்டிப் பூசணியாய்  இன்றைய எங்கள் விவாதம்.  சிறு சண்டைகள் உறவுகளுக்கு நடுவே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கின்றன என்பற்கான சான்று. அலைபேசியில் அவசரமாக அழைத்தவளிடம், வேலைப்பளுவின் கடுப்பை ஒர்  வார்த்தையில்  தெளித்தேன். எதிர்ப்பக்கம் குரல் இறுகியது. சூடான இரு பதில்கள் அவள் அளிக்க , ஆண் வீரம் காட்ட என் முதல் பதில். கோபத்தில் நிதானி , உன் பதில்கள் வாயிலிருந்து வருபவை , ஆழமில்லா சொற்கள் ஆழமாக காயப்படுத்தும் என உள்மனதில் சின்னக்கண்ணன் சொடுக்கினான். சுதாரித்தேன் , மௌனித்தேன் .

நாற்பது நொடி மௌனம் எங்களை பலதூரம் பிரித்திழுத்து சென்றது. பின்னர் அழைப்பதாக துண்டிக்கப்பட்ட அழைப்பின் கதிர்வீச்சினில் அனல் பறந்தது. இங்கு தான்
தொழில்நுட்பத்தின் உதவி பெரிதாய் கை கொடுத்தது. நெடும் மௌனம் சில நேரம் பிளவுகளை ஏற்படுத்தலாம். சூடான விவாதம் விதண்டாவாதமாக மாறலாம். கண்ணனின் ஆசியோடு  காதலும் மோதலும் பரிவும் ஸ்மைலி களாக உள்ளடக்கிய க்ருஷ்ணாஸ்திரமாகிய வாட்ஸாப் வாதம் எய்தேன். ஆச்சர்யம் என்னவென்றால் எய்தவம்பினால் கட்டுண்டவன் நானானேன். வெவ்வேறு நாடுகளில் நடுவே இருந்த பிரிவை உடைத்து , அருகருகே எங்களை அணைத்தது.
மனம் விட்டு பேசுகையில் ஏற்படும் சுகமே அலாதியானது. பிரிவின் வலியை அவளின் ஒவ்வொரு சொல்லும்  உணர வைத்தது. தவறில்லாத போதும் தன் நிலை விவரித்தாள் என்னவள். நிலமகள் பொறுமையடி உனக்கு . இவ்வளவும் எளிதாக புரிந்து விடாது எனக்கு , ஆணாய் போய்விட்டேன்.

குரல் உயர்த்த தேவையில்லை , காட்டமான சொற்கள் காதில் விழவேண்டியதில்லை இந்த வாட்ஸாப்  வாதத்திற்கு . பொறுமை மட்டும் போதும். யோசிக்க நேரமுண்டு , பின்னர் அதனை அழகாக விவரிக்க வழிகளுண்டு இதில். அலைபேசியில் நான் குரலுயர்த்தி பேசியிருந்தாலோ , அவள் எதிர்க்குரல் அளித்தாலோ எங்களுக்குள் சங்கடங்கள் வந்திருக்கலாம் , எளிதான , நேர்த்தியான இந்த வாட்ஸாப் வாதங்கள் அது போன்றவற்றை  தவிர்க்க உதவின.அலைபேசிக்கு  கொடுத்து வைத்த நேரம்  , பன்மடங்கான என்னவள் காதல் முத்தங்களை சுமந்ததால்.    
 
#அன்பு #தாம்பத்யம் #முதல் மோதல்

Friday, August 19, 2016

கங்கையே அருள்வாயே

கங்கை ,
பாரதத்தின் ஆயுள்ரேகை
தாயே உன் கரைகளில் இரு கரங்களை நாம் கூப்பினோம் ,
புனிதமாய தெளிநீரை நாங்களும் பருகினோம் ,
கார்முகில் கண்ணனின் பேர் சொல்லி , கலங்கலான எம்மனதின் கவலைகளை தீர்ப்பாயே .!
மேலுலகு செல்ல ஏணியும் நீயே, மாந்தரின் அகவிருள் போக்குவாயே .!
அலைகளாய் துள்ளியோடும் நங்கையே ,
எம் தாய் கங்கையே .!!
அருள்வாயே ..! அருள்வாயே ..!
வணங்குகிறோம் தாயே .! வணங்குகிறோம் உனையே .!
வணங்குகிறோம் கங்கையே .! அருள்வாயே ..!
தூய்மையான உன் மடியின் நிழலில் , நிலமும் கூட சொர்கமே,
புரிந்துகொண்டோம் நுரைகள் கூட நிரம்பி வழியும் உன் காதலே ,
உடல்தனை நீ அணைக்கையில் உள் மனமும் தன் மலம் விளக்குதே,
உன் ஸ்பரிசம் நுகரும் சிறுப்புல்லும் கூட புதிய உயிராய் பிறக்குதே ,
சுமந்து வந்த பாவமெல்லாம் கரைக்கிறோம் உன் மடியிலே ,
சிரித்து நீயும் அணைத்துக்கொண்டு ஆட்கொண்டதெம்மை அன்பிலே ,
அமுதின் சுவையும் அறிந்துவிட்டோம் பருகிக் களித்த உன் நீரிலே .!
அருள்வாயே ..! அருள்வாயே ..! அருள்வாயே ..! அருள்வாயே ..!
வணங்குகிறோம் தாயே .! வணங்குகிறோம் உனையே .!
வணங்குகிறோம் கங்கையே .! அருள்வாயே ..!
கறைபடிந்த உன் கரைகள் , உன் விழி திரை நீர் நுரைகள்,
விரைகிறோம் அதை போக்க , உன் பிள்ளைகள் நாங்கள் .!
எங்கள் தாயினும் மேலான உன்னை ,கடமையது நாங்கள் காக்க,
விரைகிறோம் உன் கவலைகள் போக்க , உன் பிள்ளைகள் நாங்கள் .!
வணங்குகிறோம் கங்கையே .! வணங்குகிறோம் கங்கையே .!
வணங்குகிறோம் தாயே .! வணங்குகிறோம் உனையே .!
அருள்வாயே ..! அருள்வாயே ..!

கருமை

வெளுத்துக்கிடந்த மேகம்  மெல்ல கருக்கத் தொடங்கியது,
கருமை படர படர கண்ணீர் சுரந்தது, அந்தக் கருமை பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
மழையாய் நனைக்கிறதே .

அடர்ந்த கருமை அந்த அறையில் நிறைந்திருந்தது , 
மிகப்பெரியத் தேடலுக்கான இருப்பிடம் அது, அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு,
கடவுளாய் வழிகாட்டுகிறதே.

கருப்புச்சாயம் தறியெங்கும் ஊறியிருந்தது ,
மிகப்பெரிய புரட்சியின் தொடக்கம் அது , அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
திராவிடம் தெள்ளிய தமிழ் சமுதாயத்திற்கு வித்திட்டதே.

மரத்தின் நடுவே எழுதுகரியாய் அடைந்திருந்தது,
மாற்றத்தின் வாயில் அது,  அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
வாய்ச்சொல்லை  கை எழுத முடிந்ததே.

வெள்ளைக்குளத்தில் மிதந்துகொண்டிருந்தது,
அனைவரின் பார்வை அது ,  அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு,
விழியாய் வழி காட்டுகிறதே. 

முழக்கணக்கில் நூலாய் கருமை  திரிந்திருந்தது, 
பல கூட்டங்களின் காவலன் அது, அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
பில்லி சூனியங்களை ஓட்டியதாய் நம்பப்படுகிறதே,

பாரெங்கும் சரிபாதி சூழ்ந்திருந்தது,
ஒவ்வொருத்தரின் எதிர்ப்பார்ப்பு அது , அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
நாட்களின் முடிவை குறிக்கின்றதே.

கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
ஒதுக்கியும் ஒடுக்கியும் இருப்பதாலோ ,  கருமைக்கு பிடிக்கவில்லை இவர்களை,
தாய் மடியில் பிரிவினையாய் கிடக்கையிலே.

Wednesday, July 20, 2016

மழை, புத்தகம், தேநீர்

மழை ஒரு அலாதியான அனுபவம். மழைநேரத் தேநீர், பரவச அனுபவம். மழைநேரத்தில் ஒருகையில் தேநீர் கோப்பை மறுகையில் பிடித்த புத்தகம், பேரானந்தம். இவை மூன்றுக்குமான கனவியலை (Set theory) ஆராயலாமே என தோன்றிற்று. கணம்(Set) என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பாகும். ஒரு கணத்திலுள்ள பொருட்கள் அதன் உறுப்புகள்(Elements) எனப்படுகின்றன.
நீர்நிலைகள், இருண்ட மேகம், வெப்ப சலனம், காற்றுத்தூசி ஆகியவை மழை(A) எனும் கணம் உருவாக உதவும் உறுப்புகள். தூய்மையான தேநீர் துகள்கள், கொதிக்கும் வெந்நீர், ஏலக்காய், பால் ஆகியவை தேநீருக்கான (B) உறுப்புகளாக அமைகின்றன. பிடித்த எழுத்தாளரின் நாவல், சிறுகதை தொகுப்போ, காதல் , அரசியல் , காமம் , போராட்டம் போன்ற உணர்ச்சிகள், கற்பனை, சொல்வளம் போன்ற உறுப்புகள் சேர்ந்த ஒரு கணம் தான் புத்தகம் (C) .
மழை, தேநீர் , புத்தகம் என்பவை A ,B ,C எனும் கணங்களாக எடுத்துக்கொள்வோம். மழை நேர தேநீர் என்பது சேர்ப்பு வகை (A U B). அதே போல் தேநீர் நேரத்தில் கையில் பிடித்த புத்தகமென்பதும் ஒரு சேர்ப்பு (B U C). மழைநேரத்தில் கையில் புத்தகம் என்பது ஒரு தனி சேர்ப்பு (A U C). இவ்வகை தனி சேர்ப்புகளை ஒன்றிப்பு (Union) என கூறுகின்றனர் .
A, B கணங்களின் சேர்ப்பு கணம் என்பது A கணத்திலுள்ள உறுப்புகள், B கணத்திலுள்ள உறுப்புகள் அல்லது A மற்றும் B இரண்டுக்கும் பொதுவான உறுப்புகள் அனைத்தையும் கொண்ட கணமாகும்.
A U B = B U A.
அதே போல் தான் A, C மற்றும் B, C சேர்ப்புகளும். இவ்வகை சேர்ப்புகளுடைய பண்பை பரிமாற்றப் பண்பு (Commutativity) என்பர். இந்த தனி சேர்ப்புகள் என்றும் தரும் இன்பத்தை சிற்றின்பம் என வைத்துக்கொள்வோம்.
அதை விட ஒரு பேரானந்தம் ஒன்று உண்டு அது தான் இந்த மூன்று கணங்களின் மொத்த சேர்ப்பு.
A ∪ (B ∪ C) = (A ∪ B) ∪ C இதனை சேர்ப்புப் பண்பு(Associative Property) என கூறலாம் . இது இந்த அற்புதமான நிகழ்வின் ஒட்டுமொத்த பேரானந்தத்தை குறிக்கிறது.
பொதுவாகவே ஒரு பெரும் இன்பம் கண்டால் அதனை நாம் கொண்டாடிக் கொண்டே இருப்போம். ஆனால் அந்த இன்பத்தின் மெய்ச்சுவையான பரமானந்தம் என்பதை அவரவர் அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அது தான் A, B, C ஆகிய மூன்று கணங்களின் வெட்டு(Intersection).
A∩ (B∩C) = (A∩B) ∩ C
மழை, புத்தகம், தேநீர் மூன்றின் சேர்ப்பு என்பது சுவையான பால் போன்ற ஆனந்த அனுபவம் என வைத்துக்கொண்டால் , இவற்றின் வெட்டு திரட்டிப்பால் கொடுக்கும் பரமானந்த சுவையாகும்.
நன்றி :
மறந்த கணிதத்தை படிக்க உதவிய Jeyannathann
எல்லா விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்க வைத்த 6174 குரு Sudhakar Kasturi

Saturday, July 2, 2016

படிதாண்டா தெய்வங்கள் மட்டும் தான் சாத்தியம் , மனிதர்கள் அல்ல .!

மீண்டும் ஒரு பெண்ணுக்கோ , நம் வீட்டுப் பெண்ணுக்கோ நுங்கம்பாக்கத்தில்  நடந்தது போல  எதுவும் நடந்து விடக்கூடாதென்று அனைவரும் நினைப்பது மிகச்சரியான விஷயம் . ஆனால் ஊரான் வீட்டு உபதேசமாக தோன்றுவதெல்லாம் எல்லோரும் பதிவிடுகின்றனர் . தனியார் தொலைக்காட்சியில் மிகப்பழமையான கட்சியின் செய்தித் தொடர்பாளர் செல்பேசிகள் தான் இதற்கான காரணம் அதனால் பெண் குழந்தைகளுக்கு அதனை தவிர்க்கலாம் என்கிறார் .
மற்றோரு தேசியக்கட்சியின் பேச்சாளர் நல்ல சத்சங்களுக்கு குழந்தைகளை பெற்றோர் அனுப்பாதது தான் காரணம் என்கிறார் . யூடுயூப்பில் எவனோ ஒரு எடுப்பு பெண்கள் பலர் ஆண்களை காதல் தோல்விகளில் தள்ளுவதால் தான் ஏற்படுகிறது என பகிரங்கமாக உளறுகிறான் அதையும் பல்லாயிரம் பேர் பகிர்கிறார்கள் . கிடைத்தது வாய்ப்பு என சிறுபான்மையினர் மேல் ஒரு பழி , நமக்கு இந்த பிரிவினர் ஓட்டுகள் குறைவு என சில அரசியல் தலைவர்கள் போலி வருந்தல் என அரசியலாக்க ஒரு கூட்டம் . சினிமாவின் தாக்கம் பற்றிய விவாதம் தனியாக ஒரு பக்கம் நீண்டுக்கொன்டே செல்கிறது . காவல் துறையின் அஜாக்கிரதை , அவர்களின் நம் மீது விசாரனை என கொடுமைசெய்வர்கள் எனும் பயம் என காக்கிச்சட்டைகளை குறிவைக்கும் ஒரு கூட்டம் . இன்று அவர்கள் தான் அயராது கண்விழித்து நீதிக்கு முன் குற்றவாளியை நிறுத்தி இருக்கிறார்கள் .

பெரும்பான்மையானோர் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனும் கருத்தையே முன் வைக்கின்றனர். ஆனால் நடக்கும் தீங்குகள் எல்லாம் பெண்களுக்கு எதிரானவை , செய்வது  யார் ? சிந்திக்க வேண்டாமா ?
2011 அரசாங்க சென்சஸ் படி மொத்த ஜனத்தொகை 72,147,030. அதில் ஆறு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 32,317,699, பெண்கள் 32,405,499.
கல்வி அறிவு பெற்ற ஆண்களின் மொத்த எண்ணிக்கை 28,040,491, பெண்களின் எண்ணிக்கை 23,797,016.ஆக சுமார் 85% ஆண்களும் , 73% பெண்களும் படிப்பறிவு உள்ளவர்கள் என ஏட்டுக் கணக்கு  கூறுகிறது. ஆண்களை விட சராசரியாக பெண்கள் கல்விபெறும் சதவிகிதம் 10ஆண்டுகளில் 10% அதிகரித்துள்ளது(ஆண்கள் வெறும் 10 ஆண்டுகளில் 4% தான் ).சமுதாய மாற்றத்திற்கு ஏற்றார் போல் பெண்கள் தங்களை தயார்செய்தே வருகிறார்கள் .

மேற்கத்திய பழக்கத்தை விரும்பும் சமுதாயமாக நாம் மாறிவிட்ட போதிலும்  பெரும்பாலும் பெண்களின் மீது மட்டும் நம் பழக்கவழக்கங்களை திணிக்கப்பார்க்கிறோம் என்பது கவலைக்குரியது. முன்னேற்றத்துக்கான  பாடத்திட்டம்  , சுயஒழுக்க நெறிகள் , தற்காப்பு , சமுதாய விழிப்புணர்வு என பல வழிகளில் ஒட்டு மொத்த சமுதாயமாக நாம் பின்தங்கியே இருக்கிறோம் . 2016ல் படிதாண்டா பெண்களாக நாம் கோவிலில் தெய்வங்களை மட்டுமே காணமுடியும்.

சாதிகளுக்கு அப்பாற்பட்டு நம் வீட்டுப் பெண்களின் நலன் கருதி தமிழ் சமுதாய விழிப்புணர்வுக்காக ஆர்க்ட்டர்ஸ்(ஸ்வாதி) எனும் நட்சத்திரம் விண்ணோக்கிப்  பயணித்துள்ளது என நினைத்துக்கொள்வோம். 

Sunday, May 8, 2016

ஒரே ஒரு கேள்வி



நீங்கள் எல்லோரும் இன்னும் ஒரு வாரத்துக்கு நினைத்துக் கொண்டே இருக்கப் போகும் கேள்வி .
யாருக்கு ஒட்டுப் போடலாம் ?

கட்சியின் முதல்வர் வேட்பாளரைப் பார்த்தா ? பெரிய கட்சியா, சிறிய கட்சியா எனப் பார்த்தா ?
திராவிட கட்சியா ? தேசிய கட்சியா ? சாதிக்கட்சியா ? மொழிக்கட்சியா ?

இவை எல்லாமே உங்களை ஏமாற்றிவிடும் . இதில் எதையும் நாம் பார்த்தால் , நமக்கு,  ஒரு சராசரி வாக்காளனுக்கு நல்லதே இல்லை .

முதல்வர் வேட்பாளரை பார்த்து ஓட்டுப்போடுகிறோம்.  அவர் பதவிக்கு வந்த உடன் பதவியிழக்க நேரிட்டால் ? தேர்தலில் வெற்றிபெற்ற உடன் தன் வாரிசை முதல்வர் ஆக்கிவிட்டால் ? அவர் தன் தொகுதியில் தோற்றுவிட்டால் ? அவருடன் சேர்ந்து வெறும் தன் சாதிக்கட்சியினருக்கு மட்டும் பதவிகள் கொடுத்தால் ?  ஆம் .. இது எல்லாமே நடக்கலாம் . ஏன் ? நம் அரசியல்வாதிகள் இவை அனைத்துக்கும் உட்பட்டவர்கள் தான் .

சரி முதல்வர் வேட்பாளர் வேண்டாம் , கட்சியை பார்க்கலாம் . சர்வாதிகார தலைமைக் கட்சி  , ஊழல்குடும்பம் ஊழல் கூட்டணி என பெயர் போன கட்சி , சாதிக்கட்சி , பதவி ஆசைக்காய் ஏலம் விட்டக் கூட்டணி , மொழிப்பிரிவினையோ என அஞ்சவைக்கும் கட்சி . இப்படி தனக்கென ஒரு கரையில்லாத குறையல்லாத கட்சிகள் நமக்கென்று இல்லை .

இது தமிழன் செய்த பாவங்களின் பலன் . தமிழகம் முன்னுக்கு வந்ததின் காரணம் திராவிட கட்சிகளால் தான் , அதே போல் இன்று அவர்களின்றி முன்னோக்கி செல்ல வழியில்லாமல் அவர்களை சுற்றியே   சுழன்றுகொண்டிருப்பதும் அவர்களால் தான் . இன்றைய அரசியல் அமைப்புகள் திராவிட கட்சிகள் சாரா மாற்றம் ஏற்படுத்த வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது .

வாக்காளர்களின் நிலையை விட , தேசிய கட்சிகளின் நிலை தமிழகத்தில் பரிதாபம் . எப்படியாவது யாருடனாவது ஒட்டிக்கொள்ள வேண்டும் வாக்கு வங்கியை காத்துக்கொள்ள வேண்டும் எனவே இவர்கள் போராட்டம் ஓடுகிறது .

ஆக இந்தக் கட்சிதான் நமக்கான முன்னேற்றப் பாதையை வழிவகுக்கும் என கூறிவிடமுடியாது. அதிலும் முக்கியமாக கட்சிகளின் தேர்தல் அறிக்கையை யாரும் படித்துவிட வேண்டாம் , சிரித்தே செத்துவிடுவோம் இந்த துளியும் சாத்தியமில்லா திட்டங்களைப் பார்த்து .

கட்சியும் இல்லை , முதல்வர் வேட்பாளரும் இல்லை. பிறகு ?

ஓட்டுரிமை என்பது நமது கடமை . சந்தையில் போய் காய்கறி வாங்கும் போது கூட சற்று ஒவ்வொன்றாய் பார்த்துத் தானே வாங்குகிறோம் ?

கட்சிகளுக்கு அப்பால் , தலைமைக்கு அப்பால் ஒரு தனி நபர் தானே உங்களுடைய ஓட்டுகளுக்கு சொந்தக்காரர் ஆகப்போகிறார் . அவர் யார் என நீங்களே அலசிப்பாருங்கள் .
உங்கள் தொகுதியில் நிற்பவர்கள் யார் ? உண்மையில் அவர் நமது தொகுதியின் ஆளா ? என்ன படித்திருக்கிறார் ? என்ன வேலை செய்கிறார் ? குணம் எப்படி ? எளிதில் அணுகமுடியுமா ? இதுவரை நம் தொகுதிக்கு இவரின் செயல்கள் என்ன ?


தேடுங்கள் நண்பர்களே .. கண்டிப்பாய் ஒவ்வொரு தொகுதியுளும் ஒரு நல்லவனாவது கிடைப்பான். அவனை அவராக்குங்கள் . உங்களால் உயர்த்தப்படும் ஒருவன் கண்டிப்பாக உங்களில் ஒருவானாக இருப்பான் . ஒருவேளை உங்களுக்கு பிடித்த கட்சியில் கூட இருந்துவிடப்போகிறான் ..


அரசியல்வாதிகள் பணத்தை செலவு செய்து உங்கள் ஓட்டுகளை விலைக்கு வாங்கப் பார்க்கிறார்கள். நீங்கள் உங்களின் நேரத்தை செலவு செய்து  உங்கள் வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள் .

மே 16, தமிழகம் சிந்தித்து செயல்படட்டும் .

போக்குவரத்து சமிஞ்ஞை

சிலரை நிற்கச்சொல்கிறேன் ,
சிலரை தயாராகச் சொல்கிறேன் ,
சிலரை போகச் சொல்கிறேன்,
ஊருக்கு வழிகாட்டி ,
தெருவில் திசையறியாமல் நிற்கிறேன் .
- ட்ராபிக் சிக்னல்(போக்குவரத்து சமிஞ்ஞை)

Monday, April 18, 2016

இப்படிக்கு உன் பேரன்

சிறுகுழந்தைகளுக்கு தங்கள் தாத்தா பாட்டிகளுடன் இருப்பதே ஒருவித இன்பம் தான் . கேட்பதெல்லாம் வாங்கித்தருவது , பெற்றோரின் கண்டிப்புக்கு நம்மோடு போலியாக வருந்துவது ,  குலதெய்வ கோவில்கள் பற்றியும் உறவுக்காரர்கள் பற்றியும் புரியாத கதை சொல்லுவது, தன்னுடைய வாரிசுகளை வளர்த்த பெருமைகளை கூறுவது என இருந்திருக்கும் என நினைக்கிறன் . கிடைகாத குடுப்பனைகள் எப்படி இருக்கும் என கற்பனைத்  தான் செய்ய முடியும் .

பிறக்கும் முன்னரே என்னை கண்டுகொள்ள விரும்பாமல் போன தாய் வீட்டுப் பெரியோரும் , நான் பிறந்தபின்னே கண்டுகொள்ளாத தந்தை வழிப் பாட்டன்களுக்கும் நடுவே அந்த உறவின் வெறுமையை நான் உணர்ந்திருக்கிறேன். அத்தை மகன்களுக்கு கிடைத்த பாட்டியின் மடியும் தாத்தாவின் தோள்களும் கிடைக்காமல் போகவே அப்படியொன்று இல்லையெனவே நினைத்திருந்தேன் .

மாளிகை போன்ற வீட்டினுள் வாய்மூடிய தந்தைவழி உறவுகளுடன்  விசித்திர நாட்கள்  பல கடந்துள்ளன. முதலில் முலைப்பால் உண்டதலோ உடன் பின் பிறந்தவர்களுக்கு கோவம் என் தந்தையிடம் . மாதம் மும்மாரி பொழிந்து விடுவர் அர்ச்சித்து, பின்  அசடு வழிந்து வந்து நிற்பர் வீட்டின் தலைமகன் நீ , வீட்டு நிகழ்வை முன்னின்று நடத்தென்று. புரிந்ததில்லை இரத்தசொந்தங்களின் மனநிலையும் , விட்டுகொடுக்காமல் சென்ற என் தந்தையையும் . இன்று அவர்கள் மனக்கசப்புகள் தாண்டி எந்தலைமுறையினருடன்  நுண்ணறிபேசி
உறவுகளாக இருக்கிறோம் என்பதே சாதனை .


உன் பெற்றோர் கொடுத்ததை இன்று என் பெற்றோருக்காய் விட்டுத் தானே சென்றிருக்கிறாய் . இதைத் இப்படித்தான் கொடுத்திருக்க வேண்டுமா?  யாருக்கும் சொந்தமில்லா  பொய்ப்பொருளுக்காக , சொந்தமான  மெய்யுறவுகளை உணராமல் பிரிந்திருப்பதா. நிலையில்லா நிலமகள் செய்த நிறைவுபெறாத சதியை நீ அவளிடம் சென்று முடித்திருக்கிறாய் .

நண்பர்கள் வீட்டிலிருக்கும் பெரியோர்கள் என்னிடம் அதீத பிரியம் காட்டியதும் , நான் அவர்களுடன் மணிக்கணக்காக உரையாடியதும் உறவாடியதும் என்னையே நான் மறந்து மெய்சிலிர்த்த நிமிடங்கள். ஒரு தலைமுறையினரின் அல்பமான மண்ணுக்கும், பெண்ணுக்கும் , பொன்னுக்குமான  மனக்கசப்புகளால் என்
போன்ற அடுத்த தலைமுறையினர் அந்த உறவை இழந்து நிற்பத்தை அவர்கள் அறியவில்லை. பேசாமலிருந்தாலும் அந்த உறவுகளை அவ்வப்போது காணும் போது நம்மை மறந்து உணர்வுகள் அருகில் அழைத்தே சென்றிருக்கின்றது.  மெகா சீரியலில் பாட்டிகளுக்கு பயந்த தாத்தாக்களை பார்க்கும் போதெல்லாம் , இப்படித்தான் நம் வீட்டிலும் என கவலையில் சிரித்த நாட்கள் பல.

உறவுகள் எனும் செடிகள் பிரிவினால் வாடி, மண்ணோடு வீழும் போது வரும் உஷ்ணமான கண் நீர்த்துளிகளால்  செடிக்கும் பயனில்லை நமக்கும் பயனில்லை . ஏழுதலைமுறை சொந்தங்களோடு உறவாடவிட்டாலும் , உடன்பிறப்புகளும் தன் பெற்றோரும் உடன் இருத்தலின் அவசியம் கசப்பான அனுபவமாய் கற்கலாயிற்று.

நேரில் சொல்லமுடியவில்லை கேட்டுக்கொள்,  உன்னுடைய  அன்புக்கும் ஆசிக்கும் ஏங்காத நாட்களில்லை . உனக்கான வீட்டில் நீ உரிமையோடு விரைவில் வரப்போகிறாய் என காத்திருக்கிறேன்.


Thursday, April 14, 2016

#‎பிப்ரவரி29‬

ஐந்தாண்டுக்கு ஒரு முறை இலவசங்களில் தன்மானத்தை தொலைக்கும் நாம்,
நான்காண்டுக்கு ஒரு முறை
இலவசமாய் கிடைக்கும் ஒர் நாளையும்
தொலைத்துவிட்டோம்.

Mar 22 இன்றையதேதியும்இன்றையவரலாறும்

உண்டமயக்கதிலிருந்து தப்பிக்க இணையத்தில் செய்திகளை வாசிக்கலாம் என தொலைபேசியில் பார்த்துக்கொண்டிருக்கும் போது , ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .. பத்துக்கும் மேற்பட்டோர் ஐரோப்பாவில் குண்டு வெடித்து இறந்தனர் என செய்தி கண்முன்னே பளிச்சிட்டது .
மனம் ஒரு நொடி கணத்தே போனது . என்ன தான் கிடைக்கிறது பிறர் அழிவினில் நமக்கென்று புலம்பிக்கொண்டே இன்றைய தமிழ் நாள்காட்டியை நோக்கினேன் . ஒருநொடி வண்ணத்துப்பூச்சி வளைவோ இதென தோன்றியது .
இதே நாள் நம் பழங்காலத் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்றாக காமன் பண்டிகை இருந்துள்ளது. மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் தவம் புரியும் இடத்தை அடைந்த காமன் அவரை வணங்கினான். சிவபெருமான் மெளனமாக இருக்கக் கண்டு,அவர் மேல் தன் மாயக்கணைகளை தொடுத்தான் .. இதனால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணினால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார்[
இதைக்கண்ட மன்மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரள்கிறாள். தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டுவார்.
கோபம் தணிந்த சிவன் ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். காம தேவன் திருமணம், காம தேவன் எரிக்கப்படுவது, பின்னர் உயிர்த்தெழச் செய்யப்படுவதுதான் காமன் கூத்தில் பாடப்படும் முக்கிய நிகழ்வுகளாகும்.
இந்த நாள் தான் காமன்தகனம் என கொண்டாடப்படுகிறது .
“வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும்
பங்குனி மயக்கத்துப் பனி அரசு யாண்டுளன்” எனும் இளங்கோ அடிகளின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
யுகங்கள் தாண்டியும், கண்டங்கள் கடந்தும் ஒரே நாளில் தகனம் நடக்கின்றதோ என எனக்கும் யானைக்கும் பூனைக்கும் முடிச்சு போட்டுவிட எனக்கு மனம் தான் வரவில்லை .
உலக தண்ணீர் தினத்தினில் ,
செந்நீர் குளங்கள் அங்கே.
‪#‎இன்றையதேதியும்இன்றையவரலாறும்‬
‪#‎காமன்தகனம்‬ ‪#‎பெல்ஜிய‬ குண்டுவெடிப்பு

Tuesday, March 22, 2016

இன்றைய தேதியும் , இன்றைய வரலாறும்

உண்டமயக்கதிலிருந்து தப்பிக்க  இணையத்தில் செய்திகளை வாசிக்கலாம் என தொலைபேசியில் பார்த்துக்கொண்டிருக்கும் போது , ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .. பத்துக்கும் மேற்பட்டோர் ஐரோப்பாவில் குண்டு வெடித்து இறந்தனர் என செய்தி கண்முன்னே பளிச்சிட்டது .

மனம் ஒரு நொடி கணத்தே போனது . என்ன தான் கிடைக்கிறது பிறர் அழிவினில் நமக்கென்று புலம்பிக்கொண்டே இன்றைய தமிழ் நாள்காட்டியை நோக்கினேன் . ஒருநொடி வண்ணத்துப்பூச்சி வளைவோ இதென தோன்றியது .

இதே நாள் நம் பழங்காலத் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்றாக காமன் பண்டிகை இருந்துள்ளது. மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் தவம் புரியும் இடத்தை அடைந்த காமன் அவரை வணங்கினான். சிவபெருமான் மெளனமாக இருக்கக் கண்டு,அவர் மேல் தன் மாயக்கணைகளை தொடுத்தான் .. இதனால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணினால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார்[

இதைக்கண்ட மன்மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரள்கிறாள். தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டுவார்.

கோபம் தணிந்த சிவன் ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். காம தேவன் திருமணம், காம தேவன் எரிக்கப்படுவது, பின்னர் உயிர்த்தெழச் செய்யப்படுவதுதான் காமன் கூத்தில் பாடப்படும் முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்த நாள்  தான் காமன்தகனம் என கொண்டாடப்படுகிறது .

 “வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும்
பங்குனி மயக்கத்துப் பனி அரசு யாண்டுளன்” எனும்  இளங்கோ அடிகளின் வார்த்தைகள் நினைவுக்கு  வந்தது.

யுகங்கள் தாண்டியும், கண்டங்கள் கடந்தும் ஒரே நாளில் தகனம் நடக்கின்றதோ என யானைக்கும் பூனைக்கும் முடிச்சு போட்டுவிட எனக்கு மனம் தான் வரவில்லை .

உலக தண்ணீர் தினத்தினில் ,
செந்நீர் குளங்கள் .
#இன்றைய தேதியும் , இன்றைய வரலாறும்
#காமன்தகனம் #பெல்ஜிய குண்டுவெடிப்பு

Wednesday, March 9, 2016

சூரியக்ரஹனம்

நேற்றைய சிவராத்திரியின் ஆனந்த தாண்டவத்தில்
சடை முடிச்சவிழ்ந்து விழுந்தாலோ நிறைமதியின்று ,
பூமிக்கும் பகலவனுக்கும் நடுவில் ..!!

#சூரியக்ரஹனம்
03/09/2016

Monday, March 7, 2016

தெய்வங்கள் நீங்கள் தான்

கிருதயுகத்தில் ரேணுகாவின் கண்ணீருக்காய் இருபத்தோரு தலைமுறை க்ஷத்ரிய வம்சத்தை தலைக்கொண்ட பரசுராமனாகட்டும் , திரேதாயுகத்தில் கண்மூடித்தனமாய் தாய் சொல் கேட்டவனும்,  மிதிலைச் செல்வியின் ஆனந்தத்துக்காக மாயமானென அறிந்தே துரத்திச்சென்ற  ராமனாக இருக்கட்டும் , த்வாபரயுகத்தில் பாஞ்சாலியின் கண்ணீர்த்துடைக்கும் தேர்ப்பாகனாகட்டும், பெண்களின் அழுகுரல் தவிர்க்கவும் புன்னகை உதிர்க்கவும் நிச்சயமாய் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. பெண்களின் நிலையை  என்றுமே சனாதன தர்மம் உயர்வாக காட்டியுள்ளது. 

தேவி பாகவதம் என்றும் , தேவி சுக்தங்கள் என்றும் பெண் தெய்வங்களை ஆரிய மந்திரங்களை கொண்டு பூஜிதுள்ளோம். பெண்களை குருமார்களாகவும் நம் புரானச் சான்றுகளில் காண்கிறோம். ஆண்டாள் போன்ற  தெய்வங்களை மணந்த தமிழ் பெண்களை பற்றிய பெருமையான வரலாறுகள் இருக்கின்றன. பன்னிருவரில் ஒருவரும் , அறுபத்து மூவரில் மூவரும் என சற்றே இடஒதுக்கீடு குறைந்தாலும் பெண்களை நாம் மறந்ததில்லை.

தமிழரின் பொற்கால ஆட்சியான சோழப் பேரரசில் முடிவெடுக்கும் முக்கிய பொறுப்புகளை பெண்கள் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவியத் தலைவிகள் மேல் நம்பிக்கையில்லாதவர்கள் கூட நம் உள்ளூர் பெண் தெய்வங்களின் மேல் பயபக்தியுடன் தான் இருந்திருக்கிறார்கள் . நம் கிராமங்களில் ஊர்த் தெய்வங்கள் , இனத் தெய்வங்கள் , வீட்டுத் தெய்வங்கள் , குலத் தெய்வங்கள் , பத்தினித் தெய்வங்கள் , காவல் தெய்வங்கள் , எல்லைத் தெய்வங்கள் என பலவகையில் பெண் தெய்வங்களை நாம் கொண்டாடுகிறோம்.

ஊரின் எல்லையிலும், வாய்க்கால்கள் அருகிலும், குலக்கரைகளும் , வேப்பமரங்களும் இவர்களுக்கு உரைவிடங்களாகின்றன. ஆளுயர அய்யனாரிடம் தப்பித்தாலும் எல்லையம்மனிடமோ , முப்பிடாரியிடமோ பேச்சிழந்தும் முடமாகவும் கிடந்த நிலச்சமீன்களின் கதைகளை கிராமங்களில் கேள்விபட்டிருக்கிறோம் .
சரித்திரக் காட்சிகளில் வரும் த்ரௌபதிக்கும் கண்ணகிக்கும் கோவில்கள் வைத்துக் கொண்டாடியிருக்கிறோம்.

இன்றளவும் குடும்பத்தில் சுமங்கலியாக இறந்த பெண்களை தெய்வமாக நினைத்து பிரார்த்தனைகள் செய்கிறோம். நெடுஞ்சாலையை ஆக்கிரமித்த அம்மனுக்கும்  ஆதீனம் அமைத்து வாரிசுகள் வரைக்கும் வணங்குகிறோம். ஆனந்தமயமாய் தொண்டு நிறுவனம் நடத்தும் அம்மையாராகட்டும், ஆண்டாண்டுகளாய் ஆண்டுவரும் அம்மையாராகட்டும் ஆண்டவனென  நம்மில் லட்சக்கணக்கானோர் அழகுபடுத்திப் பார்க்கிறோம். வெளிநாட்டு அன்னைகளை நம்மை ஆட்டுவிக்க வைத்தும் கூட நீதி தேவதையின் கண்ணைக்கட்டி, பாரத்தாயுடன் பொம்மையைப் போல் அமைதியாய் இருந்திருக்கிறோம்.

எத்தனையோ வழிபடுதல் இருந்தாலும் வீட்டினில்  நம்முடன் இருக்கும் தாயிடம் துளிப் புன்னகையும் ,  சகோதரிக்குத்  தோள் கொடுத்து அரவணைப்பதும், துன்பத்தின் போது  துணைவியைக் கட்டியணைப்பதும்  தான் பெண் தெய்வ வழிபாடுகளில் சாலச்சிறந்தது.

நம் வீட்டுப் பெண்களின்  மகிழ்ச்சியில் தான் , நாம் உருவம் கொடுத்த தெய்வங்களின் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளதை நாம் கண்டிப்பாக உணரவேண்டிய தினம் .

இன்று .

உலகப் பெண்கள் தின வாழ்த்துக்கள் .

Tuesday, March 1, 2016

பொதுவா சொன்னேன்

அந்த விடியற்காலைப் பொழுது , மனதை கட்டவிழ்த்து பறக்கச் சொன்னேன் .
ஜன்னல் வழியாக வெளியே சென்று உலாத்துகையில் ஆவின் பால் பூத்தில் குல்லா போட்டு அணிவகுத்திருக்கும் கூட்டத்தை கண்டு நின்றேன். 'ஏம்பா என்னிக்கு தான் நேரத்துக்கு இவன் பால்வண்டி வரும் . உங்களோட தெனமும் ரோதனையா இருக்கு' என்று கிழங்களின் முனுமுனுப்பு . 'அய்யரே இங்க பால் வண்டி வருதோ இல்லையோ பெருமாள் கோவில்ல மணி ஆறடிச்சா இஸ்ஸ்பூன் பால் தராங்களே அப்பறோம் என்ன '  என குந்துவிட்டு அமர்ந்துகொண்டு சுருட்டை இழுத்துக்கொண்டே வம்புக்கிழுத்தான் அந்த லுங்கிக்காரன். விஸ்வரூப தரிசனம் பற்றி போலி நாத்திகர்களுக்கு என்ன தெரியும் என அமைதியாய் பல்லை கடித்துக்கொண்டார் அந்த வயோதிகர் . கோச்சுக்காத சும்மா பொதுவா சொன்னேன் என்று பால் வண்டி வந்ததும் பால்தட்டுகளை எடுத்து அடுக்க ஓடினான் .

காலை கதிரவன் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டான் , அங்கே  வேகமாக வந்த மூன்றுச் சக்கர தேருக்குள் என்னை நுழைத்துக்கொண்டேன். சீறிப்பாய்ந்து அருகில் இருப்பவர்களை ஆடியாடி உரசவைத்து முன்னம்கம்பியில் லேசாக முட்டவைத்தது அந்தப்பயணம் . 'இங்க நிறுத்துப்பா  , எவ்ளோ ஆச்சு' என்றார் அந்த நடுத்தர வயது   பெண்மணி . இருபது ரூவா மா என்றார் ஆட்டோக்காரர் . 'என்னையா கொள்ளை அடிக்கிற ? பஸ்சுல அஞ்சு ரூவா தான்'  என புலம்ப ஆரம்பித்தாள் .  ' நானா உன்னை வரச்சொன்னேன் . தெனமும் காலைல இதே பிரச்சன யாரோடயாது'என்றான் அவன்  . அதுக்கில்லப்பா மத்தவண்டியெல்லாம் பத்துரூவா தானே என இழுத்தாள் அந்தப் பெண். 'வீட்டு சந்துக்கிட்ட ஏறக்கியும் விடனும் , பஸ் டிக்கெட் விலைக்கு சவாரி வர எங்கப்பன் என்ன சேவசெய்யவா பெத்துப்போட்டான் ' அது வந்து பொதுவா சொன்னேன் என மேலும் இழுக்கையில்,அந்த பெண் நீட்டிய இருபது ரூபா நோட்டை பிடுங்கி வண்டியை செலுத்தினார் அவர்.


கசகசத்துப் போன ஆட்டோவை விட்டு , இரயிலுக்கு மாறலாம் என ஓடிச் சென்று செங்கல்பட்டு நோக்கி செல்லும் ரயில்வண்டியில் ஏறினேன். இரண்டு தொழில்நுட்ப ஜீவிகளுக்கு அருகே சென்று அமர்ந்துகொண்டேன். அவர்களுக்குள் ஏதோ தீவிரமாக பேசுகிறார்கள் . 'டேய் மார்ச் மாசம் டா . லீவ் போடாம ஆபீஸ்க்கு வந்துரு . ஏற்கனவே நீ மேனேஜர் ஓட இங்கிலீஷ் நல்ல பேசறனு அவருக்கு கோவம் . சம்பளம் ஏத்தறதுல கைய வெச்சுருவானுங்க . அதுவும் இல்லாம வெள்ளைக்காரன் உன்னப் பத்தி பெருசா புகழ்ந்து பேசினது வேற நம்ம டீம்ல எல்லாருக்கும் ஒரே பொகைச்சல். உனக்கா  இல்ல அந்த டான்ஸ் ஆடுவாளே ஒரு பொண்ணு அவளுக்கானு தான் எல்லாரும் பேசிட்டு இருக்காங்க' என்றான் ஒருவன் . 'டேய் , என்னடா இப்படிலாம் சொல்ற என்றான் இன்னொருத்தன் . மச்சி பொதுவா சொல்லணும்னா ஐடி வேலையே ஒரு நாய் பொழப்பு டா ..


வேணாம் டா சாமி என திருட்டுத்தனமாய் அடுத்த ஸ்டேஷனில் முதல் வகுப்பு சீட்டில் சென்று அமர்ந்தேன் .
அந்தப்பெட்டியிலிருந்து பெண்கள் ரயில்பெட்டி பாதியாய் பிரிக்கப்பட்டதால் , ஜொள்ளர்களுக்கு அது வசதியாக இருந்தது . இந்த கால பொண்ணுங்கள பாரேன் , துப்பட்ட போடாம எதுக்கு சுடிதார போடனும் . வலைவலையா என் டாப்ஸ் போடணும் அப்றோம் அவன் பாத்தான் இவன் பாத்தான் புகார் குடுக்கணும் ? என ஒரு முறுக்கு மீசை மைனர் அருகில் இருப்பவரிடம் வசை பாடிக்கொண்டிருந்தார். சார் உங்க பொண்ணு எப்பவும் புடவை கட்டிட்டு தான் வெளிய போறாங்களா? புடவை கட்டினா இல்ல எவனும் பாக்காம தான் இருக்காங்களா ? என்றால் அருகில் இருக்கும் கல்லூரி வயது சிறுமி . எதிர் அடியை சற்றும் எதிர்பார்க்காத அந்த மைனர் இல்லமா பொதுவா சொன்னேன் . நாடு கெட்டு கெடக்குல அதனால என நழுவி சன்னல் வழியாக காட்டன்குளத்தூர் கருவேலம்காடுகளை ரசிக்கச் சென்றுவிட்டார் .


பயணம் நெடு நேரம் ஆகிவிட்டதால் வீட்டைநோக்கி நடைக்கட்டினேன் .  தெருமுனையில் பீடாக்கடையில் பொதுவா நம்ம ஊரப் பாத்தோம்னா திமுக ,அதிமுக ரெண்டும் மோசம்ப்பா.  நல்ல கட்சியே இல்லையப்பா என்ற குரல் ஒரு ஓரத்தில் என் காதில் விழுந்தது.

வீட்டுக்கு வந்ததும் கனடாவில் இருக்கும் என் நண்பனுக்கு குறும்செய்தி அனுப்பினேன் . 'என்ன டா எப்புடி இருக்க , ஆராய்ச்சிலாம் எப்புடி போகுது ?? . நல்லா போகுது டா . ரெண்டு குட்டி மிருகம் இருக்கு அதோட கதைய முடிச்சா நம்ம பொழப்பு கொஞ்சம் செழிப்பாகும் என்றான் . 'என்னது ஜீவஹிம்சையா, சகிப்பின்மைக்கு காரணம் அப்போ மோடினு பத்திரிக்கைல வருமேடா ? எதையெல்லாம் கொல்லப்போற ?' என்றேன் .
மௌஸ் அண்ட் ராட் என்று பதிலளித்தான் . டேய் பொதுவா பாத்தா ரெண்டும் எலி தானே டா . என்ன பெரிய வித்தியாசம் என்றேன் .  டேய் நெறைய இருக்கு டா . மொதல்ல அது ரெண்டோட உடலியல் , அடுத்து மரபியல் , அடுத்து   அழுத்தம் கையாளும் திறன் இப்படி நெறைய . ஆனா நீ சொல்ற மாதிரி பொதுவா பாத்தா ரெண்டும் ஒன்னுனே வெச்சுக்கலாம் .


சரி டா . ஒவ்வொனுக்குள்ளும் பல விஷயங்கள் இருக்கு. நான் இனிமேல் பொதுவா எதையும் சொல்ல மாட்டேன் என்று விடைப் பெற்று மனசுக்குள் நினைத்துக்கொண்டேன் ' பொதுவா இந்த முனைவர் பட்டம் ஆராய்ச்சினு சுத்துரவங்களாம் இப்புடி தான் கொழப்புவாங்க '  .

Monday, February 22, 2016

என் திருமண நிச்சயமும், என்னுள் பித்தனும்

காலை ஆறு மணி இருக்கும் . சென்னை சொகுசுப் பேருந்து திருச்சி  நொ.1 டோல்கேட்டில் என்னை இறக்கி விட்டுச்சென்றது. சாலையை கடந்து முசிறி செல்லும் பேருந்துங்கள் நிற்கும் திசையில் வந்து நின்றேன் . நானும் என் சுமைகளும் கையில் இருக்க, பயணத்தின் போது என் அன்புத்தங்கை குடுத்த கவிக்கோவின் பித்தன் என்னுள் ஓடிக்கொண்டிருந்தான் .

சர்ர்சர்ர்சர்ர் என்று டிக்கெட் டெப்போவில் அழுக்கான இளநீல சொக்காய் போட்ட அரசு போக்குவரத்துத் துறை அதிகாரி பெருக்கிக் கொண்டிருந்தார் .

'சமயபுரத்துக்காரி என் பக்கம் பாருமம்மா , மனச் சலனமெல்லாம் நீயே போக்குமம்மா ' என டீக்கடையில் ஒலிப்பெருக்கி கத்திக் கொண்டிருந்தது. வாய்க்கொப்பளிக்கவில்லை , ஊருக்கு போகும் பேருந்து வந்து விட்டால் என்ன செய்வதென்று அந்த இளம்குளிர் காலைவேளைத் தேநீரை தவிர்த்துவிட்டேன் .

தன்டன டண்டன டனன டைன் என மிரட்டலான ஹார்ன் சத்தம் கேட்டு திரும்புவதற்குள் அந்த தனியார் பேருந்து வந்து நின்றது . ராக்கு முத்து ராக்கு புது ராக்கொடியை சூட்டு என எஸ்ப்பிபி தொண்டைகிழிய வாலிபக்  கவிஞரின் வரிகளுக்கு குரல் கொடுத்தது டீக்கடைக்காரனை முகம் சுழிக்க வைத்தது.

"ஆரோகணத்தில் அல்ல அவரோகணத்தில் தான் ஸ்வரங்கள் கூட்டை அடைகின்றன " இசையை அசைபோடுகிறான் பித்தன் .

  "முசிறி, தொட்டியம் நாமக்கல் சேலம்" " முசிறி, தொட்டியம் நாமக்கல் சேலம் " நடத்துனரின் கையாள் கத்திக்கொண்டிருந்தான் . அண்ணா ,'கிளியநல்லூர் நிக்குமா'. எட்டுரூவா சில்லரையா இருந்தா ஏறு . சரி எனக் கூறி கடைசி இருக்கையில் அமர்ந்தேன்.

பித்தன் கூறுகிறான் ,'புறப்படுதல் அல்ல , திரும்புதல்  தான் பயணம் . வெளியே புறப்படுதல் அல்ல, வெளியிலிருந்து புறப்படுதல் தான் பயணம் .

தனியார் ஊர்திகளுக்கே உரித்தான அந்த வேகத்துடன் உத்தமர்கோவில் பாலம் கடக்கும் போது , கரம்பனூர் கோபுரம் நோக்கி கை கூப்பினேன் . மும்மூர்த்திகளும் முகம் திருப்பி வேறு திசைநோக்கி இருந்தனர் .

பதினைந்து நிமிடத்தில் அந்த 15 கிலோமீட்டர் கடந்து என்னை குப்பையை போல் வெளியே தூக்கிப்போட்டு நொடிப்பொழுதில் பறந்துசென்றது  பேருந்து .

நெஞ்சுக்குள்ளே இன்னாரெண்டு சொன்னா புரியுமா என்ற குரல் காற்றோடு கலந்து காத்தையனின் குளம்பிக்கடையில்  கீதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது .

'யாரு அன்னூரணியம்மா பேரனா யா . வா உங்க வீட்டுல கல்யாண விசேஷம்னு  சொன்னாக .

என்னுள் பித்தனோ  - 'தொட்டிலிலிருந்து புறப்படுகிறவன் பாடையை அடைகிறான் .நீங்கள் பாடையில் இருந்து புறப்படுங்கள் .  '

டேய் காளை . காளை . அக்ரஹாரத்துல ஆறாம் வீட்டு பின்னாடி போய் தம்பிக்கு சவரம் பண்ணி விட்டு வாயா ' என்று மூக்காயி கெழவி  அந்த பிடாரி கோவில் திட்டிலிருந்தபடி கத்தினாள் .

இந்த பிடாரி அம்மன் எங்கள் ஊர்க்காவல் தெய்வம் , மிகவும் சக்தி வாய்ந்தவள். எங்கள் கிராமதுக்கும் , திருச்சி-நாமக்கல் மாநில நெடுஞ்சாலைக்கும் குறுக்கே இவள் குடி இருக்கிறாள் . இரட்டை வழிச்சாலை இவள் வீட்டினை சுற்றித்தான் செல்லும். பல வருடம் முன்பு ஒரு முறை சாலை விரிவாக்கம் செய்ய வந்த அதிகாரி,' நடுரோட்டுல என்ன குதுர பொம்மையும் அம்மன் கோவிலுமென்று' இடிக்கச் சொல்ல, வண்டியை விட்டு அவன் வீட்டுக்கு வெறும் சவமாக சென்றதகாவும் செய்திகள் ஊருக்குள் உலாவியதை நினைத்துக்கொண்டேன்.

'உங்கள் பயணம் சப்தத்திலிருந்து மௌனத்திற்குச் செல்லும் இசையைப் போல் இருக்கட்டும் ' எனும் பித்தனின் புலம்பல் என் செவிகளில் .

எதிரே காளை ,'போயிட்டுருங்க தம்பி , பத்து நிமிஷத்துல கொல்லைக்கு வந்துடறேன் பொட்டியோட' என்று கோவிலின் பின் புறம் சென்றான் . என் தாத்தா காலத்தில்  ஊருக்குள் முடிதிருத்த குஞ்சப்பன் தான் வருவார் . அவர் இறந்தபிறகு அவரின் மகன் காளை குடும்பத்தொழிலை செய்து வருகிறான். எல்லோர் வீட்டுக் கொல்லைகளும் சவரகிடங்காகும் எங்கள் ஊரினில் .    

சாலையைக்  கடந்து தோப்புவழியாக ஆக்ராஹரத்துக்கு சென்றுகொண்டிருந்தேன் . இடக்கை பக்கம் பார்த்தால் தென்னை கூட்டுக் குடும்பமாக கால் மையிலுக்கு அப்பால் தெரியும் கோவில் வரை வளர்ந்திருந்தது . பாதி தூரத்தில் தான் கவனித்தேன் , தலைக்கவசம் அணியும் இந்த கால இளைஞர்களின் உச்சந்தலை வழுக்கையை போல் எங்கள் தோப்பு மட்டும் வழுமுண்டிருந்தது . கண்டிப்பாய் கடந்த மூன்று மாதத்தில் வீட்டுப் பெருசின் கைச்செலவுக்கு அது பலியாகிருப்பதை உணர்ந்தேன் .

 பித்தன் சிரித்துக்கொண்டே 'நீங்கள் உங்களை பொறுக்க வேண்டியிருக்க , நீங்கள் தேங்காயை பொறுக்கிக் கொண்டிருக்கிறீர்கள் ' என்றான் .

எங்கள் ஊரு மூன்றாக கூறு போடப்பட்டிருக்கும் . மேற்கே வரதராஜ பெருமாள் கோவில் தொடங்கி பள்ளிக்கூடம் வரை அக்ரஹரம் , அங்கிருந்து அடுத்த ஐம்பது வீடுகள் குடித்தெருவும் கடைசியில் பள்ளத்தெருவும் இருக்கின்றது . சுதந்திர இந்தியாவுக்கு முன் வகுக்கப்பட்டவை இவை . ஆனால் இன்றைய நாளில் அனைவரும் ஒன்றாகவே பழகுகின்றனர்.

''எங்கே இருக்கிறது நிகழ்காலம் ? இருக்கிறேன் என்று  போதே ஒவ்வோர் எழுத்தையும் இறந்தகாலம் விழுங்கிக்கொண்டிருப்பதை பார். காலம் என்பதே ஒரு போலிக்கணக்கு. அதில் நிகழ்காலம் ஒரு போலித் தொகை  '' பித்தனின் காலங்கள் இது .

வீட்டின் வாசலில் வாழைத்தார் கட்டிகொண்டிருந்த எங்கள் குத்தகையாளன் மனோகர் பல்லெல்லாம் வாயாக என்னை வரவேற்றான் .

வீட்டுத் திண்ணையில் காலணிகளை கழற்றி , அருகிலிருந்த காவரி குழாயில் கைகால்களை கழுவி வீட்டினுள் நுழைந்தேன்.

புன்னகைத்தபடி உறவுகள் போலிச்சித்திரங்களெனப் பித்தன் கூற.  அவனிடமே அவன் கருத்தை கூறினேன் , 'உங்கள் விருப்பும் வெறுப்பும் நீதிபதிகளாக இருக்கின்றன .  அதுவே சந்தர்ப்பமும் சாட்சியங்களாய் இருக்கின்றன. காலம்  மாறும் போது உங்கள் தீர்ப்பும் மாறிவிடுகிறது . அந்த விதிகளுக்கு இசைந்து நடப்பவன் பத்திரமாக இருக்கிறான் மீறுகிறவன் விபத்துக்கு  உள்ளாகிறான் "

- (தொடரும்)

Thursday, February 4, 2016

கருடா கருடா பூப்போடு

உச்சி வெயில் மண்டையை பிளந்துகொண்டிருக்கையில் திடீரென சாலையில் ஒவ்வொருத்தரும் மேலே பார்த்துப் பார்த்து  சென்றனர் . என்ன தான் இருக்கென மாத்யாநிக சூர்யமுத்ரையிலே பார்த்தேன் . வட்டமடித்து கொண்டிருந்தான் கருடன்.

கொளுத்தும் வெயிலிலே  பெருமாளை எங்கோ  இறக்கிவிட்டு வந்து வட்டமடிக்கிறான் பார் என கேலிபேசும் குரல் ஓர் ஓரமாய் என் செவிகளில் உரசியது . யார் இந்த கருடன்  ? இது கழுகா  ? யார் இந்த நித்யசூரி ?

இலங்கையில் கட்டுண்ட அவதார புருஷர்களின் காவலனா? குளத்தினில் கடியுண்ட  வேழத்திணை காப்பாற்றிய மூலப்பெரும்பொருள் சாரதியா ? கிரேக்க-ரோமானிய வரலாற்று அஃகிலாவா ?

எதுவும் இல்லை அதும் வெறும் செம்பருந்து . ரக்கைகளுக்கு தங்கமுலாம் பூசி, மனிதமுகம் கொடுத்து , முதுகினில் கடவுளை ஏற்றிய ஆரியர்கள் கலைநயத்தின் வெளிப்பாடு என யாருடைய உளறல் சத்தமோ  இப்போது கேட்கிறது .

கண்டிப்பாய் இல்லை . கருட மந்திரம் சொல்லும்  ஸ்வர்ணபட்சியாய் இருந்திருக்கலாம் . அதானால் தானோ என்னவோ டோடோக்களை போல் , இமாலய காடைகளைப் போல் இன்று அழிந்தேபோயின . ஒரு விதத்தில் நல்லது தான் , அப்படி அவை இருந்தால் செயற்கையாய்  இனசேர்க்கையில் கவரிங் ரக்கைகளுடன் கருடன் ப்ராய்லர்களில் தொங்கிக்கொண்டிருக்கும் .

வெறும் ஆரியக் கட்டுகதைகளாய் இருப்பின் எப்படி சாவகமும், கடாரமும் இதன் வரலாறு கூறுகின்றன. முதலில் கடல் கடந்து படையெடுத்து போனதும்,வென்றதும்  நம் திராவிட மன்னர்கள் ஆயிற்றே.

அடிச்சு விடுறதுல ஆரியன அடிச்சுக்க முடியுமா என ஒரு குரல் வேறொரு மூலையில் .

கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஒரு வகைக் கிழங்கு.  கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும். அதனால் தான் இது ஆகாச கருடன் கிழங்கு.

நம்ம ஊர் சித்தர்கள் ஏன் தேடிப்பிடிச்சு கருடன் பேரை வெச்சாங்களோ தெரியல ?

சாவகத்து மன்னன் எர்லங்கன் காலச் சிற்பங்களில் விஷ்ணுவை சுமக்கும் கருடனை காணமுடிகிறது . இந்தப் பறவைக்கு என்ன கொழுப்பிருந்தால் மங்கோலியத்  தலைநகர்வரை பறந்து போய் சின்னமாக அமர்ந்திருக்கும் அறிவு , வீரம், விசுவாசம் மற்றும் நல்லொழுக்கத்தின் அடையாளமாக இந்தோனேசியா, தாய்லாந்து கருடனை தங்கள் நாட்டின் சின்னமாக அறிவித்துள்ளது.

புத்தம் பேசும் மகாசமயசுதத்தில் அழகிய சிறகுகள் கொண்ட சுபர்ணனுக்கும் நாகங்களுக்கும் சமாதனம் பேசும் காட்சிகள் இருக்கின்றன.வினதைச்  சிறுவன் பாவம் நாம் தான் கண்டுகொள்ளவில்லை .

அதெல்லாம் சரி , மொழுமொழுன்னு வழிச்சு சவரம் செஞ்சி மந்திரம் சொல்றவங்களோட  சாமிய என் மீசைக்கார கருடன் தூக்குறான் ? என்ற குரலுக்கு ஒரு பதில் குரல், 'அடப்பாவி , பின்னால பார்த்தாவ நீ பாக்கலியா முறுக்குமீசையோட !  நீ எங்க பாக்க போற உனக்கு தெரிஞ்ச ஒரே மந்திரம் 'கருடா கருடா பூப் போடு' .உனக்கெல்லாம் கருடபுராணம் படி அசிபத்ரம் தான் போ '.

நாளைக்கு காளை சாணம் போடும் போது மீண்டும் யோசிக்கலாம் என வீடு வந்து சேர்ந்தேன் .

Wednesday, February 3, 2016

கண்களால் கைது செய் ..


வேகமாக ஓடிச் சென்று ஒருவழியாக இரயில்  இருக்கையில் அமர்ந்தேன்.  எதிரில் அந்த இளைஞனின் பார்வையில் ஏதோ தவறு இருந்தது.


பல நூறு வருடங்களுக்கு முன்னர் .திண்ணனார் எனும் ஒரு சிவபக்தரின் மேன்மையை பார் அறியவைக்க, அவர்  வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் பெருமான். அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார். அவர் கண்ணப்பநாயனார் என போற்றப்பட வேண்டி  கண்களால் திருவிளையாடல் நிறைவேற்றினார் ஈசன் .

அது போன்றே இராமானுசரின் காலத்தினில் சைவ வைணவ போர் தமிழ் தேசமெங்கும் பரவலாக இருந்த சமயம், இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது . ராமாநுஜரின் ஞானம், வைராக்யம், அநுஷ்டானம், செல்வாக்கு ஆகியவற்றை பொறுக்காத சோழ மன்னன் ஒருவன் ‘சிவன் தான் பரதெய்வம். சிவனுக்கு மிஞ்சிய உயர்ந்த தெய்வம் கிடையாது என்ற நிலையை வைஷ்ணவர்கள் அனை வரும் ஏற்க வேண்டும்” என்று கட்டளையிட்டான். வைஷ்ணவர்களின் தலைவராக கருதப்பட்ட ராமாநுஜர் சோழன் அரசவைக்கு வந்து அரசனின் கட்டளைக்கு ஆட்படவேண்டும். இப்படி ஒரு இக்கட்டான நிலையிலிருந்து ராமாநுஜர் மீளவேண்டும் என்ற நோக்கத் தோடு கூரத்தாழ்வான், பெரிய நம்பி சகிதம் ராமாநுஜர் போல் துறவி வேடம் பூண்டு சோழன் அரசவைக்கு சென்றார். சிவனை விட துரோணம் என்ற அளவு பெரியது என்று கூறி அரசனின் சீற்றத்திற்கு ஆளாக கூரத்தாழ்வாரின் கண்கள் பறிக்கப்பட்டன.

ஆண்டவனுக்காக கண்களை அர்ப்பணித்தவர்களும் , தன் குருவுக்காகவும் சமய பரிபாலனம் செய்யவும் கண்கள் இழந்த வரலாறுகள் காண்கிறோம் .

   கோணன் மாமதி சூடியோர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே

சிவபெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கண்டு தொழுதபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? என தேவாரத்திருமுறையும்

கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே..

என ஆழ்வார் அரங்கனின் அழகினை தவிர வேறொன்று காணவேண்டா என கூறியதும் நினைவுக்கு வந்தது.

இவையெல்லாம் கண்டிப்பாய் நம் இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் . நம் சினிமாக் கவிஞர்களின் வார்த்தைகளை நம்பி நீர்வீழ்ச்சி தேடும் முலைக்குவடுகளிலிருந்து அந்த வெறித்து பார்த்த கண்களை பிடுங்கினாலும் தவறில்லை.

#இரயில்பாடங்கள்


Friday, January 22, 2016

வெற்றி

ஒளி மங்கிக்கொண்டிருக்கும் ஒரு மாலைப் பொழுது.. படபடப்பான நிலையில் அங்குமிங்கும் அலையும் வெண்ணிற தேவதைகள். கந்தல் ஆடைகளும் கலங்கிய கண்களுடன் அறை வாசலில்  சிலர், நன்றிகளை உதிர்த்து சிரித்து கொண்டு சிலர் . சற்றே புதியதாய் இருந்தது அனுபவம் . மனதினுள் ஒரு எதிர்பாரா பதற்றம். இதை செய்வதற்கும் கண்டிப்பாய் தைரியம் வேண்டும் என தன்னை தயார் படுத்திக்கொண்டான் .

எல்லாவற்றையும்  கண்டும் காணாததுமாய் வேகமாய் உள்ளே நுழைந்தான் அந்த இளைஞன் . நேராக வரவேற்பு மேசையில் சிடுசிடுவென புன்னைகைத்து, கூட்டத்தை ஏதோ பதில் கூறி அனுப்பிகொண்டிருந்த அந்த பெண்னிடம், தான் தேடி  வந்த  அறைக்கு வழிகேட்டன் அவன் .

சற்றும் எதிர்பார்த்திராத விதமாய் அவள் புன்னகைத்து நெளிவு சுளிவான வழியை கூறினால் . நன்றியுடன் அங்கிருந்து விலகி தான் கேட்டறிந்த அறைக்கு வந்துசேர்ந்தான் . காலணிகளை வெளியே கழற்றி , நீர் சற்று அருந்திவிட்டு நாற்காலியில் அமர்ந்தான். 

அவனை நோக்கி அவள் வந்தாள் . கைகளை நீட்டச்  சொல்லி , ஏதோ  செய்தாள். குண்டூசி அளவு குருதி வெளியேறியது போல் அவனுக்கு தோன்றியது . அவன் இருந்த மன நிலையில் அதை அவன் உணரவில்லை   அவன் தலையில் கை வைத்து , 'முதல் தடவையா . பதட்ட படாத . எல்லாம் ஒரு 15 நிமிஷம் தான், இங்கயே உக்காரு வந்துறேன்  ' எனக் கூறி சென்றாள் .

மீண்டும் சற்று நேரத்தில் வந்த அந்தப்பெண் , 'இங்க வா' என அவன் கையை பிடித்து அழைத்துச்சென்றாள் .
'இந்த பெட்ல படு . ரிலாக்ஸ் ஆகு ' , ஒன்னும் இல்ல இதலாம். முன்னாடி தான் எல்லாரும் பயப்படுவாங்க . இப்போலாம் ரொம்ப சகஜம் . எனக்கு தெரிஞ்ச நெறைய பேர்  டான்னு வராங்க . நீயும் அடுத்த தடவ ஓடி வருவா பாரு . பேசிக்கொண்டே மெல்ல முழுக்கை சட்டையின் கைகைளை மேலே ஏற்றிவிட்டாள் . 

தனக்கு  தெரிந்த கடவுள்கள் எல்லாரும் அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர்.
டப் டப் டப் டப் .
அவள் சொன்னது போல் சரியாக பதினைந்து நிமிடத்திற்கு மேல் அங்கு வேலை இல்லை . மிகவும் நேர்த்தியாக செய்தவிட்டால்  அந்தப் பெண் . இனிமேல் எனக்கு பயமில்லை , தைரியமாக வருவேன் என கொடுக்கப்பட்ட பழரசத்தை குடித்துக்கொண்டே முடிவு செய்தான்.

மனதில் பெரிய சாதனை செய்து விட்டது போல் தோன்றியது

அருகில்  குளிரூட்டப்பட்ட அந்த மருத்துவ அறையில் ஒரு குரல்,'அம்மா வேணாம் மா , ஊசி குத்ரங்க மா உடம்புல பூரா, வலிக்குது ,  . கவலை படாத டா கண்ணா , எல்லாம் சீக்கரமா சரி ஆகிடும் , நான் டாக்டர் கிட்ட சொல்லிட்டேன் ' , அங்க பாரு ,அந்த  மாமா  இருக்கார் பாரு , அவர் தான் உனக்கு ஹெல்ப் பண்ணினவரு என்று அவனை கைக் காட்டி கூறிக்கொண்டிருந்தார் .

முதல் ரத்ததானம் .
வெற்றி ,
மனிதத்தின் வெற்றி